வண்டி சேலத்தை தாண்டி சிறிது தூரம் வந்திருந்தது. நன்றாக விடிந்து விட்டதால் நான் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். திடீரென "டமால்(Ka-Boom)" என ஒரு பெரிய சத்தம். எந்த பிரச்சனைக்கும் நான் கடவுளையெல்லாம் தொந்தரவு செய்ததில்லை. இருப்பினும் என்னையறியாமல் "கடவுளே, சத்தம் இந்த பஸ்ஸிலிருந்து வந்திருக்க கூடாது!" என்று வேண்டிக்கொண்டேன். முழுவதுமாக நினைத்து முடிப்பதற்குள் பஸ் ஒரு நிறுத்தத்துக்கு வந்தது. அந்த நேரத்தில் மட்டும் இந்த கடவுள் என் கையில் கிடைத்திருந்தால் கைமா பண்ணியிருப்பேன் ஒரு மனிதனுக்கு இத்தனை சோதனையா??

டிரைவர் இறங்கி வருவதற்குள் நான் குதித்து இறங்கினேன். இப்போது வண்டியை ஓட்டுவது வேறு டிரைவர், கூட அமர்ந்திருப்பது வேறு கிளீனர். பழையவர்கள், ஒரு வேளை சேலத்தில் ரயில் தண்டவாலத்தில் தலையைக்குடுத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. முன்பக்க இடது டையர் முழுவதுமாக உயிரை விட்டிருந்தது!!! டிரைவர் துடிப்பாக அங்கும் இங்கும் எதை எதையோ தேடி ஓடிக்கொண்டிருந்தார். பின்பு தலையில் கையை வைத்து நின்றுவிட்டார். எனக்கு தலை சுற்றியது. என்னய்யா ஸ்டெப்னி இல்லையா என்றேன். ஸ்டெப்னி இருக்கு ஸார் ஆனா ஜாக்கிதான் இல்லை என்றார்.





மயக்கம் போட்டு விழுந்து விடக்கூடாது என்பதற்காக திறந்திருந்த கதவை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்!!! சரி இப்ப என்ன செய்யலாம் என்று கேட்டேன். ஏதாவது ஒரு லாரியை நிறுத்தி ஜாக்கியை வாங்கலாம் சார் என்றார் டிரைவர். அனைத்து லாரி டிரைவர்களுக்கும் பர்வீன் மீது கெட்ட காண்டு என்று நினைக்கிறேன். எங்களை பார்த்தவுடன் ஒதுங்கிக்கூட போகாமல் உரசிக்கொண்டு போனார்கள். எனக்கென்னவோ அடுத்து வரும் லாரியை நிறுத்த முயன்றால் நிச்சயம் நசுக்கிவிடுவான் என்று தான் தோன்றியது. பஸ்ஸில் இன்னும் சில பயணிகள் கடும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். "இந்த ரணகளத்திலும் குதுகலமாய்" இருக்கும் அவர்கள் மீது பொறாமையாக இருந்தது. எங்களோடு இன்னும் சில பயணிகள் சேர்ந்துவிட்டனர். எங்களது பாவப்பட்ட முகங்களை பார்த்து ஒரு லாரி டிரைவர் வண்டியை நிறுத்தி ஜாக்கி கொடுத்து உதவினார். ஜாக்கியை எடுத்துக்கொண்டு கிளீனர் பஸ்ஸுக்கடியில் சென்றார். நான் மொபைலை எடுத்து பர்வீன் ஆபீசுடன் தொடர்புகொள்ள முயன்றேன்.



மொபைலில் ஒரு 15 நிமிட வாக்குவாதத்துக்கு பின் பர்வின் ஆபீஸிலிருந்து வேறு பஸ் அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். எப்படியும் பஸ் ரெடியாகிவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க ஆரம்பித்தோம். ஒரு மணி நேரம் ஆனது எந்த முன்னேற்றமும் இல்லை. நான் குனிந்து பஸ்ஸுக்கடியில் இருந்த கிளீனரிடம் என்ன ஆச்சு என்று கேட்டேன். பஸ்ஸின் அடிப்பாகம் மிகவும் தாழ்வாக இருந்ததால் ஜாக்கியை ஃபிட் பண்ண முடியவிலை என்றார்!!!! இதை கண்டு பிடிக்க ஒன்னேகால் மணிநேரம்!! இதற்குமேல் அங்கே நின்றால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. நானும் என் தங்கையும் நாமக்கல் நோக்கி செல்லும் பஸ்களை நிறுத்திப்பார்த்தோம்... ஊஹூம் யாரும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனக்கென்னவோ பர்வீன் பஸ் பக்கத்தில் நிற்பதால்தான் இந்த பிரச்சனை என்று தோன்றியது. சற்று தூரம் நடந்து சென்று பிறகு பஸ்ஸை நிறுத்த முயற்சித்தோம், சரியாக யூகித்தீர்கள் பஸ் எங்களை ஏற்றிக்கொண்டது. நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் நடுரோட்டில் 9,00 மணி பர்வீன் பயணிகள் யாருமில்லாமல் அம்போ என நின்றிருந்தது! இந்த உலகத்தில் நாம் மட்டுமே பாவப்பட்ட ஜென்மம் இல்லை என்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் வண்டிகள் அனைத்தும் கூட்டமாக இருந்ததால். ஒரு கூட்டமில்லாத வண்டியை பார்த்து ஏறினோம். அந்த வண்டி மெயின் ரோட்டிலிருந்து விலகி செம்மன் காடு, வயல் வெளி, எல்லாம் சுற்றிக்கொண்டு சுமார் 2 மணி நேரம் 15 நிமிடம் கழித்து திண்டுக்கல் வந்தது. அடுத்து நான் எந்த புதிய அனுபவத்திற்கும் தயாராக இல்லை, அதனால் திண்டுக்கல்லில் இருந்து சோலைமலை பஸ்ஸில் செல்ல தீர்மானித்தேன். வண்டி கிளம்ப 45 நிமிடம் ஆகும் என்றார்கள், இருந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஜூஸை குடித்துவிட்டு காத்திருந்து ஏறினோம். ஒரு வழியாக 18 மணி நேர பயணத்துக்குப்பின் மதுரை வந்து சேர்ந்தோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!! லக்கி லுக் பாணியில் சொல்ல வேண்டுமானால் "மதுரை வந்து சேர்வதற்குள் தாவுதீர்ந்து டவுசர் கிழிந்து விட்டது!"

இது பர்வீனில் எனக்கு முதல் அனுபவமல்ல, இந்த பயணத்துக்கு சில மாதம் முன்பு நானும் என் நண்பனும் பர்வீனில் சென்றோம். நான் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன். சேலம் பேருந்து நிலையத்தை தான்டும் போது திடீரென எனக்கு மேலிருந்து தீப்பொறிகள் கொட்டின! அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் படார் என்ற சத்தத்துடன் தீப்பற்றிக்கொண்டது. எனக்கு பயங்கர குழப்பம்! பிறகு தான் தெரிந்தது பர்வீனில் ஏற்றியிருந்த goods மிகவும் அதிகமாக இருந்ததால் ஒன்றன் மேல் ஒன்றாக உயரமாக அடுக்கியிருந்தனர். அது மேலே சென்று கொண்டிருந்த மின்சார கம்பிகளோடு விளையான்டு இந்த வானவேடிக்கை காட்டியுள்ளது. சில வினாடிகள் வண்டி நின்றது, "சுனா, பானா உனக்கு ஒன்னும் இல்லை போயிக்கிட்டே இரு..." என்று என் நண்பன் முனுமுனுக்கவும் வண்டிகிளம்பவும் சரியாக இருந்தது. சிறிது தூரம் சென்ற பிறகு வண்டி ஒரு இடத்தில் நின்றிருந்தது, இறங்கிப்பார்த்த போது நான்கு பக்க டயர்களிளும் காற்று மிகக்குறைவாக இருந்தது. எனக்கோ ஒரே ஆச்சர்யம் எப்படி ஒரு வண்டியில் ஒரே நேரத்தில் இத்தனை டையர்கள் பஞ்சர் ஆகும். பிறகு கிளீனர் சொன்னார் வண்டியின் உயரத்தை குறைப்பதற்காக காற்றை கழட்டிவிட்டார்களாம்!!!!!! இதில் இன்னொரு அதிசயம் என்ன வென்றால் அந்த பஸ் குறைந்த காற்றோடு மதுரை வந்து சேர்ந்து விட்டது (3 மணி நேரம் தாமதமாக)!!

9 மறுமொழிகள்:

TBCD said...

இந்த தொல்லைப் போதுமா, இன்னும் கொஞ்சம் வேனுமா தான் அவங்களோட தாரக மந்திரமாம்..

பர்வீன் முன்னாடி நல்லா ஓடிக்கிட்டு இருந்தது..சென்னைக்கும் மதுரைக்கும் ரொம்ப புகழ் பெற்ற வண்டியாகவும் இருந்தது..

ஏன்..இப்போ தரம் தாழ்ந்தூப் போச்சு..

கதிர் said...

உங்கள் பயணத்தையும், அதில் கிடைத்த அனுபவங்களையும், பகிர்ந்தது அருமை.

கதிர்.

Divya said...

பயணக்கட்டுரை 3 பகுதியையும் ஒன்றாக படித்து முடித்தேன்[ ஒரு வழியாக!]
நல்ல flow of writing,

பயணம் சென்ற அனுபவம் தந்தது உங்கள் எழுத்து நடை!

மற்ற பதிவுகளையும் படிச்சுட்டு பின்னூட்டத்தில் கருத்து சொல்றேன்!!

கருப்பன் (A) Sundar said...

//
பர்வீன் முன்னாடி நல்லா ஓடிக்கிட்டு இருந்தது..சென்னைக்கும் மதுரைக்கும் ரொம்ப புகழ் பெற்ற வண்டியாகவும் இருந்தது..
//
ஒரு வேளை கி.மு-வுல இருக்குமோ?? 2001ம் ஆண்டிலிருந்து நான் பர்வீன் டிராவல்ஸ் பயன்படுத்தியுள்ளேன் ஆனால் ஒவ்வொறு பயணத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனையிருக்கும். ஆனால் இதுதான் எல்லாவற்றிலும் பீக்!!

TBCD, கதிர், திவ்யா தங்கள் வருகைக்கு நன்றி!

களப்பிரர் - jp said...

சூப்பரப்பு.... ரெம்ப நல்ல எழுதி இருக்க...!! ரிட்டர்ன் ஜர்னி எக்ஸ்பீரியன்சும் சொன்னீங்கனா நல்ல இருக்கும்...

கருப்பன் (A) Sundar said...

//
சூப்பரப்பு.... ரெம்ப நல்ல எழுதி இருக்க...!!
//
தங்களை போன்ற தமிழ் வித்துவான் கிட்ட இருந்து இந்த பாராட்டு கேக்கவே நல்லா இருக்கு!! நன்றி...


//
ரிட்டர்ன் ஜர்னி எக்ஸ்பீரியன்சும் சொன்னீங்கனா நல்ல இருக்கும்...
//
ரிட்டர்ன், ரயிலை பிக்கப் பண்ணிட்டம்ல..!! ரிட்டனும் பர்வீனில் வந்திருந்தா இந்நேரம் உசிரோட ஒக்காந்து இந்த பின்னூட்டதை எழுக்கிட்டிருந்திருப்பானா.. என்பது சந்தேகம் தான்! :-(

களப்பிரர் - jp said...

இந்த மாதிரி நல்ல நகைச்சுவை பதிவ படிக்கிறதுக்காக உங்கள வார வாரம் பர்வீன் ல அனுப்பலாம் ....

பாச மலர் / Paasa Malar said...

டிபிசிடி சொல்ற மாதிரிதான் இருந்துச்சு முன்னால்..சமீபத்தில் அதில் போனதில்ல நல்ல வேளையா..

நல்லா எழுதிருக்கீங்க..

முத்துகுமரன் said...

நான் மதுரையிலிருந்து போக பயன்படுத்தியது எல்லாம் லக்கி டிராவல்ஸ். குறைவான வசதி நிறைவான பயணம். :-)