நான் ஜூலையில் எழுதிய பதிவை புதிய பதிவைப்போலவும், இன்று எழுதிய பதிவை முந்தைய பதிவுகளைப்போலவும் காட்டுகின்றது. மேலும் என்னால் பதிவுகளை வகைப்படுத்து முடியவில்லை!!!! இது தமிழ்மணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையா இல்லை தமிழ்மணம் செயல்படுத்தியிருக்கும் புதிய featureஆ?? தமிழ்மணம் Beta நிச்சயம் முந்தய தமிழ்மணம் போல இல்லை.

முத்துக்குமரனின் பழைய பதிவாக நடிகர் M.N நம்பியார் மரணம் என்று தமிழ்மணம் காட்டியது. என்னது நம்பியார் இறந்துவிட்டாரா?? அதுவும் நேற்று... இது எப்படி எனக்கு தெரியாமல் போனது என்ற குழப்பத்துடன். thatstamil சென்று பார்ததேன்... அந்த சோக சம்பவம் நடந்தது இன்றுதான் என்று தெரிந்தது. நம்பியார் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது நடிப்பு திறன் பற்றி மக்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. நிச்சயம் அவரது இழப்பு திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். மறைந்த திரு. நம்பியார் அவர்களுக்கு எனது அஞ்சலிகள்!

தமிழர் என்ற வலைப்பதிவில் இந்த பதிவை படிக்க நேர்ந்தது. பதிவரின் தினமலர் மீதான ஆதங்கம் நல்லவிஷயம்தான் என்றாலும் அவர் ஒப்பீடு செய்துள்ள விஷயத்தை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பதிவில் சொல்லியிருப்பதன் கரு... "உலகத்தின் மிகப்பெரிய திருவிழாவான ரஜினியின் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார், இப்பேர்பட்ட அளப்பரிய தியாகத்தை கண்டு தினமலர் போன்ற பத்திரிக்கைகள் திருந்துங்கள்!"

தினமலர் திருந்த வேண்டும் என்ற சீரியஸான விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை ரஜினியின் வேண்டுகோள் என்ற காமடியோடு ஒப்பிட்டு, சொல்லவந்த மேட்டரையும் மிகப்பெரிய காமடி ஆக்கிவிட்டார் பதிவர்.

தினமலர், ரஜினி இருவரையும் பற்றி சிறிது அலசுவோம். First and foremost இருவரது பிழைப்பும் விளம்பரத்தை நம்பித்தான். இருவருக்கும் வருமானம் விளம்பரங்களால்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தினமலரின் விளம்பரம் பற்றி மக்கள் நன்கு அறிவார்கள், ரஜியின் விளம்பரம் அந்தந்த சீசனுக்கு ஏற்றது...

1. காவேரி பிரச்சனை சீசன் - உண்ணாவிரதம்
2. ஒகேனேகல் பிரச்சனை சீசன் - கன்னடர்களை எதிர்த்து கொலைவெறி பஞ்ச் டயலாக்குகள்
3. குசேலன் படம் ரிலீஸ் சீசன் - மண்ணிப்பு கடிதம், விளக்கம் etc.. (போட்ட வேஷம் கலைஞ்சிடுச்சு டும்... டும்... டும்... டும்...)
4. ஈழத்தமிழர் பிரச்சனை வலுத்திருக்கும் சீசன் - உண்ணாவிரதம், பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து இன்னபிற இத்தியாதிகள்...

* விஜய்க்கு, டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட போது விஜய் சொன்னாராம் "இனி மேல் ரசிகர்கள் என்னை டாக்டர் விஜய் என்று கண்டிப்பாக அழைக்க கூடாது..." என்று!!!!
* சங்ககால காதல் தலைவி, காதல் தலைவனிடம் சொன்னாளாம் "நான் குளத்துக்கு தண்ணீர் எடுத்து வர போகிறேன் நீங்கள் கண்டிப்பாக அங்கே வரக்கூடாது..." என்று!!!
* ஈழத்தமிழரின் பிரச்சனையை பார்த்து ரஜினி சொன்னாராம் "என்பிறந்தநாளை மக்கள் கண்டிப்பாக கொண்டாட கூடாது" என்று!!!
இந்த மூன்று விஷயங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல .

உண்மையில் தமிழீத்தின் மீது அக்கரை உள்ளவர், தனது பிறந்தநாளின் போது ரசிகர்கள் ஈழத்தமிழருக்கு பணமாகவோ, பொருளாகவோ, உணவாகவோ உதவி செய்யுங்கள் என்று தனது ரசிகளுக்கு உத்தரவிடட்டும். அல்லது இவரே இவரது பிறந்தநாளை தமிழ்நாட்டில் அதிகளாக இருக்கும் மக்களோடு கொண்டாடட்டும்.

நம்ம ஊர் விசிலடிச்சான் குஞ்சுகள் கண்களில் ரசிகன் எனும் மஞ்சள் கண்ணாடி மாட்டிக்கொண்டு திரிவதால் ரஜினி போடும் படங்கள் அனைத்தும் மஞ்சளாகவே தெரிகிறது (அந்த கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பாருங்கள் உண்மை நிறம் தெரியும்!). ரஜினியை பார்த்து தினமலர் திருந்தமுடியாது மேலும் விளம்பர பைத்தியம் பிடித்து கெட்டுத்தான் போகும்!!!

பி.கு1: காந்தி "என் மக்களில் பலர் மேல் சட்டை அணியாமல் வருமையில் உள்ளனர், அதனால் நானும் மேல்சட்டை அணியமாட்டேன்" என்று கூறியதையும்... "ஈழத்தமிழர்கள் கஷ்டபடும் போது என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்" என்று ரஜினி கூறியதையும் ஒப்பிட்டு வரும் கொலைவெறி பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது .

பி.கு2: சிறு வயதில் இதே ரஜினிக்காக கட்டிப்புரண்டு நான் சண்டை போட்ட என் கமல் ரசிக நண்பர்களுக்கு, நான் அவனில்லை என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

பதிவெழுதி பல நாட்கள் ஆச்சு, ஏதாச்சும் எழுதாலாம்னு பாத்தா எழுதுறதுக்கு ஒரு மண்ணும் தோண மாட்டேன்குது. இந்த லட்சனத்துல நான் டெம்லேட் எடுத்து பயண்படுத்திக்கொண்டிருந்த வெப்சைட்டும் திவாலாகிவிட... எனது பதிவே மஞ்சள் கலர்ல அலங்கோலமா ஆகிடுச்சு. சரி முதல்ல டெம்ப்ளேட்டை சரி பண்ணுவோம்னு, Gimp (2.6.2) டவுண்லோட் பண்ணுனேன், CSS டுட்டோரியல்களை படிக்க ஆரம்பிச்சேன், எழுதுடா கருப்பா ஒரு டம்ப்ளேட்டைனு எழுத ஆரம்பிச்சேன். ஒன்னும் சரிப்பட்டு வரலை... சரினு ஒரு வழியா வெப்பிலிருந்து ஒரு டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்து, அதில் நான் Gimp பயன்படுத்தி வரைந்த இமேஜ்களை பயன்படுத்தி ஒரு புது டெம்ப்லேட்டை தயார் செய்தாச்சு.

இன்னும் வேலை முழுசா முடியலை என்றாலும் பதிவுகளை பப்ளிஷ் பண்ணும் அளவுக்கு வந்தாச்சு. IE8, Firefox 3, Google Chrome ஆகிய வலை உலாவிகளில் நன்றாக தெரிகிறது. IE7ல் பதிவகள் சிதைகின்றன. சீக்கிரம் சரி செய்ய வேண்டும்.

ஒரு புது உற்சாகத்தோட ஆரம்பிச்சிருக்கேன்... எவ்வளவு தூரம் போகமுடியுது பாக்கலாம்!

அது நான் 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். திருமங்கலம் PKN மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன். அன்று வெள்ளிக்கிழமை நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், ஞாயிற்றுக்கிழமை எங்கள் பள்ளியிலிருந்து செல்லும் சுற்றுலாவுக்கு என் பெற்றோர் 100ரூ கொடுத்துவிட்டு சென்றிருந்தனர். 80 ரூ சுற்றுலா கட்டணம் 20ரூ செலவுக்கு... 20ரூ என்பது எனது 1 மாதத்துக்கான பாக்கெட் மணி! கையில் ஏற்கனவே என் சேமிப்பில் இருந்த 5ரூபாயும் இருந்தது, நானும் என் நண்பனும் அன்று சினிமாவுக்கு போகலாம் என முடிவு செய்தோம். அப்போது பானு தியேட்டரில் "பூவே உனக்காக" படம் ஓடிக்கொண்டிருந்தது. மாலை பள்ளி முடிந்ததும் மாலை காட்சிக்கு தியேட்டர் முன் ஆஜராகியிருந்தோம்.

தியேட்டரில் சரியான கூட்டம், நான் டிக்கெட் கவுண்டருக்குள் நுழைந்தேன்... திடீரென்று பாக்கெட்டிலிருந்த தனலட்சுமி நியாபகத்துக்கு வரவே, அதை எடுத்து பாதுகாப்பாக என் நண்பன் கையில் திணித்துவிட்டு கவுண்டருக்குள் நுழைந்தேன். தியேட்டருக்கு வெளியே ஒரு மூலையில் ஒருவன் லங்கா கட்டை உருட்டிக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி சில தடியர்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். சில லுங்கிக்கார இளைஞர்கள் சுற்றி அமர்ந்து 50 பைசா 1ரூபாய் நாணயங்களை கட்டங்களில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். என் நண்பனிடம் அவர்களுக்கு மிக அருகில் போகாதே என்று எச்சரித்துவிட்டு நான் கூட்டத்துக்குள் நுழைந்தேன்.

ஒரு வழியாக அடித்து பிடித்து டிக்கட் வாங்கிக்கொண்டு, மகிழ்ச்சி பொங்க வந்து வெளியே பார்த்தபோது என் நண்பனை காணவில்லை!!! அங்கே லங்கா கட்டை உருட்டிக்கொண்டிருந்த அந்த கூட்டத்தையும் காணவில்லை... அட்ரினலின் உடலில் அதிகமாக சுரப்பதை என்னால் உணரமுடிந்தது. ஒரு வழியாக அங்குமிங்கும் தேடி கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தவனை கண்டுபிடித்தேன். என்னடா ஆச்சு உனக்கு என்றேன் அதிர்ச்சியடந்தவனாய்! அங்கே லங்கா கட்டை உருட்டும் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது, பக்கத்தில் நின்ற தடியன் கையிலிருந்த 100ரூபாயை பிடிங்கி ஆட்டத்தில் போட்டுவிட்டான், கட்டையை உருட்டி 100ரூபாயை சுருட்டிக்கொண்டு ஓடி விட்டான் என்றான் கண்ணீரினூடே. என் தலையில் ஒரு பலத்த இடி விழுந்தது, ஏனோ திடீரென, ஒரு ஃபோட்டோவை எட்டாக கிழித்து மூலைக்கு மூலை நூலைக்கட்டி இன்ச் பை இன்சாக இழுக்கும் காட்சி நினைவில் வந்து இம்சை படுத்தியது. ஆத்திரத்திலும், இயலாமையிலும் கண்கள் சிவந்து நீர் கோர்த்தது. அப்போதைய நூறு ரூபாய் என்பது இன்றைய ஒரு லட்சத்துக்கு சமம்.

நான் நிச்சயம் போலீஸில் சொல்லவேண்டும் என்றேன். அவனும் அரை மனதாக ஒப்புக்கொண்டான். உடனே போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். சிறிது நேரத்தில் அவனுக்கு கைகால்கள் உதற ஆரம்பித்தது. மேலும் போலீஸிடம் போகவேண்டியது இருந்தால் அவர்களுக்கு கட்டியழ ஒரு பத்து ரூபாயாவது வேண்டும், என்னிடம் பத்து காசுகூட இல்லை இருந்த காசும் டிக்கெட் எடுப்பதில் செலவழித்தாகிவிட்டது. எனக்கும் போலீஸ் ஸ்டேஷன் போவதில் தயக்கம் இருந்தது. அட்லீஸ்ட் எடுத்த டிக்கட்டுக்கு படமாவது பார்கலாம் என்று மீண்டும் தியேட்டருக்கு திரும்பினோம். நான் படம் பார்க்கும் மூடில் இல்லை. இருந்தாலும் இருவரும் தியேட்டர் சீட்டில் அமர்ந்தோம். எப்போது எதையாவது பற்றி சதா பேசிக்கொண்டே இருக்கும் நாங்கள் கிட்டத்தட்ட அரைமணி நேரமாக எதுவும் பேசாமல் இருந்தோம். படம் ஆரம்பித்தது, அந்த சமயத்தில் படத்தோடு படமாக ஒன்றி கதாநாயகன் அழும் போது அழுது, சிரிக்கும் போது சிரித்து மகிழும் கூட்டத்தில் ஒருவன். படம் போகப் போக எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என் வாழ்நாளில் பார்த்த ஒரு அற்புதமான படம் என்று எண்ணத்தொடங்கினேன். கதையும், அதிலிருந்த சிறு முடிச்சும் அவிழக்கப்பட்ட விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. படம் முடிந்து வெளியே வந்த போது கதாநாயகனும் கதாநாயகியும் ஜோடி சேராதது தான் எனக்கு மிகப்பெரிய கவலையாய் இருந்தது. அடுத்தநாள் என் நண்பனின் செலவுக்கு அவர்கள் வீட்டில் கொடுத்த ரூபாயையும் எனது டீச்சர்களிடமிருந்து வாங்கிய கொஞ்சம் கடனும் சேர்த்து ஒருவழியாக 80ரூபாய் தேரியது.

மீண்டும் இன்று நான் அதே படத்தை பார்த்தேன்... அந்த படம் எனது முந்தைய சோக நிகழ்ச்சியின் நினைவுகளை கிளறியதே தவிற, முன்பிருந்த லயிப்பு அதில் இல்லை. அறிவின் முதிற்ச்சி காரணமாக எந்த திரைப்படத்தை பார்த்தாலும் அதிலுள்ள செயற்கைதனம் மட்டுமே பிரதானமாக தெரிகிறது. நிச்சயம் சிறுவயதில் சினிமா வெறியனாக இருந்த கருப்பன், இன்று தொழில்நுட்பத்தில் முன்னேறி சினிமாவில் ஒரு ஃபிரேமில் உள்ள ஆயிரம் குறைகளை கண்டுபிடிக்கும் திறம் படைத்த இந்த கருப்பனைவிட சந்தோஷமானவன், வாழ்கையை மகிழ்ச்சியாக கழித்தவன்!!

நிச்சயம் Ignorance is Bliss (அறியாமையே மிகப்பெரிய பேரின்பம்)!!

எனது நண்பர்கள் சென்னையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எனக்கும் அந்த சமயத்தில் ஏகப்பட்ட விடுமுறைகள் பாக்கியிருந்ததால் இரண்டுநாள் லீவைப்போட்டுவிட்டு சென்னை சென்றேன். சென்னையில் எனக்கு பிடித்த இடம் பீச் (மெரினா என்றில்லை, சாந்தேம், பாலவாக்கம் கொட்டிவாக்கம் என எந்த பீச் போனாலும் குழந்தை பையனாக மாறிவிடுவேன்).

நன்பர்களுடன் அன்று சாந்தோம் பீச் செல்வது என முடிவெடுத்தோம், பீச்சில் மாங்காய் துண்டு அழகாக வெட்டிவைத்திருப்பார்கள் அதை 10, 15 என வாங்கி வெட்டு வெட்டு என வெட்டுவது எனது பழக்கம். அன்றும் எப்போதும் போல 5 மாங்காய் துண்டுகளை (முதல் ரவுண்டுக்கு தான்) வாங்கி சாப்பிடப்போகும்போது. என் நண்பன் பதறிப்போய் "டேய்...!" என்று கத்தினான். அதிர்ச்சியில் வாயில் கவ்வியிருந்த மாங்காய் துண்டு கீழே விழுந்து விட்டது. "என்னடா?" என்றேன் கண்களில் கொலை வெறியுடன்.

உடனே "அவன் மாங்கா திதேடா அதுல எய்ட்ஸ் வருதாம்" என்றான். எனக்கு பயங்கர ஆச்சர்யம், "மாங்காய்க்கும் எய்ட்ஸுக்கும் என்னடா சம்மந்தம்?" என்றேன். உடனே தனக்கு வந்திருந்த ஃபார்வேர்ட் செயின் மெயில் பற்றி கூறினான். அவன் கூறிய கதை இது தான்

சிறுவன் ஒருவன், தனது பெற்றோருடன் பீச்சுக்கு சென்றிருந்த போது அவன் மாங்காய் வாங்கி தின்றானாம். அவன் தின்ற அந்த நாளில் இருந்து 15 நாட்களுக்கு நோய்வாய்ப்பட்டானாம். அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று கூறிவிட்டார்களாம். அவனது பெற்றோருக்கு இல்லாமல் இவனுக்கு மட்டும் இருப்பதை கண்டு ஆச்சர்யமான மருத்துவர்கள். அவன் ஏதாவது சாப்பிட்டானா என்று கேட்டார்களாம், சிறுவனும் பீச் மாங்காய் பற்றி கூறினானாம். உடனே மாங்காய் விற்பவரை பிடித்து பரிசோதித்ததில் அவருக்கும் எய்ட்ஸ் இருப்பது தெரியவந்ததாம். அவர் மாங்காய் வெட்டும் போது கத்தி கையில் பட்டு ரத்தம் சிறிது அந்த மாங்காயில் தங்கிவிட்டதாம் அதை சாப்பிட்டதால் தான் அந்த பையனுக்கு எய்ட்ஸ் வந்துவிட்டதாம்!!!

கேட்டுவிட்டு எனக்கு தலை சுற்றியது. முட்டாளாக இருப்பதில் தப்பில்லை இப்படி அடிமுட்டாளாக இருக்காதே என்று அறிவுறைகளை அள்ளிவிட்டேன். இவ்வாறெல்லாம் எய்ட்ஸ் பரவ வாய்பில்லை என்று இந்த காரணங்களை சொன்னேன்.

1. HIV கிருமி உள்ள ரத்தம் காற்றோட்டத்தில் காயும் போது அழிந்துவிடும்.
2. மாங்காயில் தூவும் உப்பு பல கிருமிகளை கொல்லும் திறன் வாய்ந்தது.
3. HIV கிருமி ரத்த மண்டலித்தில் கலந்தால் தான் நோய் தாக்கும், உணவு மண்டலத்துக்கு போகும்போது வயிற்றில் இருக்கும் அமிலங்கள் அவற்றை கொன்றுவிடும்
4. HIV ரத்தத்தில் இருப்பது தெரிய குறைந்த பட்சம் 40 நாட்கள் ஆகும்
5. எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் நோய் தொற்றி குறைந்தது 1 வருடம் கழித்துதான் தெரியும்!
6. இது போன்ற முக்கிய செய்திகள் முதலில் Mass Mediaக்களுக்குதான் தெரிந்திருக்கும் யாரோ ஒரு அனானிக்கு அல்ல.

அதன் பிறகு எனக்கே இந்த மெயிலின் Pineapple, மிளகாய் பஜ்ஜி, வெண்டைக்காய் பொறியல் என பல வெர்ஷன்கள் வந்துவிட்டன. நேற்று வந்த அன்னாச்சி பழ வெர்ஷன் கீழே உள்ள படத்தில் இருக்கிறது


இது மட்டுமல்ல பில் கேட்ஸ் நீங்கள் ஒவ்வொறு முறையும் ஒரு குறிப்பிட்ட மெயிலை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு அவரது சொத்திலிருந்த பங்கு கொடுப்பார்.

ஒரு ஏழை குழந்தையின் Brain Tumor குணமாக்க உதவுங்கள் என ஒரு அழகான பாப்பாவின் போட்டோ போட்ட மெயில் நான் முதன் முதலில் 1995ல் மெயில் ஐடி உருவாக்கிய நாளில் இருந்து இன்று வரை வந்து கொண்டிருக்கிறது!

இன்னும் எத்தனையோ சங்கிலித்தொடர் மின்-அஞ்சல்கள் நமக்கு வந்துகொண்டுதான் இருக்கிறது அதையும் நம்பி பயந்து பயந்து வாழும் நண்பர்கள் பலர் இருக்கின்றனர்!


கணினியில் Top Ranking விளையாட்டுகளுள் ஒன்றான GTA (Grand Theft Auto)வின் நான்காவது வெர்ஷனை இன்று Rock Star Games நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று Microsoft's xbox, Sony Playstation 3 இரண்டுக்குமான வெர்ஷன்கள் மட்டும் வெளியிட்டுள்ளது. இன்னும் PC வெர்ஷன் வெளியிடப்போகும் தேதி குறிப்பிடபடவில்லை.

GTA விளையாட்டுகள் முற்றிலும் 3-டி விளையாட்டு, நேர்த்தியான வடிவமைப்பும் விளையாட்டு யுக்திகளும் இந்த விளையாட்டை கணினி விளையாட்டுளின் ராஜாவாக மக்கள் கருத காரணமாயிருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும். கேம் ஸ்பாட்டில் 10/10 ரேட்டிங் வாங்கியிருக்கிறது!!

பி.கு: இந்த விளையாட்டு M ரேட்டிங் பெற்றுள்ளது அதனால் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாடலாம்!!



போன வாரம் நானும் என் தம்பியும் அக்கா வீட்டுக்கு போயிருந்தோம். அக்காவுக்கு சொல்லப்போனால் வீடெல்லாம் கிடையாது. தென்னந்தோப்பு, சுற்றி வயல்வெளி தண்ணீருக்கு கிணறு, கிணற்றை ஒட்டிய மோட்டார் ரூம், அதனோடு இணைந்த ஒரு தகர கூறை ரூம். இந்த தகர கூறை ரூம் தான் அக்காவின் வீடு. அக்காவின் வீட்டுக்குள் 24 மணி நேரமும் டீவி ஓடிக்கொண்டிருக்கும் (உபயம் அக்கா மகள்). மாமா, புதிய திரைப்படம் வந்துவிட்டதென்றால் எங்கேயிருந்தாவது டிவிடி வாங்கிவந்துவிடுவார். என் அக்கா மகள் ஒரு தெய்வப்பிறவி, பின்னே "ஒரு வினாடி கூட காணச்சகிக்காத படங்கள்" என்று தமிழ் பட ரசிகர்களே தியேட்டரை விட்டு விரட்டிய படங்களை கூட பத்து பதினைந்து முறை பார்த்துவிடும் சக்தி மனிதப்பிறவிக்கா இருக்கமுடியும்??

அக்காவின் சமயலறை வீட்டுக்கு வெளியே திறந்தவெளி விறகு அடுப்பு தான். நான் பொதுவாக தெய்வப்பிறவியை தொந்தரவு செய்வதில்லை அதனால் அக்கா சமயல் செய்யும்போது "உள்ளூர் பொறனி" பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்துவிடுவேன். அன்றும் அது போல அடுப்படி அருகில் அமர்ந்து அக்காவிடம் ஒரு வாரம் ஊரில் என்ன நடந்தது என்று Frame By Frameஆக விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தேன்.

டீவி வால்யூம் அதிகமாக இருந்ததால் உள்ளே ஓடும் வசனங்களை தெளிவாக கேட்கமுடிந்தது. ரகுவரன் தனது பாணியில் சிறப்பாக வசனம் பேசிக்கொண்டிருந்தார். சரி ஒரு நிமிடம் என்ன படம் என்பதை கண்டுபிடிக்கும் ஆவலோடு வசனங்களை கேட்க ஆரம்பித்தேன். தனுஷ் தனது வழக்கமான பாணியில் அப்பா மேல் உள்ள அளவுக்கு மிஞ்சிய பாசத்தால் வாடா, போடா, மாமூ, மச்சி, இன்ன பிற கெட்ட வார்த்தைகளை சராமரியாக உபயோகித்துக் கொண்டிருக்க "என்னடா இது?" என்றேன் என் தம்பியிடம். என் மனதைபுறிந்து கொண்டவனாக, "அப்பாவை நண்பன் மாதிரி நடத்துறாராம்" என்றான். எங்கள் அப்பாவை நாங்களும் நண்பன் போலத்தான் நடத்துவோம் அதற்காக எந்த நண்பனையும் இப்படி கேவலமாக நடத்தியதில்லை. எனக்கு தோன்றிய அதே எண்ணம் என் தம்பிக்கும் தோன்றியிருக்க வேண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

பிறகு நடந்த உரையாடலில் (அட டீவியில் தான்பா) தனுஷ் வேலை தேடி ஒரு ஐடி கம்பனியில் கலந்துறையாடும் காட்சியில் வரும் வசனங்களை கேட்டேன். எல்லாரும் ஏதோ பேச தனுஷ் மட்டும் யா.. யா... என்று சொல்லிக்கொண்டிருப்பார். உடனே யாரோ ஒரு பெண் இவரை தமிழிலேயே பேசச்சொல்ல(கதாநாயகியாகத்தான் இருந்திருக்க வேண்டும், இதை கண்டுபிடிக்க CBIயா வரவேண்டும்?)... தனுஷ் க்கும்.. க்கும்... (தொண்டைய சரிசெய்துகொண்டு), "வாக்காளர் பெருமக்களே... நீங்கள்...." என்று ஆரம்பித்து ஒருவழியாக முடிக்கிறார் (ஏனோ எனக்கு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒட வேண்டும் என்று எழுந்த அனிச்சை உணர்ச்சியை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்)!

அடுத்ததாக தனுஷ் இன்டர்வியூவுக்கு செல்கிறார், செல்வதற்க்கு முன் வழக்கம் போல அப்பாவை "உன்னை யாரு இங்க வரச்சொன்னது, உன் மூஞ்சியில முழிச்சுட்டேன்ல இன்னி உருப்பட்டாப்லதான்" என்று நல்லவிதமாக ஆசீர்வதித்துவிட்டு செல்கிறார் (இது போன்ற பாசத்தை நீங்கள் உங்கள் தந்தையிடம் காட்டியதுண்டா?? உங்கள் மகன்கள் உங்களிடம் காட்டியதுண்டா?? அப்படியென்றால் உங்களுக்குள் நண்பர்கள் போண்ற உறவு இல்லை! அட நான் சொல்லலைபா தனுஷ் சொல்லுறார்). இன்டர்வியூவில் Mutithread, semaphore, என்று ஏதேதோ வார்த்தைகள் ஒலிக்க. எனக்குள் விழிப்பதற்க்கு காத்திருந்த மிருகம் பிடரியை சிலிர்த்துக்கொண்டு எழுந்தது!

சில சமயம், ஒரு சில கொலைவெறி படங்களை நான் சில மணிநேரம் பார்ப்பதற்கு இந்த கொடூர மிருகம்தான் காரணம். ஒரு சமயம் விஜய் நடித்த "புதிய கீதை" எனும் படத்தையே 45 நிமிடம் பார்த்திருக்கிறேன் என்றால் பாருங்களேன்!!!! இந்த கொடிய மிருகம் என்னை எழுப்பி வீட்டுக்குள் அழைத்து சென்றது, என் தம்பியும் ஆர்வமாக பின்தொடர்ந்தான். "என்ன படம் டீ...?" என்றேன் தெய்வப்பிறவியிடம். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை தனது கடமையில் கண்ணாக இருந்தாள். "இந்த ரேஞ்சுல டீவி பாத்தா ஏழாவது ஏழு வருசங்கழுச்சு தான் பாஸ் பண்ணப்போற" என்று கூறி என் மீசையில் இருந்த மண்ணை தட்டிவிட்டேன் (அதற்கும் No Reaction).

சரி என்று டீவி பக்கம் கவனத்தை திருப்பினேன். தனுஷ் கணினி முன் அமர்ந்து ஏதோ டைப் செய்ய ஆஃபீஸில் உள்ள அனைத்து கணினியிலும் ஏதேதோ ஓட அனைவரும் மிரள்கின்றனர் (நான் உள்பட). என் தம்பி என்னை திரும்பி பார்த்தான். "இவன் சாஃப்ட்வேர் இன்சினியர், எப்படி வந்த உடனே அதிரவைக்கிறான் பாரு, நீயும்தான் இருக்கியே பூமிக்கு பாரமா, வெளிய சொல்லாத நீ ஒரு சாஃப்ட்வேர் என்சினியர்னு அது தனுசுக்குதான் அசிங்கம்" என்ற எள்ளல் அந்த பார்வையில் இருந்தது. உடனே யாரே ஒரு ஜென்டில்மேன் தனுஷை/நயன்தாராவை செருப்பால் அடிக்காத குறையாக திட்ட. என் தம்பியும் தெய்வப்பிறவியும் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர். இப்படித்தான உன் ஆபீஸ்லயும் செருப்படி வாங்குவ என்று நினைத்திருப்பார்கள்.

இவ்வளவு அவமானங்களுக்கு பிறகும் நான் வெட்கங்கெட்டு போய் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தனுஷ் வெகுன்டெழுந்து ஓவர் நைட்டில் பிராஜக்டை முடித்து ஏதேதோ அச்சடித்து தள்ளுகிறார். அனைவரும் வியக்கின்றனர் (அட நாங்களுந்தாம்பா... அதை வேற உங்களுக்கு அடிக்கடி சொல்லனுமா?). உடனே நயன்தாரா தனுஷ்மீது பாசப்பார்வை வீச காதல் அரும்பி கனடாவில் ஒருகுத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடப்போகிறார்கள் என்ற சூழ்நிலை உருவாவது அறிந்து எழுந்து வெளியே ஓடினேன். என் தம்பியும் சிரித்துக்கொண்டே வெளியே வந்தான், உள்ளே தெய்வப்பிறவி அடக்கமுடியாத சிரிப்பால் கட்டிலிலிருந்து கீழே தடால் என விழும் சத்தம் கேட்டது. விழுந்தும் உருண்டு உருண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.

இந்த மேட்டர் மக்களுக்கு எப்படி லீக்கானது என தெரியவில்லை அனைத்து பதிவுகளும், குமுதம், ஆனந்த விகடன் என பல பத்திரிகைகளும் "யாரடி நீ மோகினி" பயங்கர காமடி படம் என்று முழங்கிக் கொண்டிருக்கின்றன!!

ஊர் உலகத்துக்கே தெரிந்து இவ்வளவு அவமானம் ஆகிவிட்ட போது, வாழ்ந்து என்ன பயன் என்று வாழ்கை வெறுத்து கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்க தயாரானேன். என் தம்பி என்னை தடுத்து ஏற்கனவே இந்த படத்திலெல்லாம் நடிக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து ரகுவரன் தற்கொலை செய்துகொண்டார், நீ அடுத்த தனுஷ் படத்தை பார்த்துட்டு ட்ரை பண்ணு என்று நிறுத்தினான்.

ரகுவரன் எனும் சிறந்த ஒரு நடிகரின் தற்கொலைக்கு காரணமான இந்த குழு மீது யாராவது நடவடிக்கை எடுப்பார்களா?? நான் தற்கொலை செய்துகொள்ளும் பட்சத்தில் இதை எனது கடைசி கடிதமாக Law Enforcement Units எடுத்துக்கொள்ளட்டும்.

:'-(

Disclaimer:
இது வெறும் கதைதான், படம் பார்த்த அந்த ஐந்து நிமிடங்கள் எனக்கு ஏற்பட்ட இரத்த கொதிபின் எல்லையை காட்டுவதற்கு தான் தவிற அவரின் மரணத்தை விளையாட்டாக எண்ணும் நோக்கம் எமக்கில்லை. ஒரு அனானி அவர்கள் இதை Literalஆக எடுத்துக்கொண்டதால் இந்த டிஸ்கி.

சமீபத்தில் இந்தியாவில் BCCI-யால் நடத்தப்படும் IPL கிரிகெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கங்கூலியின் பரம ரசிகனான நான் கங்கூலி விளையாடும் விளையாட்டுகளை மட்டும் பார்ப்பேன். ஆனால் விதிவிலக்காக IPL போட்டிகள் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறேன்... காரணம்?

IPL மேட்ச்களில் புகுத்தபட்டிருக்கும் புதுமைகள் (எ.டு: Cheerleaders! :-p~). சில போட்டிகளை Cheerleaders-காக மட்டுமே பார்ப்பதும் உண்டு. இப்போது மத்திய பிரதேச மாநில அரசு அதற்கும் அடித்துவிட்டது ஆப்பு. IPL போட்டிகளில் ம.பி அரசு Cheerleaders-களை தடை செய்துள்ளது (ம.பியில் நடக்கும் போட்டிகளுக்கு மட்டுமே என நினைக்கிறேன்). "பெண்களை தெய்வமாக சித்தரிக்கும் எங்கள் நாட்டில், இது போன்ற அரை நிர்வானமாக பெண்களை விளம்பரங்களுக்கு பயண்படுத்துவதை தடை செய்கிறோம்" என மும்பை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் "கிரிகெட் வீளையாட்டில் Cheerleaders பயண்படுத்துவது கலாச்சாரத்துக்கு எந்த விதத்தில் கேடு விளைவிக்கிறது? இது எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் (அட்ரா சக்கை... அட்ரா சக்கை...)

இந்திய "கிரிகெட் ரசிகர்கள்"(?) பல Cheerleader's இடம் அத்துமீறி நடந்துகொண்டதும், ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசும் செயல்களில் இரங்கியும் உள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த Cheerleader "ரசிகர்கள் மிகக்கடுமையான ஆபாச வார்த்தைகளை வீசுவதோடு, physical harassmentடிலும் ஈடுபடுகின்றனர்" என வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

நம்மூர் ரசிகனுக செய்யுற சேட்டையில நானே Cheerleaders வேண்டாம்னு சொன்னாலும் ஆச்சயர்யபடுவதற்கில்லை!!!

மத்திய பிரதேசத்தில் மட்டுமல்ல மேலும் பல இடங்களில் Cheerleaders சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். எல்லை தாண்டும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என ஒரு குரூப் கொலை வெறியுடன் களமிறங்கியிருப்பதாக கேள்வி!!

இன்னும் Cheerleaders எல்லைக்குள்ளயே வரல அப்புறம் எங்கயா மீறுச்சுனு கேக்குறவங்க, ஒரு மாநாட்டை கூட்டுங்க...(மறக்காம எனக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்புங்கப்பா! :-D)

கிரிக்கெட் இந்தியாவில் அதிக புகழ் பெற்ற விளையாட்டாக இருந்த போதிலும், உள்நாட்டு அணிகள் மோதும் போட்டிகள் பிரபலமானதாக இருந்ததில்லை. மாநிலங்களுக்கு இடையில் நடத்தப்படும் ரஞ்சி போட்டிகளும் கூட பெயர் மட்டும் பிரபலமே அன்றி போட்டிகளை காணும் ரசிகர்கள் மிகமிக குறைவு.

இந்நிலையில் ICL (Indian Cricket League) எனும் அமைப்பு பிரபல கிரிகெட் வீரர்களை அழைத்து ஒரு கிளப் போல உருவாக்கி 20-20 மேட்ச்களை நடத்த ஆரம்பித்தது. கால்பந்து விளையாட்டில் இது போன்ற கிளப் விளையாட்டுகள் ஐரோப்பாவில் மிகவும் பிரபலம். சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு இணையாக இந்த கிளப் போட்டிகளுக்கு கூட்டம் இருக்கும் ஜர்மனியில் பெர்லின்-ஹேம்பர்க் (Inter-City) கால்பந்து போட்டிகளுக்கு கூட எங்களால் டிக்கட் வாங்க முடியவில்லை அவ்வளவு கூட்டம். ICLலும் இது போல கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பிரபலமாக்கும் முயற்ச்சியில் இறங்கியது. இந்த போட்டிகளுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் 20-20 மேட்ச்சை இந்தியாவில் ஓரளவு பிரபலமாக்கியது. ஒரு நல்ல திட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது.



ICLஐ தொடர்ந்து IPL போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முகேஷ் அம்பானி, விஜய் மல்லயா, ஷாருக் கான் போன்ற பெரும் புள்ளிகள் களத்தில் குதித்தனர். சில ஆயிரம் கோடிகள் களத்தில் குதிக்க IPL டாக் ஆஃப் தி சேனல்ஸ் ஆனது. அனைத்து ஊடகங்களும் தோனி 9-கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்றும் ஏலத்தின் இன்ன பிற சங்கதிகளும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது!

கோடிக்கணக்கில் புரளும் பணமும் ஊடங்களின் ஓயாத விளம்பரங்களாலும் IPL பயங்கரமான எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியது. "The mighty power of Advertisements" என்ற வாக்கியத்தை ICL, IPL ஒப்பீடு மூலம் நன்கு அறியலாம்.

போட்டியில் உள்ள அணிகளின் பட்டியல்:

அணி

தொகை

(in Million USD)

ஏலம் எடுத்தவர்

மும்பை

119.9

முகேஷ் அம்பானி

பெங்களூர்

111.6

விஜய் மல்லயா

ஐதராபாத்

107

டெக்கான் க்ரானிகிள்

சென்னை

91

இந்தியா சிமின்ட்ஸ்

டில்லி

84

ஜி.எம்.ஆர் குரூப்ஸ்

மொஹாலி

76

ப்ரீத்தி ஜிந்தா

கொல்கத்தா

75.1

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மன்ட்

(ஷாருக்கான், ஜூஹி சாவ்லா)

ஜெய்பூர்

67

எமர்ஜிங் மீடியா


இந்த போட்டிகளில் புரலும் பணம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. போட்டியின் மீது கட்டப்படும் சூதாட்டம்/பந்தய தொகை மட்டும் சுமார் 2,000 கோடியாம்!!! ஒலிபரப்பு உரிமையை 10 ஆண்டுகளுக்கு சோனி நிறுவனம் சுமார் 1.026 பில்லியன் US Dollars கொடுத்து வாங்கியுள்ளது!!



T20 IPL போட்டிகளில் உள்ள சில நன்மைகள்
* இந்த போட்டிகளின் மூலம் கிரிகெட் என்பது வெறும் விளையாட்டு நாட்டுப்பற்றுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மக்கள் உணரும் வாய்ப்புள்ளது
* போட்டிகளின் போது ஒரு நாட்டு வீரர் இன்னொருவரை கேலி செய்வதும் முறைப்பதும் குறையும் (என்று வேண்டுமானாலும் சேர்ந்து விளையாட நேரிடும் என்ற அச்சமும் இருக்கும்)
* உள் நாட்டுக்குள்ளே வாய்புகள் கிடைக்காமல் முடங்கிக்கிடந்த பல திறமையான வீரர்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள்
* ரஞ்சி போட்டிகளில் எழும் மாநில பிரிவினை கூட இந்த போட்டிகளில் எழ வாய்பில்லை (போட்டியில் அணிகளின் பெயர் மட்டுமே ஊர்களை குறிக்கின்றது வீரர்கள் வேறு நாட்டவராகவோ மாநிலத்தவராகவோ உள்ளனர்)
* அழகான/கவர்ச்சியான Cheer leadersஇன் குளு குளு Cheering!!!

போட்டியில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள்
* எந்த இந்திய வீரரும் Man of the match வாங்கவில்லை
* மிகவும் குறைந்த மதிப்பீட்டை பெற்ற ராஜஸ்தான் அணி, அதிகம் பேசப்பட்ட பஞ்சாப் அணியை வீழ்த்தியது
* மெக்கல்லமின் அதிரடி 158ம் இரண்டாவது அதிகம் விலை கொடுக்கப்பட்ட பெங்களூர் அணியின் படு தோல்வியும்!
* புதிய ஜடேஜாவின் சூப்பர் அவதாரம்!! பழய ஜடேஜாவையும் commentary boxல் காணமுடிகின்றது
* Indo-Pak சர்வதேச போட்டிகளுக்கு இணையான கூட்டம்!!
* போட்டி உள்ளூர் நடப்பதை மறந்து இன்னும் சகவீரர்களை முறைத்துக்கொண்டு திரியும் ஸ்ரீசாந்த்!!

வெளியிலோ கொளுத்தும் வெய்யில், வீட்டிலும் உருப்படியான பொழுதுபோக்கு இல்லை, சரி சினிமாவுக்கு கிளம்பலாம் என்றாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எந்த உருப்படியான படங்களும் ஓடிக்கொண்டிருக்கவில்லை, என்ன செய்வது என்று தெரியாமல் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடும் நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குள் அடைபட்டு கிடந்தேன்.

அப்போதுதான் நியாபகம் வந்தது, ஜெர்மனியிலிருந்து நான் எடுத்து வந்திருந்த 500GB USB ஹார்ட் டிஸ்க். அந்த டிஸ்கில் நண்பனிடமிருந்து பல ஆங்கிலப்படங்களை பதிவு செய்து வந்திருந்தேன். சரி எதாவது நல்ல பழைய படத்தை ஓடவிடலாம் என்று மடிக்கணினியை திறந்தேன். "ஹூம்... நல்ல படமாக சிக்கினால் தப்பித்தோம் இல்லையென்றால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஒரு பெட்டை ரிசர்வ் பண்ணவேண்டியதுதான்" என்று நினைத்துக்கொண்டே, Ocean's Elevenஐ திறந்தேன் எங்கோ கேட்ட பெயர் நிச்சம் கைவிடாது என்று தோண்றியது.

அடப்பாவி ஒரு படத்தை பற்றி சொல்லுறதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று நீங்கள் கையில் எதையோ எடுப்பது தெரிகிறது வேண்டாம்... அப்புறம் கொலைக்கேஸ்ல உள்ள போயிருவீங்க. சரி... சரி... இந்தா நேரா மேட்டருக்கு வந்துட்டேன்.

டேனி ஓஷன் (Danny Ocean), சிறைச்சாலையில் விசாரணக் கைதியாக இருக்கிறார். விசாரணையின் போது அவர் மணைவி அவரைவிட்டு பிரிந்து இருப்பதும் அதனால் அவர் மனமுடைந்திருப்பதாக கூறுகிறார். ஜாமீனில் வெளியே வரும் ஓஷன், தனது நண்பனும் முன்நாள் கூட்டாளியுமான, ரஸ்டி ரயன் (Rusty Rayan)ஐ சந்திக்கிறார். இருவரும் வயதான முன்னாள் சூதாட்ட விடுதி (Casino) நடத்துனரான ரூபன்-ஐ சந்தித்து, தாங்கள் அமேரிக்காவிலேயே மிகப்பெரிய மூண்று சூதாட்ட விடுதியை கொள்ளையடிக்கப் போவதாகவும் அதற்கான பண உதவியை ரூபன் செய்யுமாறும் கேட்கின்றனர். இதற்குமுன் Casino கொள்ளையர்கள் அவர்களது முயற்ச்சியில் எப்படி கொடூரமாக கொல்லப்பட்டனர் என ரூபன் விளக்குகிறார், அதனால் அவர்களது கோரிக்கைக்கு தயக்கம் காட்டுகிறார்.

ஓஷன் தான் கொள்ளையடிக்கும் Casinoக்கள் பெல்லாஜியோ (Bellagio), தி மிராஜ் (The Mirage) மற்றும் MGM கிராண்ட (MGM Grand) என்று ரூபனிடம் கூற ரூபன் சம்மதிக்கிறார். ரூபனுக்கும் இந்த மூண்று சூதாட்ட விடுதியின் முதலாளியான டெரி பெனிடிக்ட் (Terry Benedict)க்கும் முன்பகை, பெனிடிக்ட் ரூபனை ஆள்பலத்தை உபயோகித்து வியாபாரத்தில் இருந்து வெளியேற்றியதால், இதை ரூபன் பழிவாங்கும் வாய்ப்பாக கருதுகிறார்.

இந்த மூண்று விடுதிகளிளும் சேர்க்கப்படும் பணம், ஒரு மத்திய, அதி நவீன கருவிகள் மூலமாகவும் பல திறமையான குழுவாலும் பாதுகாக்கப்படும் பெட்டகத்தில் வைக்கப்படும். இந்த பெட்டகத்தின் உள் கதவு சரியான கைரேகை இருந்தால் மட்டுமே திறக்கும். இரண்டாம் நிலை கதவுக்கும் கடுமையான செக்யூரிட்டி கோட் தேவை இது 12 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றப்படும். மாற்றப்பட்ட கோட் டெரி பெனிடிக்டிடம் இருக்கும்.

இந்த பெட்டகத்தை கொள்ளையடிப்பது முடியாத காரியம் மட்டுமல்ல தற்கொலை முயற்ச்சி போன்றது என்று வர்ணிக்கப்பட்டாலும், ஓஷன், ரயன், ரூபன் உட்பட 11 பேர் கொண்ட திறமையாளர்(experts) குழுவை உருவாக்குகிறார் (Ocean's Eleven - படத்தின் தலைப்பு விளங்கிவிட்டதா?). குழுவில் இருப்பவர்கள்

லினஸ் கால்ட்வெல் (Linux Caldwell) - சிறந்த பிக்-பாக்கெட் (இவரது தந்தைவழி தொழில்!)
லிவ்விங்ஸ்டன் டெல் (Livingston Dell) - சிறந்த மின்னனு மற்றும் கணிப்பொறியாளர் (செக்யூரிட்டி கேமராக்களை சமாளிப்பதற்கும், அனைத்து நடவடிக்கைகளையும் கேமரா மூலம் கண்காணிக்கவும்)
பேஷர் தார் (Basher Tarr) - வெடிபொருள் Expert ஒரு கொள்ளைமுயற்ச்சியில் போலீசிடம் சிக்கிக்கொள்பவரை ரஸ்டி ரயன் காப்பாற்றி குழுவில் சேர்க்கிறார்.
விர்கில் மற்றும் டர்க் (Virgil & Turk Malloy) - இவர்கள் இருவரும் கார் ஓட்டும் திறமை படைத்தவர்கள்.
யென் (Yen) - சீன ஜிம்னாஸ்டிக் வீரன் (தற்போது சர்கஸ் செய்பவன்)
பிரான்க் (Frank) - பார் டென்டர்
சோல் (Saul) - வயதானவர் (நடிப்பில் சிறந்தவர்(?))

ஓஷன் தனது குழுவினருடன்

பெனிடிக்டிடம் இருப்பதைப்போலவே ஒரு போலி பெட்டகத்தை தயாரிக்கின்றனர். திட்டமும் வகுக்கப்படுகிறது. இதற்கு இடையே ஓஷனின் மனைவி டெஸ் (Tess) இப்போது பெனிடிக்டிடம் இருப்பது தான் ஓஷனின் இந்த திட்டத்திற்கு காரணம் என்பதும் இந்த திட்டத்தில் 150 மில்லியன் டாலரைவிட ஓஷன் தன் மனைவியை மீண்டும் பெற முயற்ச்சிப்பதும் ரயனுக்கு தெரிய கூட்டத்தில் குழப்பம் விளைகிறது.
ஓஷன் தனது மனைவியுடன்

இந்த குழப்பங்களையும், கடைசி நேர பிரச்சனைகளையும் மீறி இந்த திட்டத்தை இவர்கள் செயல்படுத்தினார்களா?? 150 மில்லியன் டாலர் கொள்ளையடிக்கப்பட்டதா?? ஓஷன் தன் மனைவியுடன் திரும்ப சேர்ந்தாரா?? என்பதை விருவிருப்பாக படம் கூறுகிறது.

படத்தின் சிறப்புகள்
  1. * நேர்த்தியான திரைக்கதை
  2. * அட்ரினலின் சுரபிகளுக்கு அதிக வேலை கொடுக்கும் கிளைமாக்ஸ்
  3. * ரூபன், Los Vegasல் அடிக்கப்பட்ட 3 சிறந்த கொள்ளை பற்றி கூறி கொள்ளையடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லும் விதம் அருமை
  4. * George Clooney ஓஷனாகவும், Brad Pitt ரஸ்டி ரயனாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு நல்ல திரைப்படம் Ocean's Eleven. Ocean's Twelve, Ocean's Thirteen எல்லாம் வந்துவிட்டது ஆனால் முதல் பாகம் அளவுக்கு நன்றாக இருக்குமா என தெரியாது. பார்த்துவிடடு கூறுகிறேன்.

நேற்று வீட்டுக்கு ஃபோன் பண்ணி என் தம்பியிடம் பேசினேன், அம்மா எங்கேடா என்று கேட்ட போது, வீடு, குத்துவிளக்கு, பூஜை ஐட்டங்களை சுத்தம் செய்து கொண்டிருப்பதாக சொன்னான். என்னடா விசேஷம் என்று கேட்டேன். அதான் வருசம் பொறக்குதுல்ல என்றான். அடப்பாவி, அதான் தமிழ்நாட்டு கவர்மென்ட் தையில் தான் புத்தாண்டுனு சொல்லிருச்சுல்ல, என்றேன். அடப் போடா பைத்தியக்காரா, நடுவூர்ல பாதி பயபுள்ளைக்கு தமிழ்நாட்டுக்கு கவர்மென்ட் இருக்குறதே தெரியாது இதுல ஆணை வேறயா, என்றான்.

அப்போது தான் உறைத்தது தமிழக அரசாணை தமிழகத்துக்கு மட்டும் தானே, என்னைப்போல NRT (Non-Resident Tamils) க்கு அது பொருந்துமா?? பொருந்துதோ இல்லையோ எங்கள் வீட்டில் தமிழ்புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். டீவிகளில் என்னவென்றால் சித்திரையை முன்னிட்டு(?) என்று வழக்கம் போல "உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக, திரைக்கே வராத..." என்று முழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆஹா தமிழக அரசாணையை டீவிகளும் மீடியாக்களும் மதிக்கும் விதம் சும்மா புல்லறிக்க வைக்குது. "புத்தாண்டு" என்ற வார்த்தைக்கு மட்டும் தமிழக அரசு தடைவித்திருக்கிறதோ என்றுதான் எண்ணத் தோண்றுகிறது!
எனவே இவ்வாறு Intertiaவிலிருந்து மீளாதவர்களுக்கும்(என் பெற்றோர் போல), தமிழக அரசாணை செல்லுபடியாக இடங்களில் வாழ்பவர்களுக்கும் (என் போல), தமிழக அரசாணை பற்றி அறியாதவர்க்கும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

பி.கு: தி.மு கழக உடன்பிறப்புகள் கொதித்து எழ வேண்டாம், இந்த வாழ்த்துகள் தங்களுக்கானதல்ல!


நம்மாளுங்க கிட்ட சொந்த சரக்கு இல்லை என்றாலும் சுட்ட சரக்கை, காரசாரமாக பரிமாறும் திறமை நிறையவே இருக்கிறது!! படத்தை பார்த்துவிட்டு நான் சொல்லுவது சரியானு சொல்லுங்க!!

அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு போன்ற ஊனமில்லாமல் பிறப்பது என்று நம் தமிழ் பாட்டி ஒரு காலத்தில் கூறினார். நம் காலத்தில் அரியது கேட்கின்... அரிது அரிது நல்ல மொபைல் கிடைப்பதரிது, அதனினும் அரிது கிடைத்த மொபைலை பாதுகாப்பாக வைத்திருப்பது!! கைப்பேசியை வைத்திருக்கவும், பயன்படுத்தவும் எனக்கு தெரிந்த சில குறிப்புகளை மக்களுக்கு கூறவே இந்த பதிவு.



வாங்குவது குறித்த குறிப்புகள்
1. கடைக்கு செல்வதற்கு முன்பே இனையத்தில் நன்றாக தேடி நல்ல ஒரு மாடலும், பிரான்டும் செலக்ட் செய்து கொள்ளுங்கள். தேடும் போது முக்கியமாக உங்கள் மொபைல் உபயோகத்தன்மையை நன்றாக சிந்தித்துக்கொள்ளுங்கள். அதாவது, "எதற்காக எனக்கு மொபைல்?" என்ற கேள்வியை உங்களுக்குள்ளே கேட்டுப்பாருங்கள். சிலருக்கு புகைப்படம் எடுக்கும் கருவியாக இருக்கவேண்டும், சிலருக்கு இனையம் உலாவும் கருவியாக இருக்கவேண்டும், சிலருக்கு எஸ்.எம்.எஸ் கருவி. இது உங்களுக்கு எந்த மாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற மெகா குழப்பத்துக்கு முடிவு கட்டும்.

2. நோக்கியா போன்ற பெயர் பெற்ற கம்பனி மொபைல்களின் பாதிவிலை அந்த கம்பனியின் பெயருக்காக என்பதை மனதில் வையுங்கள். SE, Motorola, LG போன்ற மற்றவர்களின் மொபைல்களைபற்றியும் படித்துப்பாருங்கள்.

3. குறைந்தது இரண்டு மூண்று கடையிலாவது, விசாரித்துக்கொள்ளுங்கள். விலை குறைப்பு, இலவச மெமரி கார்டுகள் போன்றவை சில கடைகளில் இருக்கும் சிலவற்றில் இருக்காது. புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பல மொபைல்களுக்கு தள்ளுபடி கிடைக்கும்!

4. மெபைல் வாங்கும் போது அட்டைப்பெட்டியின் சீல் சேதமில்லாமல் இருக்கிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக ரசீதுடன் வாங்குங்கள். மொபைல் அட்டைப்பெட்டியையும், ரசீதையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள். தயவு செய்து அட்டைப்பெட்டியை தொலைத்துவிட, தூக்கிப்போட வேண்டாம்!!! (பின்பு கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும்)

5. மொபைல் வாங்கும் போது, அதன் Accessories அதனுடனே வருகிறதா என பாருங்கள். சில நோக்கியா மொபைல்களுக்கு, Hands-free, data cable, memory card நீங்கள் தனியாக வாங்கவேண்டியிருக்கும்!

பயன்படுத்துதல் குறித்தவை



1. உபயோகிக்கும் போது பக்கவாட்டில் பிடிக்க வேண்டும், குறைந்த பட்சம் விரல்கள் மொபைல் பின் பகுதியின் மேல் பாகத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். படத்தில் நம்ம கோழியார் பிடித்திருப்பது போல. இது ஆன்டனாவில் இருந்து வெளிப்படும் சிக்னல்கள் உங்கள் விரல்களால் தடுக்கப்படாமல் இருக்க உதவும்.

2. தெருவோரங்களில் விற்க்கும் Flash LEDs வாங்கி மொபைல் ஆன்டனா மேல் ஒட்டுவது, வடிகட்டிய முட்டாள்தனம். உங்கள் மொபைலில் இருந்து வெளிப்படும் ஆற்றலை தேவையற்ற வண்ண வண்ண ஒளியாற்றலாக மாற்றி என்ன பயன்? உங்கள் மொபைலுக்கு சிக்னல் சரியாக கிடைக்காமல் போவதோடு, பேட்டரியும் விரைவாக தீர்ந்துவிடும்.

3. உங்கள் பேட்டரியின் தன்மை அறிந்து சார்ஜ் செய்ய வேண்டும். Li-Ion பேட்டரிகளை நீங்கள் முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்து பின் சார்ஜ் செய்ய வேண்டியதில்லை, மேலும் இந்த வகை பேட்டரி கொண்ட பல மொபைல்களை நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சார்ஜரில் சொருகி வைக்கலாம். Ni-Cad பேட்டரிகள் கொண்ட மொபைல்களை நன்றாக டிஸ்சார்ஜ் ஆன பிறகு சார்ஜ் செய்யவேண்டும், முழுவதுமாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜரில் இருந்து எடுத்து விடவும்.


4. ஆண்கள், மொபைலை வைக்கும் Pocketக்குள் சாவி கொத்து, சிகரட் லைட்டர்கள் போன்ற எந்த பொருளையும் வைக்க கூடாது. பெண்கள் கைப்பைக்குள் மொபைலை வைக்கும் போது வேறு கடினமான பொருட்களுடன் உரசாதவாறு வைக்கவும்.

5. திரையில் விழும் கீறல்களை தடுக்க பாலிதீன் Screen Guardகளை வாங்கி திரைமீது ஒட்டலாம்.

6. மொபைல்களில் தொடர்ந்து கேம் விளையாடுவதை தவிர்கவும். இதனால் உங்கள் கீப்பேட்கள் சீக்கிரம் கெட்டுவிடும்.

7. மொபைலை கீழே போட்டு விளையாடும் கெட்ட விளையாட்டு கூடவே கூடாது!!!

8. மொபைலில் பேசும் போது, மொபைலில் பேசுங்கள், அதாவது மொபைலை காதில் வைத்துக்கொண்டு பேச்சை நேரடியாக டெலிகாஸ்ட் செய்யாதீர்கள். உங்கள் கூச்சல் மற்றவர்களுக்கு பெரும் தலைவலி என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். மக்கள் அதிகம் கத்துவது மொபைல் போன் செட்டிங்கில் உள்ள தவறால்தான். மொபைலில் உள்ள ஒலியளவை நீங்கள் இருக்கும் இடத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள். ஆபீஸ் போன்ற அமைதியான இடங்களில் குறைவாகவும், சந்தை போன்ற இடங்களில் அதிகமாகவும் வைத்துக்கொண்டால் கத்தாமல் பேசலாம்.

9. Blue tooth, IR முதலியவற்றை எப்போதும் off செய்து வைக்கவும் . தேவை ஏற்படும் போது ON செய்து கொண்டு வேலை முடிந்த உடனே off செய்யுங்கள்!!

கைபேசி மற்றும் உங்கள் பாதுகாப்பு
1. வாகனம் ஓட்டும் போது உபயோகிப்பது தற்கொலைக்கு சமம். நீங்கள் உருப்டியாக ஊரு போய் சேர்வதை தவிற வேறு முக்கியமான விஷயம் எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளவும். தவிர்க்க முடியாத சூழலில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பின் பேசலாம்.

2. மொபைல் தொலைந்து விட்டால், திருடப்பட்டுவிட்டால் உடனே Service providerக்கு செய்தியை சொல்லி SIM கார்டை invalid ஆக்கிவிடவேண்டும். உங்கள் மொபைல் சட்டத்துக்கு புறம்பான காரியங்களில் பயண்படுத்த படலாம். நிச்சயமாக போலீஸிடம் தகவல் தெரிவிக்கவும். (பட்டாப்பட்டி டவுசரோட சிலேட்டில் பெயரை எழுதி ஸ்டேசனில் அமர்ந்து புகைப்படத்துக்கு போஸ் குடுக்கும் லட்சியம் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன்!). இந்த இடத்தில் தான் உங்கள் பில் கைகொடுக்கும்!! உங்கள் IMEI நம்பர், மொபைல் அட்டைப்பெட்டி மேல் அச்சிடப்பட்டிருக்கும்.

3. கண்ட இடத்தில் மொபைலை வைத்துவிட்டு போகாதீர்கள். ஹோட்டல்களில் சாப்பிடும் போது மேஜை மேல் வைக்காதீர். ஆண்கள் சட்டை பாக்கெட்டில் வைக்க வேண்டாம்.

4. தயவு செய்து மொபைல்களை பாத்ரூம்/டாய்லட்டுக்குள் எடுத்துச் செல்லாதீர்கள். நீர் அதிகம் உள்ள இடங்களுக்கு போகும் போது பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு செல்லுங்கள்.

5. Mobile usage ethics, கடைபிடியுங்கள். சினிமா தியேட்டர், இரவு நேர ரயில் பயணம், மருத்துவமனை, போன்ற அமைதியான இடங்களில் உபயோகிக்க வேண்டாம்.

பி.கு: "பேராண்டி, ஒலகத்துல ஓசியா கெடைக்கிறதும், ஓசியா குடுக்குறதும் அட்வைசு மட்டும்தான்டா!"னு எங்க ஆத்தா சொல்லியிருக்கா... அதான் கொஞ்சமா அட்வைசை அள்ளித்தெளிச்சுட்டேன். திட்டுறதுனா திட்டிக்கங்க, அதைவிட்டுட்டு படக்குனு கடைக்கு ஓடிப்போய் ஒரு எழுமிச்சம்பழமும், குங்கும பாக்கெட்டும் வாங்கி செய்வினை வைக்கிற வேலையெல்லாம் வேணாம்... ஒடம்பு தாங்காது.

இன்று அலுவலகத்துக்குள் நுழைந்த உடன் கண்ணில் பட்ட விஷயம், என் தோழியின் புடவை கெட்டப். சரி காலையில் சீக்கிரம் எழுந்திருச்சிருப்பாள் என்று எண்ணிக்கொண்டு வேலையில் மூழ்கிப்போனேன். மதியம் உணவு வேளையில் தான் கவனித்தேன் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் சேலையில் தான் வந்திருந்தனர். மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்த போது அவளே வந்து கேட்டுவிட்டாள் "ஒரு Women's day வாழ்த்து சொன்னா குறைந்தா போய்விடுவாய் " என்று! நாளைக்கு தான மகளிர் தினம் என்று கேட்டேன். நாளை விடுமுறை என்பதால் இன்றே கொண்டாடுகிறார்களாம். ஏகப்பட்ட இனிப்பு, பரிசுப்பொருட்கள் என ஆபீசையே அமர்களபடுத்திவிட்டனர். ஆண்கள் யாரையும் வேடிக்கைகூட பார்க்க அனுமதிக்கவில்லை! போகிற போக்கைப்பார்த்தால் கூடிய விரைவில் ஆண்கள் 10% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன்!!





வலையுலக தோழிகளே, சண்டை போடாமல் ஆளுக்கு ஒரு ரோஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். தங்கள் அனைவருக்கும் எங்கள்(வருத்தப்படாத சிறுவர்கள், வாலிபர்கள் & கிழவர்கள் சங்கம்) சார்பாக

மகளிர் தின வாழ்த்துக்கள்!!

சிறு வயதில் தட்டான் பிடிப்பது (உயிரோடு) என்பது ஒரு கலை. அது எனக்கு கைவந்த கலையாக இருந்தது. சமீபத்தில் எங்கள் வயலுக்கு சென்றிருந்த போது, இன்னும் எனக்கு அந்த திறமை இருக்கிறதா என சோதித்து பார்க்க விரும்பினேன்... மெதுவாக அமர்ந்து ஒரு தட்டானை நோக்கி கையை வீசினேன், அழகாக கைக்குள் சிக்கிக்கொண்டது! லேசாக காலரை தூக்கிவிட்டுக்கொண்டேன்.

தட்டானை கையில் எடுத்தபோதுதான் அதை பார்த்தேன்! தட்டானுக்கு சட்டைபோட்டால் எப்படியிருக்கும் என்று தெரியாது ஆனாலும் தட்டான் முட்டைபோட்டால் எப்படியிருக்கும் என மக்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக எடுத்தேன் மொபைலை கிளிக்கினேன் இந்த படத்தை!! (பெரிதாக காட்ட படத்தின் மீது சொடுக்கவும்)



பி.கு: யாரும் தயவு செய்து புளூகிராஸில் சொல்லிவிடாதீர்கள் (என் கிரகம் பிடிபட்ட தட்டானும் ப்ளூ கலரில் இருக்கிறது!)


வண்டி சேலத்தை தாண்டி சிறிது தூரம் வந்திருந்தது. நன்றாக விடிந்து விட்டதால் நான் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். திடீரென "டமால்(Ka-Boom)" என ஒரு பெரிய சத்தம். எந்த பிரச்சனைக்கும் நான் கடவுளையெல்லாம் தொந்தரவு செய்ததில்லை. இருப்பினும் என்னையறியாமல் "கடவுளே, சத்தம் இந்த பஸ்ஸிலிருந்து வந்திருக்க கூடாது!" என்று வேண்டிக்கொண்டேன். முழுவதுமாக நினைத்து முடிப்பதற்குள் பஸ் ஒரு நிறுத்தத்துக்கு வந்தது. அந்த நேரத்தில் மட்டும் இந்த கடவுள் என் கையில் கிடைத்திருந்தால் கைமா பண்ணியிருப்பேன் ஒரு மனிதனுக்கு இத்தனை சோதனையா??

டிரைவர் இறங்கி வருவதற்குள் நான் குதித்து இறங்கினேன். இப்போது வண்டியை ஓட்டுவது வேறு டிரைவர், கூட அமர்ந்திருப்பது வேறு கிளீனர். பழையவர்கள், ஒரு வேளை சேலத்தில் ரயில் தண்டவாலத்தில் தலையைக்குடுத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. முன்பக்க இடது டையர் முழுவதுமாக உயிரை விட்டிருந்தது!!! டிரைவர் துடிப்பாக அங்கும் இங்கும் எதை எதையோ தேடி ஓடிக்கொண்டிருந்தார். பின்பு தலையில் கையை வைத்து நின்றுவிட்டார். எனக்கு தலை சுற்றியது. என்னய்யா ஸ்டெப்னி இல்லையா என்றேன். ஸ்டெப்னி இருக்கு ஸார் ஆனா ஜாக்கிதான் இல்லை என்றார்.





மயக்கம் போட்டு விழுந்து விடக்கூடாது என்பதற்காக திறந்திருந்த கதவை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்!!! சரி இப்ப என்ன செய்யலாம் என்று கேட்டேன். ஏதாவது ஒரு லாரியை நிறுத்தி ஜாக்கியை வாங்கலாம் சார் என்றார் டிரைவர். அனைத்து லாரி டிரைவர்களுக்கும் பர்வீன் மீது கெட்ட காண்டு என்று நினைக்கிறேன். எங்களை பார்த்தவுடன் ஒதுங்கிக்கூட போகாமல் உரசிக்கொண்டு போனார்கள். எனக்கென்னவோ அடுத்து வரும் லாரியை நிறுத்த முயன்றால் நிச்சயம் நசுக்கிவிடுவான் என்று தான் தோன்றியது. பஸ்ஸில் இன்னும் சில பயணிகள் கடும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். "இந்த ரணகளத்திலும் குதுகலமாய்" இருக்கும் அவர்கள் மீது பொறாமையாக இருந்தது. எங்களோடு இன்னும் சில பயணிகள் சேர்ந்துவிட்டனர். எங்களது பாவப்பட்ட முகங்களை பார்த்து ஒரு லாரி டிரைவர் வண்டியை நிறுத்தி ஜாக்கி கொடுத்து உதவினார். ஜாக்கியை எடுத்துக்கொண்டு கிளீனர் பஸ்ஸுக்கடியில் சென்றார். நான் மொபைலை எடுத்து பர்வீன் ஆபீசுடன் தொடர்புகொள்ள முயன்றேன்.



மொபைலில் ஒரு 15 நிமிட வாக்குவாதத்துக்கு பின் பர்வின் ஆபீஸிலிருந்து வேறு பஸ் அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். எப்படியும் பஸ் ரெடியாகிவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க ஆரம்பித்தோம். ஒரு மணி நேரம் ஆனது எந்த முன்னேற்றமும் இல்லை. நான் குனிந்து பஸ்ஸுக்கடியில் இருந்த கிளீனரிடம் என்ன ஆச்சு என்று கேட்டேன். பஸ்ஸின் அடிப்பாகம் மிகவும் தாழ்வாக இருந்ததால் ஜாக்கியை ஃபிட் பண்ண முடியவிலை என்றார்!!!! இதை கண்டு பிடிக்க ஒன்னேகால் மணிநேரம்!! இதற்குமேல் அங்கே நின்றால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. நானும் என் தங்கையும் நாமக்கல் நோக்கி செல்லும் பஸ்களை நிறுத்திப்பார்த்தோம்... ஊஹூம் யாரும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனக்கென்னவோ பர்வீன் பஸ் பக்கத்தில் நிற்பதால்தான் இந்த பிரச்சனை என்று தோன்றியது. சற்று தூரம் நடந்து சென்று பிறகு பஸ்ஸை நிறுத்த முயற்சித்தோம், சரியாக யூகித்தீர்கள் பஸ் எங்களை ஏற்றிக்கொண்டது. நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் நடுரோட்டில் 9,00 மணி பர்வீன் பயணிகள் யாருமில்லாமல் அம்போ என நின்றிருந்தது! இந்த உலகத்தில் நாம் மட்டுமே பாவப்பட்ட ஜென்மம் இல்லை என்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் வண்டிகள் அனைத்தும் கூட்டமாக இருந்ததால். ஒரு கூட்டமில்லாத வண்டியை பார்த்து ஏறினோம். அந்த வண்டி மெயின் ரோட்டிலிருந்து விலகி செம்மன் காடு, வயல் வெளி, எல்லாம் சுற்றிக்கொண்டு சுமார் 2 மணி நேரம் 15 நிமிடம் கழித்து திண்டுக்கல் வந்தது. அடுத்து நான் எந்த புதிய அனுபவத்திற்கும் தயாராக இல்லை, அதனால் திண்டுக்கல்லில் இருந்து சோலைமலை பஸ்ஸில் செல்ல தீர்மானித்தேன். வண்டி கிளம்ப 45 நிமிடம் ஆகும் என்றார்கள், இருந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஜூஸை குடித்துவிட்டு காத்திருந்து ஏறினோம். ஒரு வழியாக 18 மணி நேர பயணத்துக்குப்பின் மதுரை வந்து சேர்ந்தோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!! லக்கி லுக் பாணியில் சொல்ல வேண்டுமானால் "மதுரை வந்து சேர்வதற்குள் தாவுதீர்ந்து டவுசர் கிழிந்து விட்டது!"

இது பர்வீனில் எனக்கு முதல் அனுபவமல்ல, இந்த பயணத்துக்கு சில மாதம் முன்பு நானும் என் நண்பனும் பர்வீனில் சென்றோம். நான் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன். சேலம் பேருந்து நிலையத்தை தான்டும் போது திடீரென எனக்கு மேலிருந்து தீப்பொறிகள் கொட்டின! அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் படார் என்ற சத்தத்துடன் தீப்பற்றிக்கொண்டது. எனக்கு பயங்கர குழப்பம்! பிறகு தான் தெரிந்தது பர்வீனில் ஏற்றியிருந்த goods மிகவும் அதிகமாக இருந்ததால் ஒன்றன் மேல் ஒன்றாக உயரமாக அடுக்கியிருந்தனர். அது மேலே சென்று கொண்டிருந்த மின்சார கம்பிகளோடு விளையான்டு இந்த வானவேடிக்கை காட்டியுள்ளது. சில வினாடிகள் வண்டி நின்றது, "சுனா, பானா உனக்கு ஒன்னும் இல்லை போயிக்கிட்டே இரு..." என்று என் நண்பன் முனுமுனுக்கவும் வண்டிகிளம்பவும் சரியாக இருந்தது. சிறிது தூரம் சென்ற பிறகு வண்டி ஒரு இடத்தில் நின்றிருந்தது, இறங்கிப்பார்த்த போது நான்கு பக்க டயர்களிளும் காற்று மிகக்குறைவாக இருந்தது. எனக்கோ ஒரே ஆச்சர்யம் எப்படி ஒரு வண்டியில் ஒரே நேரத்தில் இத்தனை டையர்கள் பஞ்சர் ஆகும். பிறகு கிளீனர் சொன்னார் வண்டியின் உயரத்தை குறைப்பதற்காக காற்றை கழட்டிவிட்டார்களாம்!!!!!! இதில் இன்னொரு அதிசயம் என்ன வென்றால் அந்த பஸ் குறைந்த காற்றோடு மதுரை வந்து சேர்ந்து விட்டது (3 மணி நேரம் தாமதமாக)!!

மேட்டர் தெரியுமா உங்களுக்கு? நமது கில்லி, இளைய தளபதி, டாக்டர்(?) ஜோசப் விஜய் தனது கட்சிக்கு, Ooopsie... மன்னிக்கனும் தனது மன்றத்துக்கு கொடி அறிவிக்கப் போகின்றாராம்!!!!


நம்ம நாட்டுல இந்த கொடிகளோட தொல்லை தாங்கமுடியலைப்பா, கர்நாடகாவுல தேசியக்கொடி பறக்குதோ இல்லையோ தெருத்தெருவுக்கு சிகப்பு மஞ்சள் கொடி பறக்குது. போகின்ற போக்கில் எக்கச்சக்கமான கொடிகளை பார்த்து நமக்கெல்லாம் நமது தேசியக்கொடி மறந்து போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தெரு ஓரம்(?) நடப்பட்டிருக்கும் கொடிக்கம்பங்களை ரோடு போடும் போது மாநகராட்சி அகற்றுவதற்கு படும் பாடு இருக்கே, சொல்லி மாளாது!

எப்படியோ முதலமைச்சர் சீட்டுக்கு அடுத்த போட்டியாளர் ரெடியாகிக்கிட்டிருக்கிறார்!!! வாங்க விஜய் வந்து நீங்களும் சீக்கிரம் களத்துல குதிங்க!!

பார்க்க சுட்டி: ThatzTamil


முதலில் நான் கடிகாரத்தை, ஓடுகிறதா என்று பார்த்தேன் நிச்சயமாக ஓடுகிறது மொபைலும் 2,35 என்றுதான் காட்டுகிறது. வெளியே எட்டிப் பார்த்தேன் நிச்சயமாக பெங்களூரேதான்!! வண்டி கிளம்பி கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஓடியிருக்கிறது இருப்பினும் பெங்களூரை தாண்டவேயில்லை. சகபயணிகள் அனைவரும் பயங்கரமாக தூங்கிக்கொண்டிருந்தனர். நீட்டி நிமிர்ந்து படுத்தால் தான் எனக்கு தூக்கம் வரும், எனவே பஸ் தூக்கமெல்லாம் அரைகுறைதான். சிலர் குறட்டைகூட விட்டுக்கொண்டிருந்தனர். கடும் குழப்பத்தில் டிரைவர் கேபின் சென்று கதவைத்தட்டினேன் (சற்று பலமாக தட்டியதில் நிச்சயம் டிரைவர் பயந்திருக்ககூடும்). டிரைவர் கூடவரும் ஆள் (கிளீனர்/2ம் டிரைவர்) கதவைத்திறந்தார். இருந்த கடுப்பில் நிச்சயம் அடித்திருப்பேன் தனியாக வந்திருந்தால்! கோபத்தை அடக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தேன்

நான்: என்னங்க நடக்குது இங்கே? மணி ரெண்டே முக்காலாச்சு இன்னும் பெங்களூர் கூட தாண்டல!
டிரைவர்: சார் வண்டி பிரேக்-டவுன் ஆகிருச்சு.
நான்: பிரேக்-டவுனா?? வண்டி தான் எங்கயுமே நிக்கலையே?
டிரைவர்: ஒன்னும் பிரச்சனை இல்லை சார் எல்லாம் சரியாகிருச்சு

பேசிக்கொண்டிருக்கும் போதே வண்டி மெயின் ரோட்டிலிருந்து விலகி அடர்ந்த யூகலிப்டஸ் காட்டுக்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் புகுந்தது! இருந்த கோபமெல்லாம் பயமாக மாறியது, தனியாக வந்திருந்தாலும் எதையும் சந்திக்கலாம், தங்கைவேறு கூட இருக்கிறாளே!!

நான்: இப்ப எங்கயா போய்க்கிட்டிருக்கீங்க??
டிரைவர்: சார் எங்க வண்டி ஒன்று டீசல் இல்லாம மாட்டிக்கிச்சு அதுக்குதான் டீசல் வாங்க பெங்களூருக்குள் போயிருந்தோம்
நான்: ?????!!!!!!! (கடுமையான குழப்பம்)

எதற்காக அவர்கள், காட்டுக்குள் மாட்டிக் கொண்டார்கள்?? அது என்ன வண்டி?? டீசல் வாங்குவதற்க்கு இத்தனை பேர் கொண்ட பஸ்ஸையா எடுத்துச் செல்வார்கள்?? இவர்களிடம் ஃபோன் இல்லையா?? ஆபீஸுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்காமல் ஏன் இப்படி ஊரை சுற்றுகிறார்கள்?? என ஏகப்பட்ட கேள்வி மனதுக்குள்!
எனக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது இவர்களிடம் தமிழ்நாட்டிற்க்குள் நுழைவதற்க்கு அனுமதி இல்லை!! இது போல ஒரு பர்வீன் சம்பவம் பற்றி என் நண்பன் முன்பு கூறியிருந்தான்!

நான்: உங்களிடம் தமிழ் நாட்டுக்குள் நுழைய பெர்மிட் இல்லை என்றால் முன்னமே கூறியிருக்க வேண்டாமா?? வண்டியை பெங்களூருக்கு திருப்புங்கள் (உச்ச பட்ச டெசிபெல்லில் கத்தினேன், இந்த நிலையில் பெங்களூர் திரும்புவதுதான் பாதுகாப்பானது என்று தோன்றியது)
டிரைவர்: சார் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, இப்படியெல்லாம் பேசாதீங்க சார் (கிட்டத்தட்ட அழுதுவிடுவான் போல இருந்தது)
நான்: சரி மதுரைக்கு கொண்டு போய் சேக்குறாப்புல ஐடியாவாவது இருக்கா??
டிரைவர்: (மௌனம்)

நான் போட்ட கூச்சலில் முன் சீட்டி அமர்ந்திருந்த பயணி எழுந்து விட்டார், எங்கள் பேச்சை கேட்டுக்கெண்டிருந்தவர் நிலமை புறிந்ததும் சண்டையை அவர் தொடர்ந்தார். நான் சீட்டில் வந்து அமர்ந்து என்ன செய்யவேண்டும் என்று யோசித்தேன்! எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது இந்த நடுக்காட்டுக்குள் வண்டியில் இருப்பதை தவிர வேறு வழியில்லை என்று!! சிறிது நேரத்தில் வண்டி திடீர் நிறுத்தத்திற்கு வந்தது. நின்ற இடம் நடுக்காடு!!!

இருக்கையிலிருந்து எழுந்து டிரைவர் கேபினுக்குள் நுழைந்தேன். எங்கள் பஸ்ஸுக்கு முன் வேறு ஒரு பஸ் நின்றிருந்தது. எங்களுக்கு முன் நின்றிருந்த வண்டி, எங்களுக்கு சற்று முன்னால் கிளம்பிய 9,00 மணி மதுரை வண்டி!! அதற்க்கும் முன்னால் ஒரு செக் போஸ்ட்!!!!!

அங்கே ஏற்கனவே பேய் முழி முழித்துக்கொண்டு ஒருவன் செக்போஸ்ட் அதிகாரி அருகில் கையைக்கட்டி நின்று கொண்டிருந்தான். 10 நிமிடம் ஏதேதோ பேசினார்கள், எங்கள் டிரைவர் கையில் இருந்து ஒரு சிறிய கவர் கைமாறியது. பேய் முழி முழித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் புண்ணகை, செக் போஸ்ட் ஆபீசருக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு 9,00 மணி வண்டிக்குள் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தான்! எங்கள் டிரைவரும் வந்து வண்டியை கிளப்பினார். மணி 3,00 ஒரு வழியாக செக்போஸ்ட் தாண்டியாகிற்று! அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டேன்.

மீண்டும் சீட்டில் வந்து அமர்ந்தேன், டிரைவரிடம் சண்டை போட்ட அந்த சக பயணி, தான் எழுந்து பார்த்த போது ஓசூர் மெயின் ரோட்டில் உள்ள செக்போஸ்டில் வண்டி நின்றிருந்ததாக கூறினார். அப்படியென்றால், அங்கிருந்து இந்த இரண்டு வண்டிகளும் திருப்பி கர்நாடகாவுக்குள் அனுப்பப்பட்டிருக்கின்றன, இவர்கள் காட்டுக்குள் இருக்கும் செக்போஸ்ட் வழியாக தப்பிச்செல்ல முயன்று கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றனர்! இதில் பின்னால் வந்த பஸ் திரும்பிச்சென்று பெங்களூரில் உள்ள ஆபீசில் பணத்தை பெற்றுக்கொண்டு, செக்போஸ்ட் ஆபிசர் ட்யூட்டி மாறியதும், லஞ்சத்தை கொடுத்து ஒரு பெரிய நாடகத்தையே நடத்தியிருக்கின்றனர்!!!

எப்படியோ ஒரு வழியாக ஒசூருக்குள் வந்து விட்டோம். வண்டி அங்கே ஒரு கடையில் நின்றது! சட்டென்று என் முன்னால் இருந்த பயணி எழுந்து, நேரம் பார்த்து, பையை எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னிடம் திரும்பி "ஏங்க! கரூர் வந்திருச்சுல்ல??" என்றார் அப்பாவியாக!! நான் சிரிப்பை அடக்கமுடியாமல் பயங்கரமாக சிரித்துவிட்டேன். "இல்லை இன்னும் ஓசூரில் தான் இருக்கிறோம்" என்றேன் சிரிப்பினூடே. அவர் ஆச்சர்யமடையாமல், நிம்மதியடைந்தார் சட்டென்று பையை மேலே வைத்தார், இருக்கையில் அமர்ந்தார், தூங்கிப்போனார்!!!!

சிரித்து சிரித்து கோபம் குறைந்து மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது. எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை தூங்கிப்போனேன். எழுந்த போது மணி காலை 7,30 தங்கையை பார்த்தேன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். சேலத்திலிருந்து ஒரு 35 கி.மீ தாண்டியிருந்தோம். சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த போதுதான் அது நிகழ்ந்தது!

இது பர்வீன் டிராவல்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவியை பற்றிய உண்மைக்கதை (கொஞ்சம் காமடியான கதை)! அந்த அப்பாவி வேற யாரும் இல்லைங்க நானே தான்!!

அது ஜூன் மாதம் 30, 2006; நானும் என் தங்கையும் பெங்களூரில் இருந்து மதுரைக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம். நாங்கள் பர்வீன் டிராவல்ஸில் டிக்கட் எடுத்திருந்தோம். டிக்கட்டில் பஸ் 9:40 PM க்கு மடிவாலாவில் பிக்கப் செய்யும் என எழுதியிருந்தது. நாங்கள் மடிவாலாவுக்கு 9:20 க்கு வந்து சேர்ந்தோம் (ஆனால் ரிப்போர்டிங் டைம் 9:00 என்று டிக்கட் சொல்லியது). பர்வீன் ஆபீசுக்கு சென்று அங்கு அமர்ந்திருந்தவரிடம் டிக்கட்டை காட்டினேன், அவன் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் "கொஞ்சம் பொறுங்கள் பஸ் வந்து கொண்டிருக்கிறது" என்றான். பக்கத்தில் ஒருவர் சென்னை டிக்கட்டை காண்பித்துக்கொண்டிருந்தார், அவருக்கும் இதே பதில்! அவன் டிக்கட்டை கூட பார்க்காமல் சொன்னதும் அவருக்கு ஆச்சர்யம், நிச்சயம் மூஞ்சியில் "இவர் 8,30 பஸ்ஸில் சென்னை போகிறார்" என்று எவனும் எழுதி ஒட்டிவிட்டானா என்று கண்ணாடியில் பார்த்திருப்பார். ஆனால் அவன் கூறிய வார்த்தைகள் பர்வீனில் பயணிக்கும் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று!

இருப்பினும் சில அப்பாவி பயணிகள் ஆபீஸ் முன் தங்கள் காத்திருத்தல் விளையாட்டை ஆரம்பித்தனர்!! நான் கடைக்கு சென்று தண்ணீர் வாங்கிக்கொண்டு என் தங்கை கொண்டு வந்த நூடுல்ஸை சாப்பிட ஆரம்பித்தேன். மீண்டும் பர்வீன் ஆபீசுக்கு 9,55க்கு வந்தோம், அங்கு ஒருவர் அந்த ஆபீஸ் அட்டன்டன்ட்டிடம் பேசிக்கொண்டிருந்தார், விவாதம் சூடாக இருக்கவே நின்று கேட்க தொடங்கினேன்...

பயணி: யோவ் என் பஸ் 9,00 மணிக்கு வரவேண்டியது
பணியாள்: இந்தா வந்துரும் சார்
பயணி: எப்போ??
பணியாள்: சார் உங்களுக்கு பெங்களூர் டிராஃபிக் பத்தி தெரியாதா என்ன?
பயணி: அப்ப என்ன எழவுக்குயா 8,30 க்கு வரனும்னு சொன்னீங்க??
(பாவம் இந்த அப்பாவி டிக்கட்டில் எழுதியிருக்கும் Reporting Time என்ற காமடியை சீரியஸாக எடுத்துக்கொண்டார் போலும்)
பணியாள்: (எக்கச்சக்கமான மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கடுப்பாகி) நான் பர்வீன்ல வேலை பாக்க வந்தேன் பாருங்க என்ன பிஞ்ச செருப்பாலையே அடிச்சுக்கனும்.
(சட்டென்று எழுந்து ஓட்டமும் நடையுமாக ஆபீஸுக்குள் நுழைந்து கொண்டார்)

மணி 9,58 ஒரு வழியாக 9 மணி பஸ் வந்து சேர்ந்தது, பின்னாலேயே 9,40 பஸ்!! உலக அதிசயம் VIII!!! நான் பஸ்சில் ஏறும் போது, கூட ஏறியவரின் டிக்கட்டை கவனித்தேன், அவரது டிக்கட்டில் பஸ் டைமிங் 9,30 என்று இருந்து கட்டணம் 400 ரூ-வாக இருந்தது. என் டிக்கட்டில் நேரம் 9,30 என்றும் கட்டணம் 500 ரூ என்றும் இருந்தது. எனக்கு அப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டது!! பின்பு தெரிந்து கொண்டேன் ஒரு ஒருவருக்கு ஒரு unique நேரமும் கட்டணமும் குறிக்கப்பட்டுள்ளது என்று. பஸ்ஸில் இட ஒதுக்கீட்டு குழப்பங்களுக்கும், அமளி துமளிக்கும் நடுவே ஒருவன் வந்து அனைவரிடமும் டிக்கட்டை வாங்கிக்கொண்டு போனான். அப்போது எங்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை இது எப்பேர்பட்ட தந்திரம் என்பது!

பஸ் A/C செய்யப்பட்டிருந்தது, VOLVO பஸ்களை போல வெளியே உயரமாக இருந்தது இருப்பினும் இது VOLVO பஸ் இல்லை. உள்ளே மற்ற ஏர் பஸ்களை போல தாழ்வான இருக்கைகள் தான். இந்த பஸ்ஸெல்லாம் கவுந்தால் கவுத்துப்போட்ட ஆமை மாதிரி எந்திரிக்கவே முடியாது என்று தோண்றியது.

பஸ்சில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு அழகான 6 இன்ச் LCD டீவி இருந்தது (விமானத்தில் இருப்பதைப்போல!). அந்த வினாடியில் என் வாழக்கையில் பார்த்த சிறந்த பஸ் எது என்று கேட்டால் இந்த பஸ்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லியிருப்பேன்! ஒரு சக பயணி ஆர்வ மிகுதியால் ஏன்பா "இந்த டீவியை கொஞ்சம் போடுங்கப்பா" என்றார். டிரைவர் "சார் டீவியை போட்டா ஏசி ஓடாது" என்றதும் கடுப்பாகி அந்த பயணி "அப்ப பேசாம இஞ்சின நிருத்திருயா" என்றார். சிறிது நேரத்தில் பஸ் கிளம்பி ஓட ஆரம்பித்தது... நானும் முந்தய இரவில் ஆபீஸில் கண்முழித்து வேளை பார்த்த அசதியில் தூங்கிப்போனேன். பஸ் நிற்காமல் ஒடிக்கொண்டே இருந்ததை உணரமுடிந்தது.

மறுநாள் காலை 2,30 க்கு வண்டி ஒரு இடத்தில் நின்றிருந்தது. என்ன நடக்கிறது என்று கீழே இறங்கிப்பார்தேன். அங்கே டிரைவர் ஒரு பெரிய கேன் எடுத்து டீசல் வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக வண்டி சேலத்தை தாண்டிவிட்டது என நினைத்து சந்தோஷப்பட்டேன். மீண்டும் பஸ் கிளம்பியது நானும் வண்டியில் ஏறினேன். என் தங்கை தூக்கம் கலைந்து "எங்கணே இருக்கோம்" என்று கேட்டாள் நானும் சிரத்தையாக "சேலத்தை தாண்டி வந்துட்டோம்னு நினைக்கிறேன்" என்றேன். பிறகு இருக்கையில் அமர்ந்ததும் மொபைலை எடுத்து ஏரியா பார்த்த போது "Electronics City" என்று காட்டியது!!!! நாங்கள் இன்னும் பெங்களூரில்தான் இருந்தோம்!!!

நீங்கள் நீலச்சட்டை போட்டுக்கொண்டு பந்தடிப்பவர்களை மெச்சுபவர் இல்லையா?? நீங்கள் கிரிக்கெட் என்ற விளையாட்டில் ஆர்வம் இல்லாதவரா??? ஆம், என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு தேச துரோகி! அட, நான் சொல்வது உண்மைதான், பல கோடி மக்கள் வாழும் இந்த மாபெரும் துணைக்கண்டத்தின் மானத்தையும், புகழையும் காப்பது யார் என்று நினைத்தீர்கள்?? இந்த நீல சட்டை வீரர்கள் தான்! நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் பிரதமருக்கோ, தேர்ந்து எடுக்கும் உங்களுக்கோ இந்த நாட்டின் மானத்திற்கோ எந்த சம்மந்தமும் இல்லை என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? "Who represents India?" என்று ஒரு உண்மைக் குடிமகனிடம் கேளுங்கள் "Men in Blue" என்று அழகாக சொல்லுவார்கள். அப்ப ஜனாதிபதியெல்லாம் சுத்த வேஸ்ட்டா என்ற அபத்தமான கேள்வியை கேட்டால் "யாரோ ஒரு அம்மாதான் ஜனாதிபதி ஆனா அந்தம்மா பேருதான் நியாபகத்தில் இல்லை" என்று பதில் கிடைக்கும்!

ஒரு ஒரு ஒலிம்பிக் போட்டிகளிளும் ஒரு வெங்கலம் அல்லது ஒரு வெள்ளி வாங்குவது இந்தியாவுக்கு பெருமையாம், இந்த நீலச்சட்டை நாயகர்கள் ஒரு நாள் உலகக் கோப்பையில் வெளியேறியது இந்தியாவுக்கு பெரும் அவமானமாம்?? உலகில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் வெறும் 10 நாடுகள் பங்கு பெரும் கிரிக்கெட் போட்டி எப்படி உலகக் கோப்பையானது என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. அனைத்து நாடுகளும் பங்கு பெரும் ஒலிம்பிக் ஒரு பொருட்டே அல்ல!!

முதலில் இந்த நீலச்சட்டை நாயகர்களின் யோக்யத்தை பார்கலாம். இந்த நீலச்சட்டை விரர்கள் BCCI என்ற பணம் காய்க்கும் நிறுவனத்தின் செல்லப்பிள்ளைகளே அன்றி இந்தியாவின் நேரடி செல்லப்பிள்ளைகள் அல்ல (உண்மையில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை தாங்கிப்பிடிக்க ஒலிம்பிக் வீரர்கள் தான் வேண்டுமேயன்றி இந்த நீலச்சட்டைகரர்கள் அல்ல). போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக பயிற்சியில் ஈடுபடுவது போல் பத்திகைக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு தண்ணியைப்போட்டு மட்டையாகிக் கிடந்த மேட்டர் இவர்கள் தோத்தால் மட்டும் பத்திரிகையில் இடம்பெரும். இவர்களில் எத்தனை பேர் வருமான கணக்கு சரியாக காண்பித்து வரி செழுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? உண்மையைக்கூற வேண்டும் என்றால் சரியாக வரி செழுத்தாமல், சரியாக விளையாடாமல் கிடைத்த பெயரை பணமாக்குவதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் அல்லவா தேச துரோகிகள்?

இவர்கள் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டார்கள் திருந்த வேண்டியது நாம்தான், கிரிக்கெட் ஒரு சாதாரன விளையாட்டு இதுவும் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு, இதை நாட்டோடு சம்மந்தப்படுத்தி கொண்டாடாமல் இருப்போம்!!

தமிழில் பொதுவாக பெண்களை குறிப்பிடும் போது மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட நேர்மாறாக குறிப்பிடுகின்றனர் ஆண்களை "Cool Guys" என்றும் பெண்களை "Hot Girls" என்றும் கூறுகின்றனர். தமிழில் நெருப்பு என்று ஆண்களையும் பஞ்சு என பெண்களையும் குறிப்பிடுகின்றனர்.

இது மட்டுமல்ல நாமெல்லாம் கங்கா, யமுனா, காவேரி என ஆறுகளுக்கு பெயர் வைக்கிறோம் ஆனால் ஆங்கிலத்திலோ கத்ரீனா, ரீட்டா என புயலுக்கும், சூராவளிக்கும் பெயர் வைக்கின்றனர். இந்த முரண்பாடு ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சற்று விளக்குங்களேன்.

கணினி உபயோகிப்போர் அனைவருக்கும் வைரஸ் என்பது மிகவும் பழக்கமான வார்த்தை. வைரஸ்ஸை தடுப்பதற்க்கு ஆன்டி-வைரஸ் தான் ஒரே வழி என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் முறையான செட்டிங் செய்வதாலும், இன்டர்நெட், பென்டிரைவ் பயன் படுத்தும் போது கவனமாக இருப்பதாலும் பெரும்பாலான வைரஸ்களை தடுக்க முடியும். Virus/Trojans/Worms தடுப்பதற்க்கு சில வழிமுறைகளை கீழே பார்க்கலாம்

பயனர் அக்கவுன்ட் உபயோகம்
* உங்கள் கணினியில் இரண்டு பயனர் (User) அக்கவுன்ட்கள் உருவாக்குங்கள்.
* ஒரு பயனருக்கு கணினி நிர்வாக உரிமையை வழங்குங்கள் (Administrator Rights)
* இன்னொறு பயனருக்கு உபயோக்கிப்போர் உரிமையை வழங்குங்கள் (User Rights)
* முதல் பயனர் அக்கவுன்டை கணினி நிர்வாகத்திற்கு (புதிய மென்பொருள் நிறுவுதல், காலத்தை மாற்றியமைத்தல்) முதலியவற்றுக்கு பயன்படுத்துங்கள்
* இரண்டாவது பயனரை மற்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்துங்கள் (Web Browsing, programming, image viewing, movie watching etc..)

Autorun Disable செய்தல்
* பென்டிரைவ், சி.டி, முதலிய வெளியில் எடுத்துச் செல்லக்கூடிய மீடியங்களின் மூலம் பரவும் வைரஸ், வின்டோஸில் உள்ள ஆட்டோரன் (Autorun) சேவையை பயன்படுத்துத்திக்கொள்கிறது.

* ஆட்டோரன் சேவை பெரும்பாலான நேரங்களில் நமக்கு தேவைப்படுவதில்லை அதனால் அதை Disable செய்வது நல்லது.

* Start Menu->Run க்கு சென்று gpedit.msc என்று டைப் செய்து OK பட்டனை அழுத்துங்கள். கீழ்கானும் வின்டோ திறக்கும்
* படத்தில் உள்ளதைப்போல இடதுபுறம் உள்ள கிளையில் User Configuration --> Administrative Templates --> System என்ற ஃபோல்டரை திறந்து வலது புறம் உள்ள
Turn off Autoplay என்ற ஐட்டத்தை இரண்டு முறை சொடுக்குங்கள் (Double Click).

* புதிதாக தோன்றும் வின்டோவில் Enabled என்பதை தேர்வு செய்து All Drives என்பதை தேர்வு செய்யவும். OKவை சொடுக்கி வின்டோவை மூடுங்கள்

எக்ஸ்டன்ஷனை காட்டச்செய்தல்
* பல வைரஸ்கள் பார்பதற்கு ஃபோல்டர்களை போலவே காட்சியளிக்கும், ஆனால் அவற்றின் எக்ஸ்டன்சன் .exe என்று இருக்கும் (கீழே உள்ள படத்தை பார்க்கவும், பச்சைவட்டம் உன்மையான ஃபோல்டர், சிகப்பு வட்டம் வைரஸ்)
* எக்ஸ்டன்ஷன் காட்டப்படவில்லை என்றால், இதுபோன்ற வைரஸ்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது
* வின்டோஸ் பைல் எக்ஸ்டன்ஷன்களை காட்டுவதற்க்கு Control Panel-->Folder Option திறந்து கீழ் காணும் படத்தில் உள்ளது போல் Hide Extensions for known file types என்ற டிக் பாக்ஸில் உள்ள டிக்கை எடுத்துவிடுங்கள்.
* .exe, .pif, .scr, .com, .bat, .cmd போன்ற எக்ஸ்டன்ஷன்களை கொண்ட பைல்களை (நீங்கள் நிறுவாமல் இருக்கும் பட்சத்தில்) சொடுக்காதீர்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் கண்ட கண்ட IE Toolbar-களை நிறுவாதீர்கள்!!!


பெரும்பாலும் வைரஸ்கள் நமது கவனக்குறைவால்தான் பரவுகின்றன, கவனமாக இருந்தால் வைரஸ்கள் ஒன்றும் பெரிய தொல்லை கொடுக்கமுடியாது.

கொலைக்கான அர்த்தம் நமக்கு மனிதனின் உயிரை எடுத்தல் என்றுதான் சொல்லித்தரப்பட்டுள்ளது. ஆனால் மனிதனின் உயிரை எடுப்பதைவிட கொடூரமான கொலைகள் நமது கண்முன் நடந்தும் நாமெல்லாம் அதை கண்டுகொள்ளாக் குருடர்களாகவே வாழ்கிறோம். எனது இந்தப்பதிவு கொலையாகும் மனிதர்களைப்பற்றியல்ல, மனிதானால் கொலை செய்யப்படும் இயற்கை பற்றியது!

இயற்கை உலகத்திற்கு அளித்துள்ள பல பரிசுகளுள் முக்கியமானது மரங்கள்! ஒரு விதை நல்ல மரமாக வளர்வதற்க்கு குறைந்தது 100 வருடங்கள் பிடிக்கிறது, அதன் ஆயுள் காலம் முடிவதற்கு சில 100 வருடங்கள் ஆகிறது. வெறும் 20 ஆண்டுகளில் இளமையடைந்து, 60 ஆண்டுகளில் மாண்டுபோகும் மனிதன் மரங்களை கொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்?

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினமும் தன் வாழும் இடங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனக்கு ஏற்ப தான் வாழும் இடங்களை மாற்றியமைக்கிறான்! இதை நாமெல்லாம் நாகரீக வளர்ச்சி என்று மார்தட்டிக்கொள்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நம் உலகத்தில் உள்ள மற்ற உயிர்களை அழிப்பது மட்டுமல்லாமல் நம்மையும் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

மேலே உள்ள படங்கள் பெங்களூரில் எடுக்கப்பட்டவை! பெங்களூர் 7 வருடங்களுக்கு முன்னால் நான் வந்த போது "பூங்கா நகரம்" - ஆக இருந்தது, இன்றோ இது "புழுதி நகரம்"-ஆக உள்ளது. நான் பெங்களூர் வந்தபோது ஜூன் மாதம், குற்றாலித்தில் இருப்பது போல் காற்றில் மிதக்கும் சாரல், லேசான வெண்பனி, அடர்ந்த மரங்கள், என சொர்கத்திற்குள் நுழைந்த மாதிரி இருந்தது. சூரிய வெளிச்சத்தை பார்க்க கிட்டத்தட்ட பல மாதங்கள் பிடித்தது. தமிழ் நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் கூட இங்கு மிதமான வெப்பமாக இருக்கும் வெய்யில் தரையில் படாத அளவுக்கு மரங்கள் இருக்கும், ரோட்டோரங்களில் நடப்பதே சுகமாக இருக்கும். இன்றோ நிலமை தலைகீழ் பகலில் சுட்டெரிக்கும் வெய்யில் மற்றும் தூசு, இரவில் கடும் குளிர்! பாலைவனத்தில்தான் இவ்வாறு இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மரங்கள் அனைத்தையும் வெட்டி ஒரு நகரத்தையே பாலைவனம் ஆக்கியாகிற்று, என்ன ஒரு சாதனை!!

இந்த பூமி நமக்களித்த வளங்களை எல்லாம் நன்றாக சுரண்டிவிட்டு, நாம் இருதியாக நமது சந்ததியினருக்கு விட்டுப்போவது வெறும் கான்க்ரீட் காடுகளைத்தான்!

நேற்று "I am Legend" - இன் DVD வாங்கினேன். வாங்கும்போது சிறிது தயக்கமாகத்தான் இருந்தது, இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு பரபரப்பான செய்தியையும் கேட்டிருக்கவில்லையே. ஆனால் படத்தின் பெயர்மட்டுமல்ல படமே ஒரு Legend என்பதை பிறகு புரிந்துகொண்டேன்.


நம்மைத்தவிர, இந்த உலகத்தில் உள்ள அனைவரும் திடீரென்று இறந்துவிட்டால் என்னவாகும் என்று நாம் சில சமயம் நினைத்துப்பார்ப்போம். அந்த நினைவுகளை கண்முன் நிறுத்தும் ஒரு மிகச்சிறந்த படம்தான் இது. வில்ஸ்மித்தை எனக்கு அவ்வளவாக பிடிக்காது, இந்த படம் பார்த்ததிலிருந்து நான் அவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன்!!

புற்று நோயை குணப்படுத்த, மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் கிருமி, புற்று நோயை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் மிகவேகமாகப் பரவி மனித இனத்தையே அழித்து விடுகிறது. நியூயார்க்கில் கிருமியால் தாக்கப்படாத ஒரே மனிதன் Dr. Robert Neville (வில்ஸ்மித்), நோயால் தாக்கப்படாத மற்றவர்களை தேடுவதோடு, நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலையிலும் இறங்குகிறார். உலகத்தில் உள்ள 90% மக்கள் கிருமியின் தாக்கத்தால் உயிரிழக்கின்றனர். 9% மக்கள் கிருமியால் தாக்கப்பட்டு, வெறிபிடித்த Zombi-களை போல அலைகின்றனர், மீதமுள்ள 1% மக்களும் தனிமை வாட்டத்தால் தற்கொலை செய்துகொள்கின்றனர், இன்னும் சிலர் கொலைசெய்யப்படுகின்றனர், வில்ஸ்மித் தனி மனிதனாக நியூயார்கில் வலம் வருகிறார். இந்த தனிமனிதன் தனது இனத்தை பல பிரச்சனைகளுக்கு மத்தியில் எவ்வாறு காப்பாறுகிறார் என்பதை அழகாக சொல்லும் படம்தான் "ஐ ஆம் லெஜன்ட்".

படத்தின் சிறப்பம்சங்கள்

* படத்தில் செட்டிங் மிகவும் அற்புதமாகவும் தனிமையின் கொடூரத்தை கண்முன் நிறுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது


* இடையில் காட்டப்படும் ஃப்ளாஷ் பேக்குகள் மக்கள் இருக்கும் போது உள்ள நகரத்திற்கும், மக்கள் இல்லாத நகரத்திற்கும் வேறுபாட்டை அழகாக சொல்கிறது


* தனிமை வாழ்கையில் தனது ஒரே நண்பனான Sam என்ற நாயை இழந்து கதாநாயகன் தவிப்பது, Human Psychology-யை அப்படியே பிரதிபலிக்கின்றது


* வில்ஸ்மித், நாயை இழந்து வீடியோகடைக்கு வந்து பொம்மையிடம் ஹலோ சொல்லச்சொல்லி கெஞ்சுமிடத்தில் சென்டிமென்டாக நெஞ்சை தொட்டுவிடுகிறார்


* கதை சொல்லும் விதமும், character development-ம் மிக மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது


* படத்தில் எல்லாக்காட்சிகளிம் பல நுணுக்கங்கள் உள்ளன, வில்ஸ்மித் Shrek-3 படத்தை பார்த்து அனத்து வசனங்களையும் அச்சு அசலாக கூறும் போது அவர் அதை எத்தனை முறை பார்த்திருப்பார் என்பதும் தனிமை எவ்வளவு கொடுமை என்பதும் தெரியும்


* தனது ஆராய்ச்சியை பதிவுசெய்யும் காட்சிகள் மிக மிக நேர்த்தியானவை!!

நீண்ட நாட்களுக்கு பிறகு மிகச்சிறந்த ஒரு படம் பார்த்த திருப்தி மனதில் நிற்கின்றது. ஒருவழியாக பீமா முதல் நாள் காட்சி பார்த்த பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டேன்.