அது நான் 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். திருமங்கலம் PKN மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன். அன்று வெள்ளிக்கிழமை நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், ஞாயிற்றுக்கிழமை எங்கள் பள்ளியிலிருந்து செல்லும் சுற்றுலாவுக்கு என் பெற்றோர் 100ரூ கொடுத்துவிட்டு சென்றிருந்தனர். 80 ரூ சுற்றுலா கட்டணம் 20ரூ செலவுக்கு... 20ரூ என்பது எனது 1 மாதத்துக்கான பாக்கெட் மணி! கையில் ஏற்கனவே என் சேமிப்பில் இருந்த 5ரூபாயும் இருந்தது, நானும் என் நண்பனும் அன்று சினிமாவுக்கு போகலாம் என முடிவு செய்தோம். அப்போது பானு தியேட்டரில் "பூவே உனக்காக" படம் ஓடிக்கொண்டிருந்தது. மாலை பள்ளி முடிந்ததும் மாலை காட்சிக்கு தியேட்டர் முன் ஆஜராகியிருந்தோம்.

தியேட்டரில் சரியான கூட்டம், நான் டிக்கெட் கவுண்டருக்குள் நுழைந்தேன்... திடீரென்று பாக்கெட்டிலிருந்த தனலட்சுமி நியாபகத்துக்கு வரவே, அதை எடுத்து பாதுகாப்பாக என் நண்பன் கையில் திணித்துவிட்டு கவுண்டருக்குள் நுழைந்தேன். தியேட்டருக்கு வெளியே ஒரு மூலையில் ஒருவன் லங்கா கட்டை உருட்டிக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி சில தடியர்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். சில லுங்கிக்கார இளைஞர்கள் சுற்றி அமர்ந்து 50 பைசா 1ரூபாய் நாணயங்களை கட்டங்களில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். என் நண்பனிடம் அவர்களுக்கு மிக அருகில் போகாதே என்று எச்சரித்துவிட்டு நான் கூட்டத்துக்குள் நுழைந்தேன்.

ஒரு வழியாக அடித்து பிடித்து டிக்கட் வாங்கிக்கொண்டு, மகிழ்ச்சி பொங்க வந்து வெளியே பார்த்தபோது என் நண்பனை காணவில்லை!!! அங்கே லங்கா கட்டை உருட்டிக்கொண்டிருந்த அந்த கூட்டத்தையும் காணவில்லை... அட்ரினலின் உடலில் அதிகமாக சுரப்பதை என்னால் உணரமுடிந்தது. ஒரு வழியாக அங்குமிங்கும் தேடி கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தவனை கண்டுபிடித்தேன். என்னடா ஆச்சு உனக்கு என்றேன் அதிர்ச்சியடந்தவனாய்! அங்கே லங்கா கட்டை உருட்டும் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது, பக்கத்தில் நின்ற தடியன் கையிலிருந்த 100ரூபாயை பிடிங்கி ஆட்டத்தில் போட்டுவிட்டான், கட்டையை உருட்டி 100ரூபாயை சுருட்டிக்கொண்டு ஓடி விட்டான் என்றான் கண்ணீரினூடே. என் தலையில் ஒரு பலத்த இடி விழுந்தது, ஏனோ திடீரென, ஒரு ஃபோட்டோவை எட்டாக கிழித்து மூலைக்கு மூலை நூலைக்கட்டி இன்ச் பை இன்சாக இழுக்கும் காட்சி நினைவில் வந்து இம்சை படுத்தியது. ஆத்திரத்திலும், இயலாமையிலும் கண்கள் சிவந்து நீர் கோர்த்தது. அப்போதைய நூறு ரூபாய் என்பது இன்றைய ஒரு லட்சத்துக்கு சமம்.

நான் நிச்சயம் போலீஸில் சொல்லவேண்டும் என்றேன். அவனும் அரை மனதாக ஒப்புக்கொண்டான். உடனே போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். சிறிது நேரத்தில் அவனுக்கு கைகால்கள் உதற ஆரம்பித்தது. மேலும் போலீஸிடம் போகவேண்டியது இருந்தால் அவர்களுக்கு கட்டியழ ஒரு பத்து ரூபாயாவது வேண்டும், என்னிடம் பத்து காசுகூட இல்லை இருந்த காசும் டிக்கெட் எடுப்பதில் செலவழித்தாகிவிட்டது. எனக்கும் போலீஸ் ஸ்டேஷன் போவதில் தயக்கம் இருந்தது. அட்லீஸ்ட் எடுத்த டிக்கட்டுக்கு படமாவது பார்கலாம் என்று மீண்டும் தியேட்டருக்கு திரும்பினோம். நான் படம் பார்க்கும் மூடில் இல்லை. இருந்தாலும் இருவரும் தியேட்டர் சீட்டில் அமர்ந்தோம். எப்போது எதையாவது பற்றி சதா பேசிக்கொண்டே இருக்கும் நாங்கள் கிட்டத்தட்ட அரைமணி நேரமாக எதுவும் பேசாமல் இருந்தோம். படம் ஆரம்பித்தது, அந்த சமயத்தில் படத்தோடு படமாக ஒன்றி கதாநாயகன் அழும் போது அழுது, சிரிக்கும் போது சிரித்து மகிழும் கூட்டத்தில் ஒருவன். படம் போகப் போக எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என் வாழ்நாளில் பார்த்த ஒரு அற்புதமான படம் என்று எண்ணத்தொடங்கினேன். கதையும், அதிலிருந்த சிறு முடிச்சும் அவிழக்கப்பட்ட விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. படம் முடிந்து வெளியே வந்த போது கதாநாயகனும் கதாநாயகியும் ஜோடி சேராதது தான் எனக்கு மிகப்பெரிய கவலையாய் இருந்தது. அடுத்தநாள் என் நண்பனின் செலவுக்கு அவர்கள் வீட்டில் கொடுத்த ரூபாயையும் எனது டீச்சர்களிடமிருந்து வாங்கிய கொஞ்சம் கடனும் சேர்த்து ஒருவழியாக 80ரூபாய் தேரியது.

மீண்டும் இன்று நான் அதே படத்தை பார்த்தேன்... அந்த படம் எனது முந்தைய சோக நிகழ்ச்சியின் நினைவுகளை கிளறியதே தவிற, முன்பிருந்த லயிப்பு அதில் இல்லை. அறிவின் முதிற்ச்சி காரணமாக எந்த திரைப்படத்தை பார்த்தாலும் அதிலுள்ள செயற்கைதனம் மட்டுமே பிரதானமாக தெரிகிறது. நிச்சயம் சிறுவயதில் சினிமா வெறியனாக இருந்த கருப்பன், இன்று தொழில்நுட்பத்தில் முன்னேறி சினிமாவில் ஒரு ஃபிரேமில் உள்ள ஆயிரம் குறைகளை கண்டுபிடிக்கும் திறம் படைத்த இந்த கருப்பனைவிட சந்தோஷமானவன், வாழ்கையை மகிழ்ச்சியாக கழித்தவன்!!

நிச்சயம் Ignorance is Bliss (அறியாமையே மிகப்பெரிய பேரின்பம்)!!