கணினியில் Top Ranking விளையாட்டுகளுள் ஒன்றான GTA (Grand Theft Auto)வின் நான்காவது வெர்ஷனை இன்று Rock Star Games நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று Microsoft's xbox, Sony Playstation 3 இரண்டுக்குமான வெர்ஷன்கள் மட்டும் வெளியிட்டுள்ளது. இன்னும் PC வெர்ஷன் வெளியிடப்போகும் தேதி குறிப்பிடபடவில்லை.

GTA விளையாட்டுகள் முற்றிலும் 3-டி விளையாட்டு, நேர்த்தியான வடிவமைப்பும் விளையாட்டு யுக்திகளும் இந்த விளையாட்டை கணினி விளையாட்டுளின் ராஜாவாக மக்கள் கருத காரணமாயிருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும். கேம் ஸ்பாட்டில் 10/10 ரேட்டிங் வாங்கியிருக்கிறது!!

பி.கு: இந்த விளையாட்டு M ரேட்டிங் பெற்றுள்ளது அதனால் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாடலாம்!!



போன வாரம் நானும் என் தம்பியும் அக்கா வீட்டுக்கு போயிருந்தோம். அக்காவுக்கு சொல்லப்போனால் வீடெல்லாம் கிடையாது. தென்னந்தோப்பு, சுற்றி வயல்வெளி தண்ணீருக்கு கிணறு, கிணற்றை ஒட்டிய மோட்டார் ரூம், அதனோடு இணைந்த ஒரு தகர கூறை ரூம். இந்த தகர கூறை ரூம் தான் அக்காவின் வீடு. அக்காவின் வீட்டுக்குள் 24 மணி நேரமும் டீவி ஓடிக்கொண்டிருக்கும் (உபயம் அக்கா மகள்). மாமா, புதிய திரைப்படம் வந்துவிட்டதென்றால் எங்கேயிருந்தாவது டிவிடி வாங்கிவந்துவிடுவார். என் அக்கா மகள் ஒரு தெய்வப்பிறவி, பின்னே "ஒரு வினாடி கூட காணச்சகிக்காத படங்கள்" என்று தமிழ் பட ரசிகர்களே தியேட்டரை விட்டு விரட்டிய படங்களை கூட பத்து பதினைந்து முறை பார்த்துவிடும் சக்தி மனிதப்பிறவிக்கா இருக்கமுடியும்??

அக்காவின் சமயலறை வீட்டுக்கு வெளியே திறந்தவெளி விறகு அடுப்பு தான். நான் பொதுவாக தெய்வப்பிறவியை தொந்தரவு செய்வதில்லை அதனால் அக்கா சமயல் செய்யும்போது "உள்ளூர் பொறனி" பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்துவிடுவேன். அன்றும் அது போல அடுப்படி அருகில் அமர்ந்து அக்காவிடம் ஒரு வாரம் ஊரில் என்ன நடந்தது என்று Frame By Frameஆக விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தேன்.

டீவி வால்யூம் அதிகமாக இருந்ததால் உள்ளே ஓடும் வசனங்களை தெளிவாக கேட்கமுடிந்தது. ரகுவரன் தனது பாணியில் சிறப்பாக வசனம் பேசிக்கொண்டிருந்தார். சரி ஒரு நிமிடம் என்ன படம் என்பதை கண்டுபிடிக்கும் ஆவலோடு வசனங்களை கேட்க ஆரம்பித்தேன். தனுஷ் தனது வழக்கமான பாணியில் அப்பா மேல் உள்ள அளவுக்கு மிஞ்சிய பாசத்தால் வாடா, போடா, மாமூ, மச்சி, இன்ன பிற கெட்ட வார்த்தைகளை சராமரியாக உபயோகித்துக் கொண்டிருக்க "என்னடா இது?" என்றேன் என் தம்பியிடம். என் மனதைபுறிந்து கொண்டவனாக, "அப்பாவை நண்பன் மாதிரி நடத்துறாராம்" என்றான். எங்கள் அப்பாவை நாங்களும் நண்பன் போலத்தான் நடத்துவோம் அதற்காக எந்த நண்பனையும் இப்படி கேவலமாக நடத்தியதில்லை. எனக்கு தோன்றிய அதே எண்ணம் என் தம்பிக்கும் தோன்றியிருக்க வேண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

பிறகு நடந்த உரையாடலில் (அட டீவியில் தான்பா) தனுஷ் வேலை தேடி ஒரு ஐடி கம்பனியில் கலந்துறையாடும் காட்சியில் வரும் வசனங்களை கேட்டேன். எல்லாரும் ஏதோ பேச தனுஷ் மட்டும் யா.. யா... என்று சொல்லிக்கொண்டிருப்பார். உடனே யாரோ ஒரு பெண் இவரை தமிழிலேயே பேசச்சொல்ல(கதாநாயகியாகத்தான் இருந்திருக்க வேண்டும், இதை கண்டுபிடிக்க CBIயா வரவேண்டும்?)... தனுஷ் க்கும்.. க்கும்... (தொண்டைய சரிசெய்துகொண்டு), "வாக்காளர் பெருமக்களே... நீங்கள்...." என்று ஆரம்பித்து ஒருவழியாக முடிக்கிறார் (ஏனோ எனக்கு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒட வேண்டும் என்று எழுந்த அனிச்சை உணர்ச்சியை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்)!

அடுத்ததாக தனுஷ் இன்டர்வியூவுக்கு செல்கிறார், செல்வதற்க்கு முன் வழக்கம் போல அப்பாவை "உன்னை யாரு இங்க வரச்சொன்னது, உன் மூஞ்சியில முழிச்சுட்டேன்ல இன்னி உருப்பட்டாப்லதான்" என்று நல்லவிதமாக ஆசீர்வதித்துவிட்டு செல்கிறார் (இது போன்ற பாசத்தை நீங்கள் உங்கள் தந்தையிடம் காட்டியதுண்டா?? உங்கள் மகன்கள் உங்களிடம் காட்டியதுண்டா?? அப்படியென்றால் உங்களுக்குள் நண்பர்கள் போண்ற உறவு இல்லை! அட நான் சொல்லலைபா தனுஷ் சொல்லுறார்). இன்டர்வியூவில் Mutithread, semaphore, என்று ஏதேதோ வார்த்தைகள் ஒலிக்க. எனக்குள் விழிப்பதற்க்கு காத்திருந்த மிருகம் பிடரியை சிலிர்த்துக்கொண்டு எழுந்தது!

சில சமயம், ஒரு சில கொலைவெறி படங்களை நான் சில மணிநேரம் பார்ப்பதற்கு இந்த கொடூர மிருகம்தான் காரணம். ஒரு சமயம் விஜய் நடித்த "புதிய கீதை" எனும் படத்தையே 45 நிமிடம் பார்த்திருக்கிறேன் என்றால் பாருங்களேன்!!!! இந்த கொடிய மிருகம் என்னை எழுப்பி வீட்டுக்குள் அழைத்து சென்றது, என் தம்பியும் ஆர்வமாக பின்தொடர்ந்தான். "என்ன படம் டீ...?" என்றேன் தெய்வப்பிறவியிடம். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை தனது கடமையில் கண்ணாக இருந்தாள். "இந்த ரேஞ்சுல டீவி பாத்தா ஏழாவது ஏழு வருசங்கழுச்சு தான் பாஸ் பண்ணப்போற" என்று கூறி என் மீசையில் இருந்த மண்ணை தட்டிவிட்டேன் (அதற்கும் No Reaction).

சரி என்று டீவி பக்கம் கவனத்தை திருப்பினேன். தனுஷ் கணினி முன் அமர்ந்து ஏதோ டைப் செய்ய ஆஃபீஸில் உள்ள அனைத்து கணினியிலும் ஏதேதோ ஓட அனைவரும் மிரள்கின்றனர் (நான் உள்பட). என் தம்பி என்னை திரும்பி பார்த்தான். "இவன் சாஃப்ட்வேர் இன்சினியர், எப்படி வந்த உடனே அதிரவைக்கிறான் பாரு, நீயும்தான் இருக்கியே பூமிக்கு பாரமா, வெளிய சொல்லாத நீ ஒரு சாஃப்ட்வேர் என்சினியர்னு அது தனுசுக்குதான் அசிங்கம்" என்ற எள்ளல் அந்த பார்வையில் இருந்தது. உடனே யாரே ஒரு ஜென்டில்மேன் தனுஷை/நயன்தாராவை செருப்பால் அடிக்காத குறையாக திட்ட. என் தம்பியும் தெய்வப்பிறவியும் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர். இப்படித்தான உன் ஆபீஸ்லயும் செருப்படி வாங்குவ என்று நினைத்திருப்பார்கள்.

இவ்வளவு அவமானங்களுக்கு பிறகும் நான் வெட்கங்கெட்டு போய் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தனுஷ் வெகுன்டெழுந்து ஓவர் நைட்டில் பிராஜக்டை முடித்து ஏதேதோ அச்சடித்து தள்ளுகிறார். அனைவரும் வியக்கின்றனர் (அட நாங்களுந்தாம்பா... அதை வேற உங்களுக்கு அடிக்கடி சொல்லனுமா?). உடனே நயன்தாரா தனுஷ்மீது பாசப்பார்வை வீச காதல் அரும்பி கனடாவில் ஒருகுத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடப்போகிறார்கள் என்ற சூழ்நிலை உருவாவது அறிந்து எழுந்து வெளியே ஓடினேன். என் தம்பியும் சிரித்துக்கொண்டே வெளியே வந்தான், உள்ளே தெய்வப்பிறவி அடக்கமுடியாத சிரிப்பால் கட்டிலிலிருந்து கீழே தடால் என விழும் சத்தம் கேட்டது. விழுந்தும் உருண்டு உருண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.

இந்த மேட்டர் மக்களுக்கு எப்படி லீக்கானது என தெரியவில்லை அனைத்து பதிவுகளும், குமுதம், ஆனந்த விகடன் என பல பத்திரிகைகளும் "யாரடி நீ மோகினி" பயங்கர காமடி படம் என்று முழங்கிக் கொண்டிருக்கின்றன!!

ஊர் உலகத்துக்கே தெரிந்து இவ்வளவு அவமானம் ஆகிவிட்ட போது, வாழ்ந்து என்ன பயன் என்று வாழ்கை வெறுத்து கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்க தயாரானேன். என் தம்பி என்னை தடுத்து ஏற்கனவே இந்த படத்திலெல்லாம் நடிக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து ரகுவரன் தற்கொலை செய்துகொண்டார், நீ அடுத்த தனுஷ் படத்தை பார்த்துட்டு ட்ரை பண்ணு என்று நிறுத்தினான்.

ரகுவரன் எனும் சிறந்த ஒரு நடிகரின் தற்கொலைக்கு காரணமான இந்த குழு மீது யாராவது நடவடிக்கை எடுப்பார்களா?? நான் தற்கொலை செய்துகொள்ளும் பட்சத்தில் இதை எனது கடைசி கடிதமாக Law Enforcement Units எடுத்துக்கொள்ளட்டும்.

:'-(

Disclaimer:
இது வெறும் கதைதான், படம் பார்த்த அந்த ஐந்து நிமிடங்கள் எனக்கு ஏற்பட்ட இரத்த கொதிபின் எல்லையை காட்டுவதற்கு தான் தவிற அவரின் மரணத்தை விளையாட்டாக எண்ணும் நோக்கம் எமக்கில்லை. ஒரு அனானி அவர்கள் இதை Literalஆக எடுத்துக்கொண்டதால் இந்த டிஸ்கி.

சமீபத்தில் இந்தியாவில் BCCI-யால் நடத்தப்படும் IPL கிரிகெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கங்கூலியின் பரம ரசிகனான நான் கங்கூலி விளையாடும் விளையாட்டுகளை மட்டும் பார்ப்பேன். ஆனால் விதிவிலக்காக IPL போட்டிகள் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறேன்... காரணம்?

IPL மேட்ச்களில் புகுத்தபட்டிருக்கும் புதுமைகள் (எ.டு: Cheerleaders! :-p~). சில போட்டிகளை Cheerleaders-காக மட்டுமே பார்ப்பதும் உண்டு. இப்போது மத்திய பிரதேச மாநில அரசு அதற்கும் அடித்துவிட்டது ஆப்பு. IPL போட்டிகளில் ம.பி அரசு Cheerleaders-களை தடை செய்துள்ளது (ம.பியில் நடக்கும் போட்டிகளுக்கு மட்டுமே என நினைக்கிறேன்). "பெண்களை தெய்வமாக சித்தரிக்கும் எங்கள் நாட்டில், இது போன்ற அரை நிர்வானமாக பெண்களை விளம்பரங்களுக்கு பயண்படுத்துவதை தடை செய்கிறோம்" என மும்பை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் "கிரிகெட் வீளையாட்டில் Cheerleaders பயண்படுத்துவது கலாச்சாரத்துக்கு எந்த விதத்தில் கேடு விளைவிக்கிறது? இது எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் (அட்ரா சக்கை... அட்ரா சக்கை...)

இந்திய "கிரிகெட் ரசிகர்கள்"(?) பல Cheerleader's இடம் அத்துமீறி நடந்துகொண்டதும், ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசும் செயல்களில் இரங்கியும் உள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த Cheerleader "ரசிகர்கள் மிகக்கடுமையான ஆபாச வார்த்தைகளை வீசுவதோடு, physical harassmentடிலும் ஈடுபடுகின்றனர்" என வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

நம்மூர் ரசிகனுக செய்யுற சேட்டையில நானே Cheerleaders வேண்டாம்னு சொன்னாலும் ஆச்சயர்யபடுவதற்கில்லை!!!

மத்திய பிரதேசத்தில் மட்டுமல்ல மேலும் பல இடங்களில் Cheerleaders சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். எல்லை தாண்டும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என ஒரு குரூப் கொலை வெறியுடன் களமிறங்கியிருப்பதாக கேள்வி!!

இன்னும் Cheerleaders எல்லைக்குள்ளயே வரல அப்புறம் எங்கயா மீறுச்சுனு கேக்குறவங்க, ஒரு மாநாட்டை கூட்டுங்க...(மறக்காம எனக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்புங்கப்பா! :-D)

கிரிக்கெட் இந்தியாவில் அதிக புகழ் பெற்ற விளையாட்டாக இருந்த போதிலும், உள்நாட்டு அணிகள் மோதும் போட்டிகள் பிரபலமானதாக இருந்ததில்லை. மாநிலங்களுக்கு இடையில் நடத்தப்படும் ரஞ்சி போட்டிகளும் கூட பெயர் மட்டும் பிரபலமே அன்றி போட்டிகளை காணும் ரசிகர்கள் மிகமிக குறைவு.

இந்நிலையில் ICL (Indian Cricket League) எனும் அமைப்பு பிரபல கிரிகெட் வீரர்களை அழைத்து ஒரு கிளப் போல உருவாக்கி 20-20 மேட்ச்களை நடத்த ஆரம்பித்தது. கால்பந்து விளையாட்டில் இது போன்ற கிளப் விளையாட்டுகள் ஐரோப்பாவில் மிகவும் பிரபலம். சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு இணையாக இந்த கிளப் போட்டிகளுக்கு கூட்டம் இருக்கும் ஜர்மனியில் பெர்லின்-ஹேம்பர்க் (Inter-City) கால்பந்து போட்டிகளுக்கு கூட எங்களால் டிக்கட் வாங்க முடியவில்லை அவ்வளவு கூட்டம். ICLலும் இது போல கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பிரபலமாக்கும் முயற்ச்சியில் இறங்கியது. இந்த போட்டிகளுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் 20-20 மேட்ச்சை இந்தியாவில் ஓரளவு பிரபலமாக்கியது. ஒரு நல்ல திட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது.



ICLஐ தொடர்ந்து IPL போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முகேஷ் அம்பானி, விஜய் மல்லயா, ஷாருக் கான் போன்ற பெரும் புள்ளிகள் களத்தில் குதித்தனர். சில ஆயிரம் கோடிகள் களத்தில் குதிக்க IPL டாக் ஆஃப் தி சேனல்ஸ் ஆனது. அனைத்து ஊடகங்களும் தோனி 9-கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்றும் ஏலத்தின் இன்ன பிற சங்கதிகளும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது!

கோடிக்கணக்கில் புரளும் பணமும் ஊடங்களின் ஓயாத விளம்பரங்களாலும் IPL பயங்கரமான எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியது. "The mighty power of Advertisements" என்ற வாக்கியத்தை ICL, IPL ஒப்பீடு மூலம் நன்கு அறியலாம்.

போட்டியில் உள்ள அணிகளின் பட்டியல்:

அணி

தொகை

(in Million USD)

ஏலம் எடுத்தவர்

மும்பை

119.9

முகேஷ் அம்பானி

பெங்களூர்

111.6

விஜய் மல்லயா

ஐதராபாத்

107

டெக்கான் க்ரானிகிள்

சென்னை

91

இந்தியா சிமின்ட்ஸ்

டில்லி

84

ஜி.எம்.ஆர் குரூப்ஸ்

மொஹாலி

76

ப்ரீத்தி ஜிந்தா

கொல்கத்தா

75.1

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மன்ட்

(ஷாருக்கான், ஜூஹி சாவ்லா)

ஜெய்பூர்

67

எமர்ஜிங் மீடியா


இந்த போட்டிகளில் புரலும் பணம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. போட்டியின் மீது கட்டப்படும் சூதாட்டம்/பந்தய தொகை மட்டும் சுமார் 2,000 கோடியாம்!!! ஒலிபரப்பு உரிமையை 10 ஆண்டுகளுக்கு சோனி நிறுவனம் சுமார் 1.026 பில்லியன் US Dollars கொடுத்து வாங்கியுள்ளது!!



T20 IPL போட்டிகளில் உள்ள சில நன்மைகள்
* இந்த போட்டிகளின் மூலம் கிரிகெட் என்பது வெறும் விளையாட்டு நாட்டுப்பற்றுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மக்கள் உணரும் வாய்ப்புள்ளது
* போட்டிகளின் போது ஒரு நாட்டு வீரர் இன்னொருவரை கேலி செய்வதும் முறைப்பதும் குறையும் (என்று வேண்டுமானாலும் சேர்ந்து விளையாட நேரிடும் என்ற அச்சமும் இருக்கும்)
* உள் நாட்டுக்குள்ளே வாய்புகள் கிடைக்காமல் முடங்கிக்கிடந்த பல திறமையான வீரர்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள்
* ரஞ்சி போட்டிகளில் எழும் மாநில பிரிவினை கூட இந்த போட்டிகளில் எழ வாய்பில்லை (போட்டியில் அணிகளின் பெயர் மட்டுமே ஊர்களை குறிக்கின்றது வீரர்கள் வேறு நாட்டவராகவோ மாநிலத்தவராகவோ உள்ளனர்)
* அழகான/கவர்ச்சியான Cheer leadersஇன் குளு குளு Cheering!!!

போட்டியில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள்
* எந்த இந்திய வீரரும் Man of the match வாங்கவில்லை
* மிகவும் குறைந்த மதிப்பீட்டை பெற்ற ராஜஸ்தான் அணி, அதிகம் பேசப்பட்ட பஞ்சாப் அணியை வீழ்த்தியது
* மெக்கல்லமின் அதிரடி 158ம் இரண்டாவது அதிகம் விலை கொடுக்கப்பட்ட பெங்களூர் அணியின் படு தோல்வியும்!
* புதிய ஜடேஜாவின் சூப்பர் அவதாரம்!! பழய ஜடேஜாவையும் commentary boxல் காணமுடிகின்றது
* Indo-Pak சர்வதேச போட்டிகளுக்கு இணையான கூட்டம்!!
* போட்டி உள்ளூர் நடப்பதை மறந்து இன்னும் சகவீரர்களை முறைத்துக்கொண்டு திரியும் ஸ்ரீசாந்த்!!

வெளியிலோ கொளுத்தும் வெய்யில், வீட்டிலும் உருப்படியான பொழுதுபோக்கு இல்லை, சரி சினிமாவுக்கு கிளம்பலாம் என்றாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எந்த உருப்படியான படங்களும் ஓடிக்கொண்டிருக்கவில்லை, என்ன செய்வது என்று தெரியாமல் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடும் நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குள் அடைபட்டு கிடந்தேன்.

அப்போதுதான் நியாபகம் வந்தது, ஜெர்மனியிலிருந்து நான் எடுத்து வந்திருந்த 500GB USB ஹார்ட் டிஸ்க். அந்த டிஸ்கில் நண்பனிடமிருந்து பல ஆங்கிலப்படங்களை பதிவு செய்து வந்திருந்தேன். சரி எதாவது நல்ல பழைய படத்தை ஓடவிடலாம் என்று மடிக்கணினியை திறந்தேன். "ஹூம்... நல்ல படமாக சிக்கினால் தப்பித்தோம் இல்லையென்றால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஒரு பெட்டை ரிசர்வ் பண்ணவேண்டியதுதான்" என்று நினைத்துக்கொண்டே, Ocean's Elevenஐ திறந்தேன் எங்கோ கேட்ட பெயர் நிச்சம் கைவிடாது என்று தோண்றியது.

அடப்பாவி ஒரு படத்தை பற்றி சொல்லுறதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று நீங்கள் கையில் எதையோ எடுப்பது தெரிகிறது வேண்டாம்... அப்புறம் கொலைக்கேஸ்ல உள்ள போயிருவீங்க. சரி... சரி... இந்தா நேரா மேட்டருக்கு வந்துட்டேன்.

டேனி ஓஷன் (Danny Ocean), சிறைச்சாலையில் விசாரணக் கைதியாக இருக்கிறார். விசாரணையின் போது அவர் மணைவி அவரைவிட்டு பிரிந்து இருப்பதும் அதனால் அவர் மனமுடைந்திருப்பதாக கூறுகிறார். ஜாமீனில் வெளியே வரும் ஓஷன், தனது நண்பனும் முன்நாள் கூட்டாளியுமான, ரஸ்டி ரயன் (Rusty Rayan)ஐ சந்திக்கிறார். இருவரும் வயதான முன்னாள் சூதாட்ட விடுதி (Casino) நடத்துனரான ரூபன்-ஐ சந்தித்து, தாங்கள் அமேரிக்காவிலேயே மிகப்பெரிய மூண்று சூதாட்ட விடுதியை கொள்ளையடிக்கப் போவதாகவும் அதற்கான பண உதவியை ரூபன் செய்யுமாறும் கேட்கின்றனர். இதற்குமுன் Casino கொள்ளையர்கள் அவர்களது முயற்ச்சியில் எப்படி கொடூரமாக கொல்லப்பட்டனர் என ரூபன் விளக்குகிறார், அதனால் அவர்களது கோரிக்கைக்கு தயக்கம் காட்டுகிறார்.

ஓஷன் தான் கொள்ளையடிக்கும் Casinoக்கள் பெல்லாஜியோ (Bellagio), தி மிராஜ் (The Mirage) மற்றும் MGM கிராண்ட (MGM Grand) என்று ரூபனிடம் கூற ரூபன் சம்மதிக்கிறார். ரூபனுக்கும் இந்த மூண்று சூதாட்ட விடுதியின் முதலாளியான டெரி பெனிடிக்ட் (Terry Benedict)க்கும் முன்பகை, பெனிடிக்ட் ரூபனை ஆள்பலத்தை உபயோகித்து வியாபாரத்தில் இருந்து வெளியேற்றியதால், இதை ரூபன் பழிவாங்கும் வாய்ப்பாக கருதுகிறார்.

இந்த மூண்று விடுதிகளிளும் சேர்க்கப்படும் பணம், ஒரு மத்திய, அதி நவீன கருவிகள் மூலமாகவும் பல திறமையான குழுவாலும் பாதுகாக்கப்படும் பெட்டகத்தில் வைக்கப்படும். இந்த பெட்டகத்தின் உள் கதவு சரியான கைரேகை இருந்தால் மட்டுமே திறக்கும். இரண்டாம் நிலை கதவுக்கும் கடுமையான செக்யூரிட்டி கோட் தேவை இது 12 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றப்படும். மாற்றப்பட்ட கோட் டெரி பெனிடிக்டிடம் இருக்கும்.

இந்த பெட்டகத்தை கொள்ளையடிப்பது முடியாத காரியம் மட்டுமல்ல தற்கொலை முயற்ச்சி போன்றது என்று வர்ணிக்கப்பட்டாலும், ஓஷன், ரயன், ரூபன் உட்பட 11 பேர் கொண்ட திறமையாளர்(experts) குழுவை உருவாக்குகிறார் (Ocean's Eleven - படத்தின் தலைப்பு விளங்கிவிட்டதா?). குழுவில் இருப்பவர்கள்

லினஸ் கால்ட்வெல் (Linux Caldwell) - சிறந்த பிக்-பாக்கெட் (இவரது தந்தைவழி தொழில்!)
லிவ்விங்ஸ்டன் டெல் (Livingston Dell) - சிறந்த மின்னனு மற்றும் கணிப்பொறியாளர் (செக்யூரிட்டி கேமராக்களை சமாளிப்பதற்கும், அனைத்து நடவடிக்கைகளையும் கேமரா மூலம் கண்காணிக்கவும்)
பேஷர் தார் (Basher Tarr) - வெடிபொருள் Expert ஒரு கொள்ளைமுயற்ச்சியில் போலீசிடம் சிக்கிக்கொள்பவரை ரஸ்டி ரயன் காப்பாற்றி குழுவில் சேர்க்கிறார்.
விர்கில் மற்றும் டர்க் (Virgil & Turk Malloy) - இவர்கள் இருவரும் கார் ஓட்டும் திறமை படைத்தவர்கள்.
யென் (Yen) - சீன ஜிம்னாஸ்டிக் வீரன் (தற்போது சர்கஸ் செய்பவன்)
பிரான்க் (Frank) - பார் டென்டர்
சோல் (Saul) - வயதானவர் (நடிப்பில் சிறந்தவர்(?))

ஓஷன் தனது குழுவினருடன்

பெனிடிக்டிடம் இருப்பதைப்போலவே ஒரு போலி பெட்டகத்தை தயாரிக்கின்றனர். திட்டமும் வகுக்கப்படுகிறது. இதற்கு இடையே ஓஷனின் மனைவி டெஸ் (Tess) இப்போது பெனிடிக்டிடம் இருப்பது தான் ஓஷனின் இந்த திட்டத்திற்கு காரணம் என்பதும் இந்த திட்டத்தில் 150 மில்லியன் டாலரைவிட ஓஷன் தன் மனைவியை மீண்டும் பெற முயற்ச்சிப்பதும் ரயனுக்கு தெரிய கூட்டத்தில் குழப்பம் விளைகிறது.
ஓஷன் தனது மனைவியுடன்

இந்த குழப்பங்களையும், கடைசி நேர பிரச்சனைகளையும் மீறி இந்த திட்டத்தை இவர்கள் செயல்படுத்தினார்களா?? 150 மில்லியன் டாலர் கொள்ளையடிக்கப்பட்டதா?? ஓஷன் தன் மனைவியுடன் திரும்ப சேர்ந்தாரா?? என்பதை விருவிருப்பாக படம் கூறுகிறது.

படத்தின் சிறப்புகள்
  1. * நேர்த்தியான திரைக்கதை
  2. * அட்ரினலின் சுரபிகளுக்கு அதிக வேலை கொடுக்கும் கிளைமாக்ஸ்
  3. * ரூபன், Los Vegasல் அடிக்கப்பட்ட 3 சிறந்த கொள்ளை பற்றி கூறி கொள்ளையடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லும் விதம் அருமை
  4. * George Clooney ஓஷனாகவும், Brad Pitt ரஸ்டி ரயனாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு நல்ல திரைப்படம் Ocean's Eleven. Ocean's Twelve, Ocean's Thirteen எல்லாம் வந்துவிட்டது ஆனால் முதல் பாகம் அளவுக்கு நன்றாக இருக்குமா என தெரியாது. பார்த்துவிடடு கூறுகிறேன்.

நேற்று வீட்டுக்கு ஃபோன் பண்ணி என் தம்பியிடம் பேசினேன், அம்மா எங்கேடா என்று கேட்ட போது, வீடு, குத்துவிளக்கு, பூஜை ஐட்டங்களை சுத்தம் செய்து கொண்டிருப்பதாக சொன்னான். என்னடா விசேஷம் என்று கேட்டேன். அதான் வருசம் பொறக்குதுல்ல என்றான். அடப்பாவி, அதான் தமிழ்நாட்டு கவர்மென்ட் தையில் தான் புத்தாண்டுனு சொல்லிருச்சுல்ல, என்றேன். அடப் போடா பைத்தியக்காரா, நடுவூர்ல பாதி பயபுள்ளைக்கு தமிழ்நாட்டுக்கு கவர்மென்ட் இருக்குறதே தெரியாது இதுல ஆணை வேறயா, என்றான்.

அப்போது தான் உறைத்தது தமிழக அரசாணை தமிழகத்துக்கு மட்டும் தானே, என்னைப்போல NRT (Non-Resident Tamils) க்கு அது பொருந்துமா?? பொருந்துதோ இல்லையோ எங்கள் வீட்டில் தமிழ்புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். டீவிகளில் என்னவென்றால் சித்திரையை முன்னிட்டு(?) என்று வழக்கம் போல "உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக, திரைக்கே வராத..." என்று முழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆஹா தமிழக அரசாணையை டீவிகளும் மீடியாக்களும் மதிக்கும் விதம் சும்மா புல்லறிக்க வைக்குது. "புத்தாண்டு" என்ற வார்த்தைக்கு மட்டும் தமிழக அரசு தடைவித்திருக்கிறதோ என்றுதான் எண்ணத் தோண்றுகிறது!
எனவே இவ்வாறு Intertiaவிலிருந்து மீளாதவர்களுக்கும்(என் பெற்றோர் போல), தமிழக அரசாணை செல்லுபடியாக இடங்களில் வாழ்பவர்களுக்கும் (என் போல), தமிழக அரசாணை பற்றி அறியாதவர்க்கும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

பி.கு: தி.மு கழக உடன்பிறப்புகள் கொதித்து எழ வேண்டாம், இந்த வாழ்த்துகள் தங்களுக்கானதல்ல!