போன வாரம் நானும் என் தம்பியும் அக்கா வீட்டுக்கு போயிருந்தோம். அக்காவுக்கு சொல்லப்போனால் வீடெல்லாம் கிடையாது. தென்னந்தோப்பு, சுற்றி வயல்வெளி தண்ணீருக்கு கிணறு, கிணற்றை ஒட்டிய மோட்டார் ரூம், அதனோடு இணைந்த ஒரு தகர கூறை ரூம். இந்த தகர கூறை ரூம் தான் அக்காவின் வீடு. அக்காவின் வீட்டுக்குள் 24 மணி நேரமும் டீவி ஓடிக்கொண்டிருக்கும் (உபயம் அக்கா மகள்). மாமா, புதிய திரைப்படம் வந்துவிட்டதென்றால் எங்கேயிருந்தாவது டிவிடி வாங்கிவந்துவிடுவார். என் அக்கா மகள் ஒரு தெய்வப்பிறவி, பின்னே "ஒரு வினாடி கூட காணச்சகிக்காத படங்கள்" என்று தமிழ் பட ரசிகர்களே தியேட்டரை விட்டு விரட்டிய படங்களை கூட பத்து பதினைந்து முறை பார்த்துவிடும் சக்தி மனிதப்பிறவிக்கா இருக்கமுடியும்??

அக்காவின் சமயலறை வீட்டுக்கு வெளியே திறந்தவெளி விறகு அடுப்பு தான். நான் பொதுவாக தெய்வப்பிறவியை தொந்தரவு செய்வதில்லை அதனால் அக்கா சமயல் செய்யும்போது "உள்ளூர் பொறனி" பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்துவிடுவேன். அன்றும் அது போல அடுப்படி அருகில் அமர்ந்து அக்காவிடம் ஒரு வாரம் ஊரில் என்ன நடந்தது என்று Frame By Frameஆக விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தேன்.

டீவி வால்யூம் அதிகமாக இருந்ததால் உள்ளே ஓடும் வசனங்களை தெளிவாக கேட்கமுடிந்தது. ரகுவரன் தனது பாணியில் சிறப்பாக வசனம் பேசிக்கொண்டிருந்தார். சரி ஒரு நிமிடம் என்ன படம் என்பதை கண்டுபிடிக்கும் ஆவலோடு வசனங்களை கேட்க ஆரம்பித்தேன். தனுஷ் தனது வழக்கமான பாணியில் அப்பா மேல் உள்ள அளவுக்கு மிஞ்சிய பாசத்தால் வாடா, போடா, மாமூ, மச்சி, இன்ன பிற கெட்ட வார்த்தைகளை சராமரியாக உபயோகித்துக் கொண்டிருக்க "என்னடா இது?" என்றேன் என் தம்பியிடம். என் மனதைபுறிந்து கொண்டவனாக, "அப்பாவை நண்பன் மாதிரி நடத்துறாராம்" என்றான். எங்கள் அப்பாவை நாங்களும் நண்பன் போலத்தான் நடத்துவோம் அதற்காக எந்த நண்பனையும் இப்படி கேவலமாக நடத்தியதில்லை. எனக்கு தோன்றிய அதே எண்ணம் என் தம்பிக்கும் தோன்றியிருக்க வேண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

பிறகு நடந்த உரையாடலில் (அட டீவியில் தான்பா) தனுஷ் வேலை தேடி ஒரு ஐடி கம்பனியில் கலந்துறையாடும் காட்சியில் வரும் வசனங்களை கேட்டேன். எல்லாரும் ஏதோ பேச தனுஷ் மட்டும் யா.. யா... என்று சொல்லிக்கொண்டிருப்பார். உடனே யாரோ ஒரு பெண் இவரை தமிழிலேயே பேசச்சொல்ல(கதாநாயகியாகத்தான் இருந்திருக்க வேண்டும், இதை கண்டுபிடிக்க CBIயா வரவேண்டும்?)... தனுஷ் க்கும்.. க்கும்... (தொண்டைய சரிசெய்துகொண்டு), "வாக்காளர் பெருமக்களே... நீங்கள்...." என்று ஆரம்பித்து ஒருவழியாக முடிக்கிறார் (ஏனோ எனக்கு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒட வேண்டும் என்று எழுந்த அனிச்சை உணர்ச்சியை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்)!

அடுத்ததாக தனுஷ் இன்டர்வியூவுக்கு செல்கிறார், செல்வதற்க்கு முன் வழக்கம் போல அப்பாவை "உன்னை யாரு இங்க வரச்சொன்னது, உன் மூஞ்சியில முழிச்சுட்டேன்ல இன்னி உருப்பட்டாப்லதான்" என்று நல்லவிதமாக ஆசீர்வதித்துவிட்டு செல்கிறார் (இது போன்ற பாசத்தை நீங்கள் உங்கள் தந்தையிடம் காட்டியதுண்டா?? உங்கள் மகன்கள் உங்களிடம் காட்டியதுண்டா?? அப்படியென்றால் உங்களுக்குள் நண்பர்கள் போண்ற உறவு இல்லை! அட நான் சொல்லலைபா தனுஷ் சொல்லுறார்). இன்டர்வியூவில் Mutithread, semaphore, என்று ஏதேதோ வார்த்தைகள் ஒலிக்க. எனக்குள் விழிப்பதற்க்கு காத்திருந்த மிருகம் பிடரியை சிலிர்த்துக்கொண்டு எழுந்தது!

சில சமயம், ஒரு சில கொலைவெறி படங்களை நான் சில மணிநேரம் பார்ப்பதற்கு இந்த கொடூர மிருகம்தான் காரணம். ஒரு சமயம் விஜய் நடித்த "புதிய கீதை" எனும் படத்தையே 45 நிமிடம் பார்த்திருக்கிறேன் என்றால் பாருங்களேன்!!!! இந்த கொடிய மிருகம் என்னை எழுப்பி வீட்டுக்குள் அழைத்து சென்றது, என் தம்பியும் ஆர்வமாக பின்தொடர்ந்தான். "என்ன படம் டீ...?" என்றேன் தெய்வப்பிறவியிடம். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை தனது கடமையில் கண்ணாக இருந்தாள். "இந்த ரேஞ்சுல டீவி பாத்தா ஏழாவது ஏழு வருசங்கழுச்சு தான் பாஸ் பண்ணப்போற" என்று கூறி என் மீசையில் இருந்த மண்ணை தட்டிவிட்டேன் (அதற்கும் No Reaction).

சரி என்று டீவி பக்கம் கவனத்தை திருப்பினேன். தனுஷ் கணினி முன் அமர்ந்து ஏதோ டைப் செய்ய ஆஃபீஸில் உள்ள அனைத்து கணினியிலும் ஏதேதோ ஓட அனைவரும் மிரள்கின்றனர் (நான் உள்பட). என் தம்பி என்னை திரும்பி பார்த்தான். "இவன் சாஃப்ட்வேர் இன்சினியர், எப்படி வந்த உடனே அதிரவைக்கிறான் பாரு, நீயும்தான் இருக்கியே பூமிக்கு பாரமா, வெளிய சொல்லாத நீ ஒரு சாஃப்ட்வேர் என்சினியர்னு அது தனுசுக்குதான் அசிங்கம்" என்ற எள்ளல் அந்த பார்வையில் இருந்தது. உடனே யாரே ஒரு ஜென்டில்மேன் தனுஷை/நயன்தாராவை செருப்பால் அடிக்காத குறையாக திட்ட. என் தம்பியும் தெய்வப்பிறவியும் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர். இப்படித்தான உன் ஆபீஸ்லயும் செருப்படி வாங்குவ என்று நினைத்திருப்பார்கள்.

இவ்வளவு அவமானங்களுக்கு பிறகும் நான் வெட்கங்கெட்டு போய் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தனுஷ் வெகுன்டெழுந்து ஓவர் நைட்டில் பிராஜக்டை முடித்து ஏதேதோ அச்சடித்து தள்ளுகிறார். அனைவரும் வியக்கின்றனர் (அட நாங்களுந்தாம்பா... அதை வேற உங்களுக்கு அடிக்கடி சொல்லனுமா?). உடனே நயன்தாரா தனுஷ்மீது பாசப்பார்வை வீச காதல் அரும்பி கனடாவில் ஒருகுத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடப்போகிறார்கள் என்ற சூழ்நிலை உருவாவது அறிந்து எழுந்து வெளியே ஓடினேன். என் தம்பியும் சிரித்துக்கொண்டே வெளியே வந்தான், உள்ளே தெய்வப்பிறவி அடக்கமுடியாத சிரிப்பால் கட்டிலிலிருந்து கீழே தடால் என விழும் சத்தம் கேட்டது. விழுந்தும் உருண்டு உருண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.

இந்த மேட்டர் மக்களுக்கு எப்படி லீக்கானது என தெரியவில்லை அனைத்து பதிவுகளும், குமுதம், ஆனந்த விகடன் என பல பத்திரிகைகளும் "யாரடி நீ மோகினி" பயங்கர காமடி படம் என்று முழங்கிக் கொண்டிருக்கின்றன!!

ஊர் உலகத்துக்கே தெரிந்து இவ்வளவு அவமானம் ஆகிவிட்ட போது, வாழ்ந்து என்ன பயன் என்று வாழ்கை வெறுத்து கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்க தயாரானேன். என் தம்பி என்னை தடுத்து ஏற்கனவே இந்த படத்திலெல்லாம் நடிக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து ரகுவரன் தற்கொலை செய்துகொண்டார், நீ அடுத்த தனுஷ் படத்தை பார்த்துட்டு ட்ரை பண்ணு என்று நிறுத்தினான்.

ரகுவரன் எனும் சிறந்த ஒரு நடிகரின் தற்கொலைக்கு காரணமான இந்த குழு மீது யாராவது நடவடிக்கை எடுப்பார்களா?? நான் தற்கொலை செய்துகொள்ளும் பட்சத்தில் இதை எனது கடைசி கடிதமாக Law Enforcement Units எடுத்துக்கொள்ளட்டும்.

:'-(

Disclaimer:
இது வெறும் கதைதான், படம் பார்த்த அந்த ஐந்து நிமிடங்கள் எனக்கு ஏற்பட்ட இரத்த கொதிபின் எல்லையை காட்டுவதற்கு தான் தவிற அவரின் மரணத்தை விளையாட்டாக எண்ணும் நோக்கம் எமக்கில்லை. ஒரு அனானி அவர்கள் இதை Literalஆக எடுத்துக்கொண்டதால் இந்த டிஸ்கி.

வெளியிலோ கொளுத்தும் வெய்யில், வீட்டிலும் உருப்படியான பொழுதுபோக்கு இல்லை, சரி சினிமாவுக்கு கிளம்பலாம் என்றாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எந்த உருப்படியான படங்களும் ஓடிக்கொண்டிருக்கவில்லை, என்ன செய்வது என்று தெரியாமல் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடும் நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குள் அடைபட்டு கிடந்தேன்.

அப்போதுதான் நியாபகம் வந்தது, ஜெர்மனியிலிருந்து நான் எடுத்து வந்திருந்த 500GB USB ஹார்ட் டிஸ்க். அந்த டிஸ்கில் நண்பனிடமிருந்து பல ஆங்கிலப்படங்களை பதிவு செய்து வந்திருந்தேன். சரி எதாவது நல்ல பழைய படத்தை ஓடவிடலாம் என்று மடிக்கணினியை திறந்தேன். "ஹூம்... நல்ல படமாக சிக்கினால் தப்பித்தோம் இல்லையென்றால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஒரு பெட்டை ரிசர்வ் பண்ணவேண்டியதுதான்" என்று நினைத்துக்கொண்டே, Ocean's Elevenஐ திறந்தேன் எங்கோ கேட்ட பெயர் நிச்சம் கைவிடாது என்று தோண்றியது.

அடப்பாவி ஒரு படத்தை பற்றி சொல்லுறதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று நீங்கள் கையில் எதையோ எடுப்பது தெரிகிறது வேண்டாம்... அப்புறம் கொலைக்கேஸ்ல உள்ள போயிருவீங்க. சரி... சரி... இந்தா நேரா மேட்டருக்கு வந்துட்டேன்.

டேனி ஓஷன் (Danny Ocean), சிறைச்சாலையில் விசாரணக் கைதியாக இருக்கிறார். விசாரணையின் போது அவர் மணைவி அவரைவிட்டு பிரிந்து இருப்பதும் அதனால் அவர் மனமுடைந்திருப்பதாக கூறுகிறார். ஜாமீனில் வெளியே வரும் ஓஷன், தனது நண்பனும் முன்நாள் கூட்டாளியுமான, ரஸ்டி ரயன் (Rusty Rayan)ஐ சந்திக்கிறார். இருவரும் வயதான முன்னாள் சூதாட்ட விடுதி (Casino) நடத்துனரான ரூபன்-ஐ சந்தித்து, தாங்கள் அமேரிக்காவிலேயே மிகப்பெரிய மூண்று சூதாட்ட விடுதியை கொள்ளையடிக்கப் போவதாகவும் அதற்கான பண உதவியை ரூபன் செய்யுமாறும் கேட்கின்றனர். இதற்குமுன் Casino கொள்ளையர்கள் அவர்களது முயற்ச்சியில் எப்படி கொடூரமாக கொல்லப்பட்டனர் என ரூபன் விளக்குகிறார், அதனால் அவர்களது கோரிக்கைக்கு தயக்கம் காட்டுகிறார்.

ஓஷன் தான் கொள்ளையடிக்கும் Casinoக்கள் பெல்லாஜியோ (Bellagio), தி மிராஜ் (The Mirage) மற்றும் MGM கிராண்ட (MGM Grand) என்று ரூபனிடம் கூற ரூபன் சம்மதிக்கிறார். ரூபனுக்கும் இந்த மூண்று சூதாட்ட விடுதியின் முதலாளியான டெரி பெனிடிக்ட் (Terry Benedict)க்கும் முன்பகை, பெனிடிக்ட் ரூபனை ஆள்பலத்தை உபயோகித்து வியாபாரத்தில் இருந்து வெளியேற்றியதால், இதை ரூபன் பழிவாங்கும் வாய்ப்பாக கருதுகிறார்.

இந்த மூண்று விடுதிகளிளும் சேர்க்கப்படும் பணம், ஒரு மத்திய, அதி நவீன கருவிகள் மூலமாகவும் பல திறமையான குழுவாலும் பாதுகாக்கப்படும் பெட்டகத்தில் வைக்கப்படும். இந்த பெட்டகத்தின் உள் கதவு சரியான கைரேகை இருந்தால் மட்டுமே திறக்கும். இரண்டாம் நிலை கதவுக்கும் கடுமையான செக்யூரிட்டி கோட் தேவை இது 12 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றப்படும். மாற்றப்பட்ட கோட் டெரி பெனிடிக்டிடம் இருக்கும்.

இந்த பெட்டகத்தை கொள்ளையடிப்பது முடியாத காரியம் மட்டுமல்ல தற்கொலை முயற்ச்சி போன்றது என்று வர்ணிக்கப்பட்டாலும், ஓஷன், ரயன், ரூபன் உட்பட 11 பேர் கொண்ட திறமையாளர்(experts) குழுவை உருவாக்குகிறார் (Ocean's Eleven - படத்தின் தலைப்பு விளங்கிவிட்டதா?). குழுவில் இருப்பவர்கள்

லினஸ் கால்ட்வெல் (Linux Caldwell) - சிறந்த பிக்-பாக்கெட் (இவரது தந்தைவழி தொழில்!)
லிவ்விங்ஸ்டன் டெல் (Livingston Dell) - சிறந்த மின்னனு மற்றும் கணிப்பொறியாளர் (செக்யூரிட்டி கேமராக்களை சமாளிப்பதற்கும், அனைத்து நடவடிக்கைகளையும் கேமரா மூலம் கண்காணிக்கவும்)
பேஷர் தார் (Basher Tarr) - வெடிபொருள் Expert ஒரு கொள்ளைமுயற்ச்சியில் போலீசிடம் சிக்கிக்கொள்பவரை ரஸ்டி ரயன் காப்பாற்றி குழுவில் சேர்க்கிறார்.
விர்கில் மற்றும் டர்க் (Virgil & Turk Malloy) - இவர்கள் இருவரும் கார் ஓட்டும் திறமை படைத்தவர்கள்.
யென் (Yen) - சீன ஜிம்னாஸ்டிக் வீரன் (தற்போது சர்கஸ் செய்பவன்)
பிரான்க் (Frank) - பார் டென்டர்
சோல் (Saul) - வயதானவர் (நடிப்பில் சிறந்தவர்(?))

ஓஷன் தனது குழுவினருடன்

பெனிடிக்டிடம் இருப்பதைப்போலவே ஒரு போலி பெட்டகத்தை தயாரிக்கின்றனர். திட்டமும் வகுக்கப்படுகிறது. இதற்கு இடையே ஓஷனின் மனைவி டெஸ் (Tess) இப்போது பெனிடிக்டிடம் இருப்பது தான் ஓஷனின் இந்த திட்டத்திற்கு காரணம் என்பதும் இந்த திட்டத்தில் 150 மில்லியன் டாலரைவிட ஓஷன் தன் மனைவியை மீண்டும் பெற முயற்ச்சிப்பதும் ரயனுக்கு தெரிய கூட்டத்தில் குழப்பம் விளைகிறது.
ஓஷன் தனது மனைவியுடன்

இந்த குழப்பங்களையும், கடைசி நேர பிரச்சனைகளையும் மீறி இந்த திட்டத்தை இவர்கள் செயல்படுத்தினார்களா?? 150 மில்லியன் டாலர் கொள்ளையடிக்கப்பட்டதா?? ஓஷன் தன் மனைவியுடன் திரும்ப சேர்ந்தாரா?? என்பதை விருவிருப்பாக படம் கூறுகிறது.

படத்தின் சிறப்புகள்
  1. * நேர்த்தியான திரைக்கதை
  2. * அட்ரினலின் சுரபிகளுக்கு அதிக வேலை கொடுக்கும் கிளைமாக்ஸ்
  3. * ரூபன், Los Vegasல் அடிக்கப்பட்ட 3 சிறந்த கொள்ளை பற்றி கூறி கொள்ளையடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லும் விதம் அருமை
  4. * George Clooney ஓஷனாகவும், Brad Pitt ரஸ்டி ரயனாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு நல்ல திரைப்படம் Ocean's Eleven. Ocean's Twelve, Ocean's Thirteen எல்லாம் வந்துவிட்டது ஆனால் முதல் பாகம் அளவுக்கு நன்றாக இருக்குமா என தெரியாது. பார்த்துவிடடு கூறுகிறேன்.

மேட்டர் தெரியுமா உங்களுக்கு? நமது கில்லி, இளைய தளபதி, டாக்டர்(?) ஜோசப் விஜய் தனது கட்சிக்கு, Ooopsie... மன்னிக்கனும் தனது மன்றத்துக்கு கொடி அறிவிக்கப் போகின்றாராம்!!!!


நம்ம நாட்டுல இந்த கொடிகளோட தொல்லை தாங்கமுடியலைப்பா, கர்நாடகாவுல தேசியக்கொடி பறக்குதோ இல்லையோ தெருத்தெருவுக்கு சிகப்பு மஞ்சள் கொடி பறக்குது. போகின்ற போக்கில் எக்கச்சக்கமான கொடிகளை பார்த்து நமக்கெல்லாம் நமது தேசியக்கொடி மறந்து போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தெரு ஓரம்(?) நடப்பட்டிருக்கும் கொடிக்கம்பங்களை ரோடு போடும் போது மாநகராட்சி அகற்றுவதற்கு படும் பாடு இருக்கே, சொல்லி மாளாது!

எப்படியோ முதலமைச்சர் சீட்டுக்கு அடுத்த போட்டியாளர் ரெடியாகிக்கிட்டிருக்கிறார்!!! வாங்க விஜய் வந்து நீங்களும் சீக்கிரம் களத்துல குதிங்க!!

பார்க்க சுட்டி: ThatzTamil

நேற்று "I am Legend" - இன் DVD வாங்கினேன். வாங்கும்போது சிறிது தயக்கமாகத்தான் இருந்தது, இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு பரபரப்பான செய்தியையும் கேட்டிருக்கவில்லையே. ஆனால் படத்தின் பெயர்மட்டுமல்ல படமே ஒரு Legend என்பதை பிறகு புரிந்துகொண்டேன்.


நம்மைத்தவிர, இந்த உலகத்தில் உள்ள அனைவரும் திடீரென்று இறந்துவிட்டால் என்னவாகும் என்று நாம் சில சமயம் நினைத்துப்பார்ப்போம். அந்த நினைவுகளை கண்முன் நிறுத்தும் ஒரு மிகச்சிறந்த படம்தான் இது. வில்ஸ்மித்தை எனக்கு அவ்வளவாக பிடிக்காது, இந்த படம் பார்த்ததிலிருந்து நான் அவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன்!!

புற்று நோயை குணப்படுத்த, மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் கிருமி, புற்று நோயை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் மிகவேகமாகப் பரவி மனித இனத்தையே அழித்து விடுகிறது. நியூயார்க்கில் கிருமியால் தாக்கப்படாத ஒரே மனிதன் Dr. Robert Neville (வில்ஸ்மித்), நோயால் தாக்கப்படாத மற்றவர்களை தேடுவதோடு, நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலையிலும் இறங்குகிறார். உலகத்தில் உள்ள 90% மக்கள் கிருமியின் தாக்கத்தால் உயிரிழக்கின்றனர். 9% மக்கள் கிருமியால் தாக்கப்பட்டு, வெறிபிடித்த Zombi-களை போல அலைகின்றனர், மீதமுள்ள 1% மக்களும் தனிமை வாட்டத்தால் தற்கொலை செய்துகொள்கின்றனர், இன்னும் சிலர் கொலைசெய்யப்படுகின்றனர், வில்ஸ்மித் தனி மனிதனாக நியூயார்கில் வலம் வருகிறார். இந்த தனிமனிதன் தனது இனத்தை பல பிரச்சனைகளுக்கு மத்தியில் எவ்வாறு காப்பாறுகிறார் என்பதை அழகாக சொல்லும் படம்தான் "ஐ ஆம் லெஜன்ட்".

படத்தின் சிறப்பம்சங்கள்

* படத்தில் செட்டிங் மிகவும் அற்புதமாகவும் தனிமையின் கொடூரத்தை கண்முன் நிறுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது


* இடையில் காட்டப்படும் ஃப்ளாஷ் பேக்குகள் மக்கள் இருக்கும் போது உள்ள நகரத்திற்கும், மக்கள் இல்லாத நகரத்திற்கும் வேறுபாட்டை அழகாக சொல்கிறது


* தனிமை வாழ்கையில் தனது ஒரே நண்பனான Sam என்ற நாயை இழந்து கதாநாயகன் தவிப்பது, Human Psychology-யை அப்படியே பிரதிபலிக்கின்றது


* வில்ஸ்மித், நாயை இழந்து வீடியோகடைக்கு வந்து பொம்மையிடம் ஹலோ சொல்லச்சொல்லி கெஞ்சுமிடத்தில் சென்டிமென்டாக நெஞ்சை தொட்டுவிடுகிறார்


* கதை சொல்லும் விதமும், character development-ம் மிக மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது


* படத்தில் எல்லாக்காட்சிகளிம் பல நுணுக்கங்கள் உள்ளன, வில்ஸ்மித் Shrek-3 படத்தை பார்த்து அனத்து வசனங்களையும் அச்சு அசலாக கூறும் போது அவர் அதை எத்தனை முறை பார்த்திருப்பார் என்பதும் தனிமை எவ்வளவு கொடுமை என்பதும் தெரியும்


* தனது ஆராய்ச்சியை பதிவுசெய்யும் காட்சிகள் மிக மிக நேர்த்தியானவை!!

நீண்ட நாட்களுக்கு பிறகு மிகச்சிறந்த ஒரு படம் பார்த்த திருப்தி மனதில் நிற்கின்றது. ஒருவழியாக பீமா முதல் நாள் காட்சி பார்த்த பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டேன்.

சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றும் ஒரு நண்பரிடம் இருந்து கசிந்த ஸ்கிரிப்ட் மற்றும் கதையை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...

இந்த படத்தில் ரஜினி மூண்று வேடத்தில் நடிக்கிறார். மூண்று வேடத்தில் ரஜினி முன்பு தோன்றிய "மூண்று முகம்" படம் பிண்னி பெடலெடுத்ததால் சென்டிமென்டலாக இதை ரஜினியே முடிவு செய்ததாக பட்சிகள் கூறுகின்றன.

அமேரிக்காவில் உள்ள ஒரு பொது இடத்தில் அமைக்கப்பட்ட மேடையில் ஒரு மனிதர் உரையாற்றிக்கொண்டிருக்கிறார் [எந்த மொழியில் என்றெல்லாம் அபத்தமாக கேள்வி கேட்க கூடாது, தமிழில் தான்!] அவரது முகம் வெகு அருகில் காட்டப்படும்போது திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வரும் தோட்டா அவரது நெற்றிப்பொட்டில் பட்டு மூளையை சிதறடிக்கிறுது. மக்கள் பீதியில் அங்குமிங்கும் ஓட பதட்டம் பற்றிக்கொள்கிறது.

இரண்டு நாட்களுக்கு பிறகு, அதிகாலை 7:30, Pentagon அலுவலகத்தில், நிறைய பெரும் புள்ளிகள் ஒரு நீள்வட்ட மேஜையை ஆக்ரமித்திருந்தனர். ஒரு பெரிய ஆபீசர் மிகுந்த கோபத்தில் "அமேரிக்காவின் டிபன்ஸ் மினிஸ்டர் கொல்லப்பட்டு 2 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் கேஸில் எந்த முன்னேற்றமும் இல்லை!". "சார் கொலைகாரன் எந்த தடையத்தையும் விட்டுவைக்கவில்லை" என்கிறார் ஒரு ஆபீசர். ["அடுத்ததா கொலை பண்ணுறப்போ வீட்டு அட்ரஸ் எழுதிவைக்கச் சொல்லுறேன்" அப்டீனு எகத்தாளம் பேசக்கூடாது]. சரி இப்போ என்ன செய்யலாம் என்று அனைவரும் யோசிக்கும் போது. ஒரு ஆபீசர் எழுந்து... "இந்த அமேரிக்காவுலயே, ஏன் இந்த ஒலகத்துலயே இந்த கேசை முடிக்கக்கூடிய தெறம ஹரிக்குதான் இருக்கு...".

வேறு ஒரு இடத்தில் (குறைந்த வெளிச்சமுள்ள ஒரு அறை) கைப்பேசியின் அழைப்புமணி ஒலிக்கிறது. இருட்டிலிருந்து ஒரு கைநீண்டு கைப்பேசியை எடுத்து காதில் வைத்து (முகம் பாதி இட்டில் சரியாக தெரியாது).

முகம் தெரியாத மனிதன்: "ஹலோ"
எதிர் முனை: "மிஸ்டர் ஹரி?"
மு.தெ.ம: "என்ன விஷயம்?"
எ.மு: "அது ஹரியிடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும்"
(மு.தெ.ம திரைச்சீலையை விலக்க அது ஒரு சாதாரண அல்லக்கை என ஆடியன்ஸுக்கு தெரியவருகிறது)
அல்லக்கை: "இன்னிக்கு என்ன தேதி?"
எ.மு: "பிப்ரவரி 14"
அல்லக்கை: "அப்ப அண்ணன் ஐஸ்வர்யாகூட நயாகரால குளிச்சு, குத்தாட்டம் போட்டுக்கிட்டிருப்பார்!!!"

"அதான்டா... இதான்டா... ஜஸ் ஜோடி நான்தான்டா..." என்று பாடலுடன் ரஜினி அறிமுகமாகிறார். ஷங்கர், படத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக ரஜினியின் சோலோ இன்ட்ரோவை தவிர்த்து "ஐஸ்ஷு"டன் ஜோடியாக ஒரு குத்துப்பாட்டில் இன்ட்ரடியூஸ் செய்கிறார். பாடல் முடிந்ததும் சைரன் ஒலிக்க FBI வாகனங்கள் வந்து ரஜினியை சூழ்ந்து விடுகின்றன. மிஸ்டர். "ஹரி தங்கள் உதவி இப்போது எங்கள் FBI-க்கு தேவைப்படுகிறது" என்கிறார் தலைமை ஆபீசர். "நான் ஒரு சாதாரன ப்ரைவேட் டிடெக்டிவ், என் உதவி உங்களுக்கு எதுக்குசார்?" என்று ஹரிகேட்க, பின்னால் நிக்கும் அல்லக்கை ஆபீசர் (விவேக்???) "ஹரி, பெயரைக்கேட்டாலே குத்தவாலிக்கு புடிக்கும் சொறி!, அவரு குத்தவாலிக்கு வெக்குறது பொறி!, அப்படீனு எல்லோருக்கும் தெரியுமே சார்" என்று பஞ்ச் விடுகிறார். [இப்பவெல்லாம் அல்லக்கையை விட்டு பஞ்ச் விடுறதுதான் ஷங்கர் ஃபேசன்].

ஹரிக்கு நிலமை விவரிக்கப்படுகிறது [இடம், பொருள் எல்லாம் உங்களுக்கு எதுக்கு?]. ஹரி, விவேக் டிபன்ஸ் மினிஸ்டர் வீட்டில் ஆராயும்போது ஒரு லெட்டரை கண்டெடுக்கிறார் ஹரி. அந்த லெட்டரில் "முடிச்சிர்றேன்... உன்னை 12ந் தேதி முடிச்சிர்றேன்..." என்ற ஒற்றை வரிமட்டும் எழுதியிருந்தது. மறுநாள் செய்தித்தாளில் தமிழ்நாடு முக்கிய மந்திரிக்கு "முடிச்சிர்றேன்... 18ந் தேதி முடிச்சிர்றேன்..." என வந்த மிரட்டல் கடிதம் பற்றிய செய்தியை அறிந்து ரஜினி, ஐஸ், விவேக் சென்னை விரைகிறார்கள். ஐஸ் விமானத்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கும் ரஜினியை பார்க்கிறார். [கணவுல சுச்சர்லாந்து போய், ஒரு டூயட் பாடுனாங்கன்னு சொல்லனுமா என்ன?]

ஹரி, இன்னும் ஒரு கொலையை தடுக்க பல வியூகங்களை அமைக்கிறார். ஹரி, கொலை வெறிதனமான சேசிங்கில் ஒரு சர்வதேச தீவிரவாதி இதன் பின்னனியில் இருப்பதை போலீசுக்கு தெரியவைக்கிறார். போலீஸ் அந்த தீவிரவாதியை சுற்றி வளைக்கிறது. முகத்தை மறைத்த ஒருவர் ரகசியமாக ஒரு இடத்திற்கு செல்கிறார். முகத்திரையை விலக்கி அந்த இடத்தில் நுழைகிறார் ஹரி!! அங்கு அவர் வீல் சேரில் உட்கார்ந்து ஒரு கணிப்பொறியில் கவனமாயிருக்கும் ஒருவரை (இன்னும் நமக்கு முகத்தை காட்டவில்லை) சந்திக்கிறார். அவர் அருகில் சென்று தரையில் அமருகிறார். அவர் தலையை கோதிவிட்டபடி வீல் சேர் உருவம் திரும்ப.... இன்னொரு ரஜினி!!!! தரையில் அமர்ந்திருக்கும் ரஜினியின் தலையிலிருந்து கையை எடுக்காமல், வீல் சேர் ரஜினி கண்கள் மூடுகிறார் (அட கொசுவத்தி சுத்துறதுக்குதான்பா...)

[ஃப்ளாஷ் பேக் விரிகிறது]
NASA-வினி தலைமை விஞ்ஞானியாக வேலை பார்க்கும் ரஜினி(வேடம்-I)-யின் மகன் ஹரி(ரஜினி-II) கால் ஊனத்தால் நடக்கமுடியாமல் தவிக்கிறார். மகன்படும் வேதனையை கண்ட ரஜினி-I தானாக சிந்திக்கும் திறன் கெண்ட ஒரு இயந்திர மனிதனை(ரஜினி-III) உருவாக்கி மகனுக்கு உதவிசெய்ய வைக்கிறார். ஒரு நாள் மகன் ரஜினிக்கு ஃபோன் வருகிறது, "நான் நாசாவின் கட்டுப்பாட்டு அதிகாரி பேசுகிறேன், தங்கள் தந்தை NASA-LAB-ல் நடந்த ஒரு விபத்தில் இறந்துவிட்டார்", என்று. அழுது புலம்பும் மகன் ரஜினி தந்தை உடலை பெருவதற்காக ரோபோ ரஜினியுடன், NASA செல்கிறார். அப்போது தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம்வர ரோபோ ரஜினியின் உதவியுடன் நாசா கண்கானிப்பு கேமாராவை ஹேக் செய்து. ஒரு அதிகாரி விபத்தை செட்டப்செய்து அதில் தன் தந்தையை சிக்கவைப்பதை அறிந்து கொதிக்கிறார். ரோபோ ரஜினியை பயன்படுத்தி கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கிறார். நாசாவின் ரகசியங்களை தீவிரவாதிகளுக்கு விற்க ஒரு உயர் அதிகாரி போடும் திட்டம் ரஜினி-I க்கு தெரிந்து விடுகிறது. அதனால் அந்த அதிகாரி ரஜினி-I ஐ கொண்று விடுகிறார். இதற்கெல்லாம் மூலகாரணமான முக்கியபுள்ளிகளின் பட்டியலை மகன் ரஜினி திரட்டுகிறார். அனைத்து தகவல்களோடு இந்தியா பறக்கிறார். அங்கிருந்தவாறு ரோபோ ரஜினியை இயக்கி பட்டியலில் இருக்கும் பெரும் புள்ளிகளை யாருக்கும் தெரியாமல் முடிக்கிறார்.
[ஃப்ளாஷ் பேக் முடிந்தது]

ரஜினியின் கணிப்பொறியில் உள்ள பட்டியலில் சிவப்பு கோடிடப்படாத ஒரே பெயர் அந்த "தமிழ்நாடு முக்கிய மந்திரி"! 18-ந் தேதி பலத்த பாதுகாப்புக்கு இடையே நடக்கும் பேரணியில் அந்த முக்கிய மந்திரி சுடப்படுகிறார். போலீஸ் ஒரு முகமூடி அணிந்த மனிதனை துரத்துகிறது துரத்தலின் போது ஒரு பர்ஸை தவரவிடுகிறான் அந்த முகமூடி மனிதன்! போலீஸுடனான மோதலில் அந்த முகமூடி மனிதன் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்து கூவத்தில் விழுந்து நொறுங்குகிறது. இதை கணினியில் பார்த்துக்கொண்டிருக்கும் வீல் சேர் ரஜினி கண்கள் கசிகிறார்!! அவரது கணினி "No Signal" என்று காட்டுகிறது. கைப்பற்றிய பர்ஸ்ஸில் உள்ள முகவரிக்கு விரைகிறது போலீஸ், அங்கு கிடைக்கும் ஆதாரங்களை FBI பெற்றுக்கொண்டு, அமேரிக்காவில் பதுங்கியிருக்கும் தீவிரவாதியை (நாசாவின் கண்கானிப்பு கேமராவில் பார்த்த அதே ஆள் என்று சொல்ல வேண்டுமா?) சுற்றி வளைக்கிறது!! இருட்டில் அமர்ந்திருக்கும் வீல் சேர் ரஜினியின் அறைகதவு தட்டப்படுகிறது!! கதவுக்கு வெளியில் அரைகுறை தோலுடனும், இரும்பு கரங்களுடனும் நிற்க்கும் ரோபோ ரஜினியின் க்ளோசப் காட்டப்பட்டு.... நன்றி வணக்கம் சொல்லப்படுகிறது!!!

--------------------------------------------------

கருப்பன்: (பக்கத்திலிருப்பவரிடம்) "யாருப்பா அது தூரத்துல எதையோ ஆட்டோவுல லோடு பண்ணுறது"
பக்கத்திலிருப்பவர்: யாரோ முரட்டு பசங்களா தெரியுது!!
கருப்பன்: ஏய், அவங்க லோடு பண்ணுறது உருட்டுக்கட்டை மாதிரியில தெரியுது
பக்கத்திலிருப்பவர்: மாதிரியெல்லாம் எல்லாம் இல்ல எல்லாம் ஒரிஜினல்
கருப்பன்: என்னப்பா நம்பள நோக்கி வருது??!!!
பக்த்திலிருப்பவர்: நம்பள நோக்கியில்லை, உன்னை நோக்கி வருது
கருப்பன்: ஐய்யய்யோ நான் கதையை லீக் பண்ணுன மேட்டரு ஷங்கருக்கு சிக்கிருச்சுபோல.... குதிச்சிருடா.... குதிச்சிருடா... கருப்பாஆஆஆஆஆஆஆ...........