நீங்கள் நீலச்சட்டை போட்டுக்கொண்டு பந்தடிப்பவர்களை மெச்சுபவர் இல்லையா?? நீங்கள் கிரிக்கெட் என்ற விளையாட்டில் ஆர்வம் இல்லாதவரா??? ஆம், என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு தேச துரோகி! அட, நான் சொல்வது உண்மைதான், பல கோடி மக்கள் வாழும் இந்த மாபெரும் துணைக்கண்டத்தின் மானத்தையும், புகழையும் காப்பது யார் என்று நினைத்தீர்கள்?? இந்த நீல சட்டை வீரர்கள் தான்! நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் பிரதமருக்கோ, தேர்ந்து எடுக்கும் உங்களுக்கோ இந்த நாட்டின் மானத்திற்கோ எந்த சம்மந்தமும் இல்லை என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? "Who represents India?" என்று ஒரு உண்மைக் குடிமகனிடம் கேளுங்கள் "Men in Blue" என்று அழகாக சொல்லுவார்கள். அப்ப ஜனாதிபதியெல்லாம் சுத்த வேஸ்ட்டா என்ற அபத்தமான கேள்வியை கேட்டால் "யாரோ ஒரு அம்மாதான் ஜனாதிபதி ஆனா அந்தம்மா பேருதான் நியாபகத்தில் இல்லை" என்று பதில் கிடைக்கும்!
ஒரு ஒரு ஒலிம்பிக் போட்டிகளிளும் ஒரு வெங்கலம் அல்லது ஒரு வெள்ளி வாங்குவது இந்தியாவுக்கு பெருமையாம், இந்த நீலச்சட்டை நாயகர்கள் ஒரு நாள் உலகக் கோப்பையில் வெளியேறியது இந்தியாவுக்கு பெரும் அவமானமாம்?? உலகில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் வெறும் 10 நாடுகள் பங்கு பெரும் கிரிக்கெட் போட்டி எப்படி உலகக் கோப்பையானது என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. அனைத்து நாடுகளும் பங்கு பெரும் ஒலிம்பிக் ஒரு பொருட்டே அல்ல!!
முதலில் இந்த நீலச்சட்டை நாயகர்களின் யோக்யத்தை பார்கலாம். இந்த நீலச்சட்டை விரர்கள் BCCI என்ற பணம் காய்க்கும் நிறுவனத்தின் செல்லப்பிள்ளைகளே அன்றி இந்தியாவின் நேரடி செல்லப்பிள்ளைகள் அல்ல (உண்மையில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை தாங்கிப்பிடிக்க ஒலிம்பிக் வீரர்கள் தான் வேண்டுமேயன்றி இந்த நீலச்சட்டைகரர்கள் அல்ல). போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக பயிற்சியில் ஈடுபடுவது போல் பத்திகைக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு தண்ணியைப்போட்டு மட்டையாகிக் கிடந்த மேட்டர் இவர்கள் தோத்தால் மட்டும் பத்திரிகையில் இடம்பெரும். இவர்களில் எத்தனை பேர் வருமான கணக்கு சரியாக காண்பித்து வரி செழுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? உண்மையைக்கூற வேண்டும் என்றால் சரியாக வரி செழுத்தாமல், சரியாக விளையாடாமல் கிடைத்த பெயரை பணமாக்குவதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் அல்லவா தேச துரோகிகள்?
இவர்கள் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டார்கள் திருந்த வேண்டியது நாம்தான், கிரிக்கெட் ஒரு சாதாரன விளையாட்டு இதுவும் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு, இதை நாட்டோடு சம்மந்தப்படுத்தி கொண்டாடாமல் இருப்போம்!!
கொலைக்கான அர்த்தம் நமக்கு மனிதனின் உயிரை எடுத்தல் என்றுதான் சொல்லித்தரப்பட்டுள்ளது. ஆனால் மனிதனின் உயிரை எடுப்பதைவிட கொடூரமான கொலைகள் நமது கண்முன் நடந்தும் நாமெல்லாம் அதை கண்டுகொள்ளாக் குருடர்களாகவே வாழ்கிறோம். எனது இந்தப்பதிவு கொலையாகும் மனிதர்களைப்பற்றியல்ல, மனிதானால் கொலை செய்யப்படும் இயற்கை பற்றியது!
இயற்கை உலகத்திற்கு அளித்துள்ள பல பரிசுகளுள் முக்கியமானது மரங்கள்! ஒரு விதை நல்ல மரமாக வளர்வதற்க்கு குறைந்தது 100 வருடங்கள் பிடிக்கிறது, அதன் ஆயுள் காலம் முடிவதற்கு சில 100 வருடங்கள் ஆகிறது. வெறும் 20 ஆண்டுகளில் இளமையடைந்து, 60 ஆண்டுகளில் மாண்டுபோகும் மனிதன் மரங்களை கொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்?
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினமும் தன் வாழும் இடங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனக்கு ஏற்ப தான் வாழும் இடங்களை மாற்றியமைக்கிறான்! இதை நாமெல்லாம் நாகரீக வளர்ச்சி என்று மார்தட்டிக்கொள்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நம் உலகத்தில் உள்ள மற்ற உயிர்களை அழிப்பது மட்டுமல்லாமல் நம்மையும் அழித்துக் கொண்டிருக்கிறோம்.
மேலே உள்ள படங்கள் பெங்களூரில் எடுக்கப்பட்டவை! பெங்களூர் 7 வருடங்களுக்கு முன்னால் நான் வந்த போது "பூங்கா நகரம்" - ஆக இருந்தது, இன்றோ இது "புழுதி நகரம்"-ஆக உள்ளது. நான் பெங்களூர் வந்தபோது ஜூன் மாதம், குற்றாலித்தில் இருப்பது போல் காற்றில் மிதக்கும் சாரல், லேசான வெண்பனி, அடர்ந்த மரங்கள், என சொர்கத்திற்குள் நுழைந்த மாதிரி இருந்தது. சூரிய வெளிச்சத்தை பார்க்க கிட்டத்தட்ட பல மாதங்கள் பிடித்தது. தமிழ் நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் கூட இங்கு மிதமான வெப்பமாக இருக்கும் வெய்யில் தரையில் படாத அளவுக்கு மரங்கள் இருக்கும், ரோட்டோரங்களில் நடப்பதே சுகமாக இருக்கும். இன்றோ நிலமை தலைகீழ் பகலில் சுட்டெரிக்கும் வெய்யில் மற்றும் தூசு, இரவில் கடும் குளிர்! பாலைவனத்தில்தான் இவ்வாறு இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மரங்கள் அனைத்தையும் வெட்டி ஒரு நகரத்தையே பாலைவனம் ஆக்கியாகிற்று, என்ன ஒரு சாதனை!!
இந்த பூமி நமக்களித்த வளங்களை எல்லாம் நன்றாக சுரண்டிவிட்டு, நாம் இருதியாக நமது சந்ததியினருக்கு விட்டுப்போவது வெறும் கான்க்ரீட் காடுகளைத்தான்!
"அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்", நம்மூர்காரர்களின் தாரக மந்திரம் இது! என் தம்பி ஒருநாள் காகிதக் குப்பையை கழிவுநீர் கால்வாயில் தூக்கி எரிந்தான். "ஏன்டா அது சாக்கடைய அடைச்சுக்காதா? அதை பத்தடி தள்ளியிருக்க குப்பை அள்ளுற இடத்துல போட வேண்டியதுதான" என்றேன். அதற்க்கு அவன் "ஏற்கனவே சாக்கடைக்குள்ள குப்பையை யாரோ போட்டிருக்கான்ல நான் போட்டா என்ன தப்பு?" என்று கேட்டான். அந்த பதில் என்னை ஒன்றும் ஆச்சர்யப்படுத்தவில்லை. ஏற்கனவே பலமுறை இந்த வசனத்தை பலரிடம் கேட்டிருக்கிறேன். ஓட்டு கேட்டு வருபவர்கள்கூட தான் செய்த/செய்யவிரும்பும் முன்னேற்ற பணிகள் பற்றி பிரச்சாரம் செய்வதைவிட அடுத்த கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு வாக்களிக்காமல் செய்வதில்தான் குறியாக இருப்பார்கள்.
அது சரி இப்ப எதுக்கு இந்த கதை என்று நீங்கள் கேட்பது தெரிகிறது, இந்தா மேட்டருக்கு வந்துட்டேன்...
சமீபத்தில் இந்த சுட்டியில் உள்ள பதிவை படிக்க நேர்ந்தது. அனைகமாக இது பினாத்தலார் பதிவின் பின்விளைவு என்று நினைக்கிறேன் ;-) அதற்கு பின்னூட்டமிடப்போய் தனிப்பதிவாகவே ஆகிவிட்டது :-(
திருவள்ளுவருக்கு சிலை!
///
இத்தன கோடி செலவு பண்ணி வள்ளுவருக்கு சிலை வைப்பதற்க்கு பதிலா மக்களுக்கு நல்ல திட்டங்கள் தீட்டலாமே! என்று கேள்வி கேட்டார்கள். ///
நிச்சயமாக அதை செய்திருக்கலாம், மக்களுக்கு நல்ல திட்டங்கள் தீட்டுவது அப்படி ஒன்றும் பெரிய தப்பில்லையே.
///
ஏன்டா வெங்காயங்களா விவேகானந்தருக்கு மண்டபமும், சிலையும் வைத்தப்போது அதைக்கேட்க வேண்டியது தானே! சரி! விட்டு தள்ளு கோடிக்கணக்கில் பணத்தைக்கொட்டி விவேகானந்தர் பாறையை பாராமரித்தலை நிறுத்த சொல்லுவியா!
///
அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன். சிலை வைப்பதும், மண்டபம் கட்டுவதும் கண்டிப்பாக தட்டிக்கேட்டிருக்கபடவேண்டிய விஷயம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அந்தப்பாறை சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது அதனால் அதை பராமரிக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு.
///
ஆண்டு தோறும் கோயில் திருப்பணி என்று செலவிடப்படும் மக்கள் பணத்தில், வேறு ஏதாவது செய்யலாமே! மணியாட்டுற ஐயருக்கு கொடுக்கிற மாத சம்பளத்தை நிறுத்தி விட்டு வேறு உழைப்பாளிகளுக்கு ஊதியம் வழங்கலாமே!
///
மக்கள் பணத்தில் நல்ல விஷயங்கள் செய்வது வரவேற்கபடவேண்டிய விஷயம். திருப்பணியில் என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. கோவிலை துடைத்து சுகாதாரமாக வைத்துக்கொண்டால் அதுவும் மக்களுக்கு செய்யும் நல்லது தான். திருப்பணி என்ற பெயரில் குடம் குடமாக பாலைவாங்கி அபிசேகம் செய்தால் கண்டிப்பாக கல் எரியவேண்டியது தான்!
///
இதையெல்லாம் சொல்ல மாட்டீர்கள்! ஏனென்றால் இ(ஐ)ந்து என்கிற அடையாளத்தை கட்டிக்காப்பதனுமே! ஆனால் தமிழன் தன் அடையாளத்தை காப்பாற்ற எதையாவது செய்தால் அதற்க்கு நொட்டை சொல்வீர்கள்!
///
திருவள்ளுவருக்கு சிலை அமைத்துதான் தமிழன் என்ற அடையாளத்த காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பது, இந்த முட்டாளுக்கு இப்போது தான் தெரிகிறது.
தமிழ் செம்மொழி என்கிற அறிவிப்பு!
///
இதை செய்து என்னத்த கிழிக்க போகிறார்கள். இதனால் என்ன பயன் என்று பட்டியல் போட்டார்கள். அட! ஒன்னுமே இல்லையே! அப்புறம் எதுக்கு அவசர, அவசரமா சமஸ்கிருதத்தை செம்மொழி என்று அறிவித்தீர்கள்? ஏன்னா அது உங்க மொழி ஆனா தமிழ் தீண்டதகாதவர்களின் மொழி அப்படிதானே!
///
மறுபடியும் அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன். சமஸ்கிருதத்தை செம்மொழி ஆக்கினா நமக்கென்ன ஆக்காட்டி நமக்கென்ன. நம்ம தமிழ் செம்மொழி ஆனத நம்ம சந்தோஷமா ஏத்துக்க வேண்டியதுதான்!
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு அறிவிப்பு!
நான் இந்த விளையாட்டுக்கு வரல சாமி ஏற்கனவே பினாத்தலார் பதிவுல சூடு கிளம்பிக்கிட்டிருக்கு.
கர்நாடகா மாநிலித்தில் நடந்த லாரி ஸ்டிரைக் உன்மையில் ஒரு கேளிக்கூத்தான விஷயம். நான் இந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். பல விபத்துகளை சந்தித்திருக்கிறேன், சந்தித்தவர்களை கண்டுமிருக்கிறேன். கனரகவாகனங்களால் ஏற்படும் விபத்து மொத்த விபத்தில் சுமார் 15% மீதமுள்ள 85% விபத்துகள், கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளால் எற்படுபவை. இருப்பினும் ஏன் அரசாங்கம் கனரகவாகனங்களால் ஏற்படும் விபத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறதென்றால், கனரகவாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலும் உயிர்ச்சேதமிருக்கும்.
அரசாங்கம் கூறுவது என்னவென்றால் "கனரக மற்றும் சில நான்கு சக்கர வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவி பொருத்தப்பட வேண்டும்". இவ்வாறு பொருத்தப்படும் கருவி வாகனத்தின் வேகத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு (60kmph என்று நினைக்கிறேன்) கீழ் இருக்குமாறு கட்டுப்படுத்தும்.
சரி இப்போது சில Facts-களை பட்டியலிடுவோம்...
1. லாரி போன்ற கனரக வாகனங்கள் மாநகர எல்லைக்குள் பெரும்பாலும் வருவதில்லை அவை சுற்றுச்சாலையில் தான் செல்கின்றன.
2. மாநகராட்சி எல்லைக்குள் வரும் ஒரு சில லாரிகளும் 60kmph வேகத்தில் செல்வது இயலாத காரியம் (பெங்களூரு வாகன நெரிசல் அப்படி)
3. விபத்துகளுக்கு முக்கிய காரணம் கனரக வாகனங்கள் மட்டுமல்ல
4. மாநகராட்சி எல்லைக்குள் பயணிக்கக்கூடிய ஒரே கனரக/எம-வாகனம் KSRTC, BMTC பேருந்துகள் (இவையிரண்டும் கர்நாடக மாநில அரசின் கீழ் இயங்குபவை)
5. மக்களை பணிக்கு அழைத்துச்செல்லும் பல cab-களில் ஏற்கனவே இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கருவி பொறுத்தப்படுவதால் ஒரே ஒரு நன்மை மட்டுமே இருக்க முடியும் PRICOL போன்ற vendors கொள்ளை லாபம் அடிப்பார்கள். கருவி வாங்குவது கட்டாயமாக்கப்பட்டால் விற்பவன் செய்யும் அட்டகசம் அனைவருக்கும் தெரிந்ததே (தமிழ் நாட்டு ஹெல்மெட் நினைத்துப்பார்க்க). இன்றய விபத்துகளுக்கான காரணம் வேகம் இல்லை... வேகத்தால் வாகனம் ஓட்டிகளுக்கு ஆபத்தே தவிற மற்றவர்களுக்கு குறைவே.
கனரக வாகன விபத்துக்கான முக்கிய காரணங்கள்...
1. Negligence - சலைவிதிகளை மிதித்தல்
-- உண்மைச் சம்பவம் --
வெளிச்சுற்றுச்சாலையில் (outer ring road) உள்ள ஒரு சிக்னலில், பச்சை விளக்கை சற்று தூரத்தில் பார்த்துவிட்ட BMTC பஸ் ஓட்டுநர் வேகமாக வந்து சிக்னலை கடக்கலாம் என்று நினைத்து சிவப்பு சிக்னல் விழுந்ததை மதிக்காமல், சிக்னலை சரியாக கடைபிடித்த ஒரு இருசக்கர வாகன ஓட்டியை கூழ்கூழ் ஆக்கியது! இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் அந்த பஸ்ஸில் இந்த "so-called" வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளது.
2. அதிக பலு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள்
-- உண்மைச் சம்பவம் --
Service road-ல் இருந்து சுற்றுச்சாலைக்குள் கண்ணைமூடிக்கொண்டு நுழைந்த ஒரு இரு சக்கர வாகன ஓட்டி இளைஞன், அதிக பலு ஏற்றிக்கொண்டு மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த ஒரு லாரிக்கடியில் சிக்கி கிட்டத்தட்ட அவனது அனைத்து உடல் உருப்புகளும் திசைக்கொன்றாக ஒரு 50 மீட்டர் சுற்றளவுக்கு சிதறியதை வாழ்நாளில் மறக்க முடியாது.
3. கட்டமைப்பு குறைபாடு
-- உண்மைச் சம்பவம் --
ஓசூர் செல்லும் சாலயிலுள்ள வாகன நெரிசலை தவிற்க நினைத்த லாரி சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்று தலை குப்பற கவிழ்ந்து கிடந்தது.
சுருக்கமாக சொல்லப்போனால் வேகத்தால் ஏற்படும் விபத்துக்கள் மிகக்குறைவு அதற்காக இவ்வளவு அமளிதுமளி கிளப்பாமல். சாலைவிதிகளை கடைபிடிக்கச்செய்தல், கட்டமைப்பு மேம்பாடு போன்றவிஷயத்தில் கவனம் செழுத்தலாம். பார்வையற்றவனுக்கு கருப்பு கண்ணாடி கொடுப்பதற்கு முன் ஒரு கைத்தடி கொடுக்கலாமே!
பி.கு: கர்நாடகாவில் நடக்கும் சாலைவிபத்துகளில் பெரும்பான்மை, பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடக்கிறது!
நான் சில நாட்களுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் ஜெய்பூர் சென்றிருந்தேன். அங்கு நான் சில சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றேன் அங்கு நான் சந்தித்த சில அனுபவங்கள் என்னை இந்தியன் என்று சொல்லவே தயங்க வைக்கின்றது!
படத்திலுள்ள அறிவிப்பு பலகையை பாருங்கள்! இந்திய சுற்றுலா பயணிக்கு வசூலிக்கும் பணத்தைவிட அயல்நாட்டு பயணிகளுக்கு 5 மடங்கு அதிகம்!!! இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டதற்கு அவர்களிடம் அதிகப்பணம் இருக்கின்றது என்று பதில் கூறினார்கள்.
சரி அதுபோகட்டும் எவ்வாறு வெளிநாட்டவர்க்கும் நம்நாட்டவர்க்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்படுகின்றது என்று தெரியுமா?
தோலின் நிறத்தால்!
எல்லாக் கருப்பர்களும் (ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்தவராக கருதப்படுகின்றனர்), எல்லா வெள்ளையர்களும் ஐரோப்பா அல்லது அமேரிக்கர்களாக கருதப்படுகின்றனர். மாநிறத்தவர் எல்லாம் இந்தியர்களாம்! என்ன கொடுமையிது?
நான் கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றுள்ளேன் எங்கும் இது போன்று ஒரு அவலத்தை நான் கண்டதில்லை. அங்கு அனைவரும் ஒன்றாகவே நடத்தப்படுகின்றனர். சமத்துவத்தைப்பற்றி வாய்கிழிய பேசும் நாம் எவ்வளது சமத்துவத்தை கடைபிடிக்கிறோம் என்று பாருங்கள். இந்த அறிவிப்பு இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல கிட்டத்தட்ட ஜெய்பூரில் மற்றும் ஆக்ராவில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிளும் காணலாம்.
இதில் இன்னொரு கொடுமை என்ன என்றால் அனைத்து நாட்டவரும் பணக்காரர்கள் இல்லை... இந்த பூவுலகில் இந்தியாவைவிட ஏழைநாடுகள் தான் அதிகம் உள்ளன! அதிகப்பணம் கொடுப்பதால் இவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு சலுகையும் கிடைப்பதில்லை. At least இவர்களுக்கு ஒரு அந்தந்த சுற்றுலாத்தலத்தை விவரிக்கும் சில கை ஏடுகளை கொடுக்கலாம், சில கைடுகளை நியமிக்கலாம்.
இதைத்தவிற Domestic விமான கட்டணமும் வெளிநாட்டவர்க்கும், இந்தியர்களும் வேறு வேறு :-(
