பதிவெழுதி பல நாட்கள் ஆச்சு, ஏதாச்சும் எழுதாலாம்னு பாத்தா எழுதுறதுக்கு ஒரு மண்ணும் தோண மாட்டேன்குது. இந்த லட்சனத்துல நான் டெம்லேட் எடுத்து பயண்படுத்திக்கொண்டிருந்த வெப்சைட்டும் திவாலாகிவிட... எனது பதிவே மஞ்சள் கலர்ல அலங்கோலமா ஆகிடுச்சு. சரி முதல்ல டெம்ப்ளேட்டை சரி பண்ணுவோம்னு, Gimp (2.6.2) டவுண்லோட் பண்ணுனேன், CSS டுட்டோரியல்களை படிக்க ஆரம்பிச்சேன், எழுதுடா கருப்பா ஒரு டம்ப்ளேட்டைனு எழுத ஆரம்பிச்சேன். ஒன்னும் சரிப்பட்டு வரலை... சரினு ஒரு வழியா வெப்பிலிருந்து ஒரு டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்து, அதில் நான் Gimp பயன்படுத்தி வரைந்த இமேஜ்களை பயன்படுத்தி ஒரு புது டெம்ப்லேட்டை தயார் செய்தாச்சு.
இன்னும் வேலை முழுசா முடியலை என்றாலும் பதிவுகளை பப்ளிஷ் பண்ணும் அளவுக்கு வந்தாச்சு. IE8, Firefox 3, Google Chrome ஆகிய வலை உலாவிகளில் நன்றாக தெரிகிறது. IE7ல் பதிவகள் சிதைகின்றன. சீக்கிரம் சரி செய்ய வேண்டும்.
ஒரு புது உற்சாகத்தோட ஆரம்பிச்சிருக்கேன்... எவ்வளவு தூரம் போகமுடியுது பாக்கலாம்!
அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு போன்ற ஊனமில்லாமல் பிறப்பது என்று நம் தமிழ் பாட்டி ஒரு காலத்தில் கூறினார். நம் காலத்தில் அரியது கேட்கின்... அரிது அரிது நல்ல மொபைல் கிடைப்பதரிது, அதனினும் அரிது கிடைத்த மொபைலை பாதுகாப்பாக வைத்திருப்பது!! கைப்பேசியை வைத்திருக்கவும், பயன்படுத்தவும் எனக்கு தெரிந்த சில குறிப்புகளை மக்களுக்கு கூறவே இந்த பதிவு.
வாங்குவது குறித்த குறிப்புகள்
1. கடைக்கு செல்வதற்கு முன்பே இனையத்தில் நன்றாக தேடி நல்ல ஒரு மாடலும், பிரான்டும் செலக்ட் செய்து கொள்ளுங்கள். தேடும் போது முக்கியமாக உங்கள் மொபைல் உபயோகத்தன்மையை நன்றாக சிந்தித்துக்கொள்ளுங்கள். அதாவது, "எதற்காக எனக்கு மொபைல்?" என்ற கேள்வியை உங்களுக்குள்ளே கேட்டுப்பாருங்கள். சிலருக்கு புகைப்படம் எடுக்கும் கருவியாக இருக்கவேண்டும், சிலருக்கு இனையம் உலாவும் கருவியாக இருக்கவேண்டும், சிலருக்கு எஸ்.எம்.எஸ் கருவி. இது உங்களுக்கு எந்த மாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற மெகா குழப்பத்துக்கு முடிவு கட்டும்.
2. நோக்கியா போன்ற பெயர் பெற்ற கம்பனி மொபைல்களின் பாதிவிலை அந்த கம்பனியின் பெயருக்காக என்பதை மனதில் வையுங்கள். SE, Motorola, LG போன்ற மற்றவர்களின் மொபைல்களைபற்றியும் படித்துப்பாருங்கள்.
3. குறைந்தது இரண்டு மூண்று கடையிலாவது, விசாரித்துக்கொள்ளுங்கள். விலை குறைப்பு, இலவச மெமரி கார்டுகள் போன்றவை சில கடைகளில் இருக்கும் சிலவற்றில் இருக்காது. புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பல மொபைல்களுக்கு தள்ளுபடி கிடைக்கும்!
4. மெபைல் வாங்கும் போது அட்டைப்பெட்டியின் சீல் சேதமில்லாமல் இருக்கிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக ரசீதுடன் வாங்குங்கள். மொபைல் அட்டைப்பெட்டியையும், ரசீதையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள். தயவு செய்து அட்டைப்பெட்டியை தொலைத்துவிட, தூக்கிப்போட வேண்டாம்!!! (பின்பு கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும்)
5. மொபைல் வாங்கும் போது, அதன் Accessories அதனுடனே வருகிறதா என பாருங்கள். சில நோக்கியா மொபைல்களுக்கு, Hands-free, data cable, memory card நீங்கள் தனியாக வாங்கவேண்டியிருக்கும்!
பயன்படுத்துதல் குறித்தவை
1. உபயோகிக்கும் போது பக்கவாட்டில் பிடிக்க வேண்டும், குறைந்த பட்சம் விரல்கள் மொபைல் பின் பகுதியின் மேல் பாகத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். படத்தில் நம்ம கோழியார் பிடித்திருப்பது போல. இது ஆன்டனாவில் இருந்து வெளிப்படும் சிக்னல்கள் உங்கள் விரல்களால் தடுக்கப்படாமல் இருக்க உதவும்.
2. தெருவோரங்களில் விற்க்கும் Flash LEDs வாங்கி மொபைல் ஆன்டனா மேல் ஒட்டுவது, வடிகட்டிய முட்டாள்தனம். உங்கள் மொபைலில் இருந்து வெளிப்படும் ஆற்றலை தேவையற்ற வண்ண வண்ண ஒளியாற்றலாக மாற்றி என்ன பயன்? உங்கள் மொபைலுக்கு சிக்னல் சரியாக கிடைக்காமல் போவதோடு, பேட்டரியும் விரைவாக தீர்ந்துவிடும்.
3. உங்கள் பேட்டரியின் தன்மை அறிந்து சார்ஜ் செய்ய வேண்டும். Li-Ion பேட்டரிகளை நீங்கள் முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்து பின் சார்ஜ் செய்ய வேண்டியதில்லை, மேலும் இந்த வகை பேட்டரி கொண்ட பல மொபைல்களை நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சார்ஜரில் சொருகி வைக்கலாம். Ni-Cad பேட்டரிகள் கொண்ட மொபைல்களை நன்றாக டிஸ்சார்ஜ் ஆன பிறகு சார்ஜ் செய்யவேண்டும், முழுவதுமாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜரில் இருந்து எடுத்து விடவும்.
4. ஆண்கள், மொபைலை வைக்கும் Pocketக்குள் சாவி கொத்து, சிகரட் லைட்டர்கள் போன்ற எந்த பொருளையும் வைக்க கூடாது. பெண்கள் கைப்பைக்குள் மொபைலை வைக்கும் போது வேறு கடினமான பொருட்களுடன் உரசாதவாறு வைக்கவும்.
5. திரையில் விழும் கீறல்களை தடுக்க பாலிதீன் Screen Guardகளை வாங்கி திரைமீது ஒட்டலாம்.
6. மொபைல்களில் தொடர்ந்து கேம் விளையாடுவதை தவிர்கவும். இதனால் உங்கள் கீப்பேட்கள் சீக்கிரம் கெட்டுவிடும்.
7. மொபைலை கீழே போட்டு விளையாடும் கெட்ட விளையாட்டு கூடவே கூடாது!!!
8. மொபைலில் பேசும் போது, மொபைலில் பேசுங்கள், அதாவது மொபைலை காதில் வைத்துக்கொண்டு பேச்சை நேரடியாக டெலிகாஸ்ட் செய்யாதீர்கள். உங்கள் கூச்சல் மற்றவர்களுக்கு பெரும் தலைவலி என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். மக்கள் அதிகம் கத்துவது மொபைல் போன் செட்டிங்கில் உள்ள தவறால்தான். மொபைலில் உள்ள ஒலியளவை நீங்கள் இருக்கும் இடத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள். ஆபீஸ் போன்ற அமைதியான இடங்களில் குறைவாகவும், சந்தை போன்ற இடங்களில் அதிகமாகவும் வைத்துக்கொண்டால் கத்தாமல் பேசலாம்.
9. Blue tooth, IR முதலியவற்றை எப்போதும் off செய்து வைக்கவும் . தேவை ஏற்படும் போது ON செய்து கொண்டு வேலை முடிந்த உடனே off செய்யுங்கள்!!
கைபேசி மற்றும் உங்கள் பாதுகாப்பு
1. வாகனம் ஓட்டும் போது உபயோகிப்பது தற்கொலைக்கு சமம். நீங்கள் உருப்டியாக ஊரு போய் சேர்வதை தவிற வேறு முக்கியமான விஷயம் எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளவும். தவிர்க்க முடியாத சூழலில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பின் பேசலாம்.
2. மொபைல் தொலைந்து விட்டால், திருடப்பட்டுவிட்டால் உடனே Service providerக்கு செய்தியை சொல்லி SIM கார்டை invalid ஆக்கிவிடவேண்டும். உங்கள் மொபைல் சட்டத்துக்கு புறம்பான காரியங்களில் பயண்படுத்த படலாம். நிச்சயமாக போலீஸிடம் தகவல் தெரிவிக்கவும். (பட்டாப்பட்டி டவுசரோட சிலேட்டில் பெயரை எழுதி ஸ்டேசனில் அமர்ந்து புகைப்படத்துக்கு போஸ் குடுக்கும் லட்சியம் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன்!). இந்த இடத்தில் தான் உங்கள் பில் கைகொடுக்கும்!! உங்கள் IMEI நம்பர், மொபைல் அட்டைப்பெட்டி மேல் அச்சிடப்பட்டிருக்கும்.
3. கண்ட இடத்தில் மொபைலை வைத்துவிட்டு போகாதீர்கள். ஹோட்டல்களில் சாப்பிடும் போது மேஜை மேல் வைக்காதீர். ஆண்கள் சட்டை பாக்கெட்டில் வைக்க வேண்டாம்.
4. தயவு செய்து மொபைல்களை பாத்ரூம்/டாய்லட்டுக்குள் எடுத்துச் செல்லாதீர்கள். நீர் அதிகம் உள்ள இடங்களுக்கு போகும் போது பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு செல்லுங்கள்.
5. Mobile usage ethics, கடைபிடியுங்கள். சினிமா தியேட்டர், இரவு நேர ரயில் பயணம், மருத்துவமனை, போன்ற அமைதியான இடங்களில் உபயோகிக்க வேண்டாம்.
பி.கு: "பேராண்டி, ஒலகத்துல ஓசியா கெடைக்கிறதும், ஓசியா குடுக்குறதும் அட்வைசு மட்டும்தான்டா!"னு எங்க ஆத்தா சொல்லியிருக்கா... அதான் கொஞ்சமா அட்வைசை அள்ளித்தெளிச்சுட்டேன். திட்டுறதுனா திட்டிக்கங்க, அதைவிட்டுட்டு படக்குனு கடைக்கு ஓடிப்போய் ஒரு எழுமிச்சம்பழமும், குங்கும பாக்கெட்டும் வாங்கி செய்வினை வைக்கிற வேலையெல்லாம் வேணாம்... ஒடம்பு தாங்காது.
நான் இந்த சுட்டியில் உள்ள கதையை படித்தேன். இதிலிருக்கும் தகவல்கள் புதிதாக கடன் அட்டை உபயோகிக்கும் மக்கள் மனதில் புளியைக்கறைக்கும்... ஆனால் கடனட்டையில் இதுபோன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை... என் கடனட்டை உபயோக அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட சில தகவல்கள் இதோ...
1. கடனட்டை எண்கள், கதையில் குறிப்பிட்டுள்ளது போல, அடுத்தடுத்த எண்களாக இருக்காது. இந்த எண்கள், ஒரு குறிப்பிட்ட (CRC) எண் கூட்டுத்தொகை மூலமாக உருவாக்கப்படுகிறது. ஆகையால், தவறுதலாக எழுதப்படும் எண் இன்னொருவரின் எண்ணாக இருப்பதற்கு மிக மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளது (கிட்டத்தட்ட இவ்வாறு நடக்காது என்றே கூறலாம்).
2. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலைகள் கிராஸ்ட் (Crossed/Account Payee) காசோலைகளாக இருக்க வேண்டும் இல்லையேல் காசோலை நிராகரிக்கப்படும்.
3. கிராஸ்ட் காசோலைகள் மூலம் பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கணக்குக்கு மட்டுமே மாற்ற இயலும். அதை காசாளரிடம் (cashier) கொடுத்து பணமாக பெற இயலாது.
4. சேமிப்பு கணக்கிலிருந்து காசோலை மூலமாக வேறு கணக்கிற்கு மாற்றப்படும் பணம் சம்பத்தப்பட்ட விவரம், சேமிப்பு வங்கிக்கணக்கு ரெக்கார்டுகளிள் இருக்கும். இந்த ரெக்கார்டுகளை, சேமிப்பு கணக்கின் உரிமையாளர், எந்த நேரத்திலும் தொலைபேசி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ, வேறுசில வழிகள் மூலமாகவோ வங்கியிலிருந்து பெற இயலும்.
5. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலையின் கணக்கு, அந்த கடனட்டை உரிமையாளரின் பெயரில் இருத்தல் அவசியம். உதாரணமாக KARUPPAN என்ற பெயரில் உள்ள கடன் அட்டைக்கு, UNKNOWN என்ற பெயரில் உள்ள சேமிப்பு கணக்கிலிருந்து செழுத்த இயலாது.
எனவே சுப்பிரமணியம் எண்களை தவறாக எழுதி, அந்த தவறான எண் வேறு ஒருவருடயதாக இருப்பதும், அந்த ஒருவரின் பெயரும் சுப்பிரமணியம் என்று இருப்பதும் இயலாத ஒன்று.
வங்கியில் பணிபுரியும் நன்பர்கள் தயவு செய்து தகவல்கள் சரியானவையா என்று தெரிவிக்கவும்.
என்னுடய நீண்டநாள் கணவு இந்த அழகான மாலைப் பொழுதில் அரங்கேறுகிறது. சமீப காலமாக சிறியவர் முதல் பெரியவர் வரை "Blogg" என்ற வார்த்தையை தாரகமந்திரம் போல் உபயோகிக்கின்றனர். இதோ குதித்துவிட்டேன் கோதாவில்...
என்றோ ஒரு நாள் நான் ஒரு நாளேட்டில் ஒரு கைதியின் பேட்டியை படிக்க நேர்ந்தது. அந்த கைதி தனது முதல் கொலை முதல் முத்தத்தை போன்று இன்பமாய் இருந்தாய் கூறியுள்ளான். நானும் என் முதல் பதிவு இனிமையாக இருக்குமென நம்புகிறேன் (எனக்கு மட்டுமாவது).
ம்... இப்போது பிரச்சனை என்னவென்றால் எதைப்பற்றி எழுதுவது? அரசியல்? சினிமா? பொது? கதை? ஹா... முதலிலேயே ஒரு கருத்தை பற்றி எழுவதற்க்கு எனக்கு மனமில்லை... வேண்டுமானால் இந்த முதல்பதிவை தமிழ் பதிவியல் வித்துவான்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்க்காக வைத்துக்கொள்ளலாம்!
பெரியோர்களே, சிறியோர்களே இந்த அடியேனுக்கு அனேக ஆசி வழங்கி உங்களுள் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
கருப்பன்.
பி.கு: இந்தப்பதிவை தமிழில் எழுத நான் எந்த ஒரு மொழிமாற்றியையும் பயன்படுத்தவில்லை மாறாக இது நேரடியாக தமிழ் (unicode) தட்டச்சு மூலமாக உள்ளீடு செய்யப்பட்டது. பிழை இருப்பின் மன்னித்தருளவும்.
