முதலில் நான் கடிகாரத்தை, ஓடுகிறதா என்று பார்த்தேன் நிச்சயமாக ஓடுகிறது மொபைலும் 2,35 என்றுதான் காட்டுகிறது. வெளியே எட்டிப் பார்த்தேன் நிச்சயமாக பெங்களூரேதான்!! வண்டி கிளம்பி கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஓடியிருக்கிறது இருப்பினும் பெங்களூரை தாண்டவேயில்லை. சகபயணிகள் அனைவரும் பயங்கரமாக தூங்கிக்கொண்டிருந்தனர். நீட்டி நிமிர்ந்து படுத்தால் தான் எனக்கு தூக்கம் வரும், எனவே பஸ் தூக்கமெல்லாம் அரைகுறைதான். சிலர் குறட்டைகூட விட்டுக்கொண்டிருந்தனர். கடும் குழப்பத்தில் டிரைவர் கேபின் சென்று கதவைத்தட்டினேன் (சற்று பலமாக தட்டியதில் நிச்சயம் டிரைவர் பயந்திருக்ககூடும்). டிரைவர் கூடவரும் ஆள் (கிளீனர்/2ம் டிரைவர்) கதவைத்திறந்தார். இருந்த கடுப்பில் நிச்சயம் அடித்திருப்பேன் தனியாக வந்திருந்தால்! கோபத்தை அடக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தேன்

நான்: என்னங்க நடக்குது இங்கே? மணி ரெண்டே முக்காலாச்சு இன்னும் பெங்களூர் கூட தாண்டல!
டிரைவர்: சார் வண்டி பிரேக்-டவுன் ஆகிருச்சு.
நான்: பிரேக்-டவுனா?? வண்டி தான் எங்கயுமே நிக்கலையே?
டிரைவர்: ஒன்னும் பிரச்சனை இல்லை சார் எல்லாம் சரியாகிருச்சு

பேசிக்கொண்டிருக்கும் போதே வண்டி மெயின் ரோட்டிலிருந்து விலகி அடர்ந்த யூகலிப்டஸ் காட்டுக்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் புகுந்தது! இருந்த கோபமெல்லாம் பயமாக மாறியது, தனியாக வந்திருந்தாலும் எதையும் சந்திக்கலாம், தங்கைவேறு கூட இருக்கிறாளே!!

நான்: இப்ப எங்கயா போய்க்கிட்டிருக்கீங்க??
டிரைவர்: சார் எங்க வண்டி ஒன்று டீசல் இல்லாம மாட்டிக்கிச்சு அதுக்குதான் டீசல் வாங்க பெங்களூருக்குள் போயிருந்தோம்
நான்: ?????!!!!!!! (கடுமையான குழப்பம்)

எதற்காக அவர்கள், காட்டுக்குள் மாட்டிக் கொண்டார்கள்?? அது என்ன வண்டி?? டீசல் வாங்குவதற்க்கு இத்தனை பேர் கொண்ட பஸ்ஸையா எடுத்துச் செல்வார்கள்?? இவர்களிடம் ஃபோன் இல்லையா?? ஆபீஸுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்காமல் ஏன் இப்படி ஊரை சுற்றுகிறார்கள்?? என ஏகப்பட்ட கேள்வி மனதுக்குள்!
எனக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது இவர்களிடம் தமிழ்நாட்டிற்க்குள் நுழைவதற்க்கு அனுமதி இல்லை!! இது போல ஒரு பர்வீன் சம்பவம் பற்றி என் நண்பன் முன்பு கூறியிருந்தான்!

நான்: உங்களிடம் தமிழ் நாட்டுக்குள் நுழைய பெர்மிட் இல்லை என்றால் முன்னமே கூறியிருக்க வேண்டாமா?? வண்டியை பெங்களூருக்கு திருப்புங்கள் (உச்ச பட்ச டெசிபெல்லில் கத்தினேன், இந்த நிலையில் பெங்களூர் திரும்புவதுதான் பாதுகாப்பானது என்று தோன்றியது)
டிரைவர்: சார் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, இப்படியெல்லாம் பேசாதீங்க சார் (கிட்டத்தட்ட அழுதுவிடுவான் போல இருந்தது)
நான்: சரி மதுரைக்கு கொண்டு போய் சேக்குறாப்புல ஐடியாவாவது இருக்கா??
டிரைவர்: (மௌனம்)

நான் போட்ட கூச்சலில் முன் சீட்டி அமர்ந்திருந்த பயணி எழுந்து விட்டார், எங்கள் பேச்சை கேட்டுக்கெண்டிருந்தவர் நிலமை புறிந்ததும் சண்டையை அவர் தொடர்ந்தார். நான் சீட்டில் வந்து அமர்ந்து என்ன செய்யவேண்டும் என்று யோசித்தேன்! எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது இந்த நடுக்காட்டுக்குள் வண்டியில் இருப்பதை தவிர வேறு வழியில்லை என்று!! சிறிது நேரத்தில் வண்டி திடீர் நிறுத்தத்திற்கு வந்தது. நின்ற இடம் நடுக்காடு!!!

இருக்கையிலிருந்து எழுந்து டிரைவர் கேபினுக்குள் நுழைந்தேன். எங்கள் பஸ்ஸுக்கு முன் வேறு ஒரு பஸ் நின்றிருந்தது. எங்களுக்கு முன் நின்றிருந்த வண்டி, எங்களுக்கு சற்று முன்னால் கிளம்பிய 9,00 மணி மதுரை வண்டி!! அதற்க்கும் முன்னால் ஒரு செக் போஸ்ட்!!!!!

அங்கே ஏற்கனவே பேய் முழி முழித்துக்கொண்டு ஒருவன் செக்போஸ்ட் அதிகாரி அருகில் கையைக்கட்டி நின்று கொண்டிருந்தான். 10 நிமிடம் ஏதேதோ பேசினார்கள், எங்கள் டிரைவர் கையில் இருந்து ஒரு சிறிய கவர் கைமாறியது. பேய் முழி முழித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் புண்ணகை, செக் போஸ்ட் ஆபீசருக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு 9,00 மணி வண்டிக்குள் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தான்! எங்கள் டிரைவரும் வந்து வண்டியை கிளப்பினார். மணி 3,00 ஒரு வழியாக செக்போஸ்ட் தாண்டியாகிற்று! அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டேன்.

மீண்டும் சீட்டில் வந்து அமர்ந்தேன், டிரைவரிடம் சண்டை போட்ட அந்த சக பயணி, தான் எழுந்து பார்த்த போது ஓசூர் மெயின் ரோட்டில் உள்ள செக்போஸ்டில் வண்டி நின்றிருந்ததாக கூறினார். அப்படியென்றால், அங்கிருந்து இந்த இரண்டு வண்டிகளும் திருப்பி கர்நாடகாவுக்குள் அனுப்பப்பட்டிருக்கின்றன, இவர்கள் காட்டுக்குள் இருக்கும் செக்போஸ்ட் வழியாக தப்பிச்செல்ல முயன்று கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றனர்! இதில் பின்னால் வந்த பஸ் திரும்பிச்சென்று பெங்களூரில் உள்ள ஆபீசில் பணத்தை பெற்றுக்கொண்டு, செக்போஸ்ட் ஆபிசர் ட்யூட்டி மாறியதும், லஞ்சத்தை கொடுத்து ஒரு பெரிய நாடகத்தையே நடத்தியிருக்கின்றனர்!!!

எப்படியோ ஒரு வழியாக ஒசூருக்குள் வந்து விட்டோம். வண்டி அங்கே ஒரு கடையில் நின்றது! சட்டென்று என் முன்னால் இருந்த பயணி எழுந்து, நேரம் பார்த்து, பையை எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னிடம் திரும்பி "ஏங்க! கரூர் வந்திருச்சுல்ல??" என்றார் அப்பாவியாக!! நான் சிரிப்பை அடக்கமுடியாமல் பயங்கரமாக சிரித்துவிட்டேன். "இல்லை இன்னும் ஓசூரில் தான் இருக்கிறோம்" என்றேன் சிரிப்பினூடே. அவர் ஆச்சர்யமடையாமல், நிம்மதியடைந்தார் சட்டென்று பையை மேலே வைத்தார், இருக்கையில் அமர்ந்தார், தூங்கிப்போனார்!!!!

சிரித்து சிரித்து கோபம் குறைந்து மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது. எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை தூங்கிப்போனேன். எழுந்த போது மணி காலை 7,30 தங்கையை பார்த்தேன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். சேலத்திலிருந்து ஒரு 35 கி.மீ தாண்டியிருந்தோம். சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த போதுதான் அது நிகழ்ந்தது!

இது பர்வீன் டிராவல்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவியை பற்றிய உண்மைக்கதை (கொஞ்சம் காமடியான கதை)! அந்த அப்பாவி வேற யாரும் இல்லைங்க நானே தான்!!

அது ஜூன் மாதம் 30, 2006; நானும் என் தங்கையும் பெங்களூரில் இருந்து மதுரைக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம். நாங்கள் பர்வீன் டிராவல்ஸில் டிக்கட் எடுத்திருந்தோம். டிக்கட்டில் பஸ் 9:40 PM க்கு மடிவாலாவில் பிக்கப் செய்யும் என எழுதியிருந்தது. நாங்கள் மடிவாலாவுக்கு 9:20 க்கு வந்து சேர்ந்தோம் (ஆனால் ரிப்போர்டிங் டைம் 9:00 என்று டிக்கட் சொல்லியது). பர்வீன் ஆபீசுக்கு சென்று அங்கு அமர்ந்திருந்தவரிடம் டிக்கட்டை காட்டினேன், அவன் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் "கொஞ்சம் பொறுங்கள் பஸ் வந்து கொண்டிருக்கிறது" என்றான். பக்கத்தில் ஒருவர் சென்னை டிக்கட்டை காண்பித்துக்கொண்டிருந்தார், அவருக்கும் இதே பதில்! அவன் டிக்கட்டை கூட பார்க்காமல் சொன்னதும் அவருக்கு ஆச்சர்யம், நிச்சயம் மூஞ்சியில் "இவர் 8,30 பஸ்ஸில் சென்னை போகிறார்" என்று எவனும் எழுதி ஒட்டிவிட்டானா என்று கண்ணாடியில் பார்த்திருப்பார். ஆனால் அவன் கூறிய வார்த்தைகள் பர்வீனில் பயணிக்கும் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று!

இருப்பினும் சில அப்பாவி பயணிகள் ஆபீஸ் முன் தங்கள் காத்திருத்தல் விளையாட்டை ஆரம்பித்தனர்!! நான் கடைக்கு சென்று தண்ணீர் வாங்கிக்கொண்டு என் தங்கை கொண்டு வந்த நூடுல்ஸை சாப்பிட ஆரம்பித்தேன். மீண்டும் பர்வீன் ஆபீசுக்கு 9,55க்கு வந்தோம், அங்கு ஒருவர் அந்த ஆபீஸ் அட்டன்டன்ட்டிடம் பேசிக்கொண்டிருந்தார், விவாதம் சூடாக இருக்கவே நின்று கேட்க தொடங்கினேன்...

பயணி: யோவ் என் பஸ் 9,00 மணிக்கு வரவேண்டியது
பணியாள்: இந்தா வந்துரும் சார்
பயணி: எப்போ??
பணியாள்: சார் உங்களுக்கு பெங்களூர் டிராஃபிக் பத்தி தெரியாதா என்ன?
பயணி: அப்ப என்ன எழவுக்குயா 8,30 க்கு வரனும்னு சொன்னீங்க??
(பாவம் இந்த அப்பாவி டிக்கட்டில் எழுதியிருக்கும் Reporting Time என்ற காமடியை சீரியஸாக எடுத்துக்கொண்டார் போலும்)
பணியாள்: (எக்கச்சக்கமான மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கடுப்பாகி) நான் பர்வீன்ல வேலை பாக்க வந்தேன் பாருங்க என்ன பிஞ்ச செருப்பாலையே அடிச்சுக்கனும்.
(சட்டென்று எழுந்து ஓட்டமும் நடையுமாக ஆபீஸுக்குள் நுழைந்து கொண்டார்)

மணி 9,58 ஒரு வழியாக 9 மணி பஸ் வந்து சேர்ந்தது, பின்னாலேயே 9,40 பஸ்!! உலக அதிசயம் VIII!!! நான் பஸ்சில் ஏறும் போது, கூட ஏறியவரின் டிக்கட்டை கவனித்தேன், அவரது டிக்கட்டில் பஸ் டைமிங் 9,30 என்று இருந்து கட்டணம் 400 ரூ-வாக இருந்தது. என் டிக்கட்டில் நேரம் 9,30 என்றும் கட்டணம் 500 ரூ என்றும் இருந்தது. எனக்கு அப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டது!! பின்பு தெரிந்து கொண்டேன் ஒரு ஒருவருக்கு ஒரு unique நேரமும் கட்டணமும் குறிக்கப்பட்டுள்ளது என்று. பஸ்ஸில் இட ஒதுக்கீட்டு குழப்பங்களுக்கும், அமளி துமளிக்கும் நடுவே ஒருவன் வந்து அனைவரிடமும் டிக்கட்டை வாங்கிக்கொண்டு போனான். அப்போது எங்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை இது எப்பேர்பட்ட தந்திரம் என்பது!

பஸ் A/C செய்யப்பட்டிருந்தது, VOLVO பஸ்களை போல வெளியே உயரமாக இருந்தது இருப்பினும் இது VOLVO பஸ் இல்லை. உள்ளே மற்ற ஏர் பஸ்களை போல தாழ்வான இருக்கைகள் தான். இந்த பஸ்ஸெல்லாம் கவுந்தால் கவுத்துப்போட்ட ஆமை மாதிரி எந்திரிக்கவே முடியாது என்று தோண்றியது.

பஸ்சில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு அழகான 6 இன்ச் LCD டீவி இருந்தது (விமானத்தில் இருப்பதைப்போல!). அந்த வினாடியில் என் வாழக்கையில் பார்த்த சிறந்த பஸ் எது என்று கேட்டால் இந்த பஸ்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லியிருப்பேன்! ஒரு சக பயணி ஆர்வ மிகுதியால் ஏன்பா "இந்த டீவியை கொஞ்சம் போடுங்கப்பா" என்றார். டிரைவர் "சார் டீவியை போட்டா ஏசி ஓடாது" என்றதும் கடுப்பாகி அந்த பயணி "அப்ப பேசாம இஞ்சின நிருத்திருயா" என்றார். சிறிது நேரத்தில் பஸ் கிளம்பி ஓட ஆரம்பித்தது... நானும் முந்தய இரவில் ஆபீஸில் கண்முழித்து வேளை பார்த்த அசதியில் தூங்கிப்போனேன். பஸ் நிற்காமல் ஒடிக்கொண்டே இருந்ததை உணரமுடிந்தது.

மறுநாள் காலை 2,30 க்கு வண்டி ஒரு இடத்தில் நின்றிருந்தது. என்ன நடக்கிறது என்று கீழே இறங்கிப்பார்தேன். அங்கே டிரைவர் ஒரு பெரிய கேன் எடுத்து டீசல் வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக வண்டி சேலத்தை தாண்டிவிட்டது என நினைத்து சந்தோஷப்பட்டேன். மீண்டும் பஸ் கிளம்பியது நானும் வண்டியில் ஏறினேன். என் தங்கை தூக்கம் கலைந்து "எங்கணே இருக்கோம்" என்று கேட்டாள் நானும் சிரத்தையாக "சேலத்தை தாண்டி வந்துட்டோம்னு நினைக்கிறேன்" என்றேன். பிறகு இருக்கையில் அமர்ந்ததும் மொபைலை எடுத்து ஏரியா பார்த்த போது "Electronics City" என்று காட்டியது!!!! நாங்கள் இன்னும் பெங்களூரில்தான் இருந்தோம்!!!

நீங்கள் நீலச்சட்டை போட்டுக்கொண்டு பந்தடிப்பவர்களை மெச்சுபவர் இல்லையா?? நீங்கள் கிரிக்கெட் என்ற விளையாட்டில் ஆர்வம் இல்லாதவரா??? ஆம், என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு தேச துரோகி! அட, நான் சொல்வது உண்மைதான், பல கோடி மக்கள் வாழும் இந்த மாபெரும் துணைக்கண்டத்தின் மானத்தையும், புகழையும் காப்பது யார் என்று நினைத்தீர்கள்?? இந்த நீல சட்டை வீரர்கள் தான்! நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் பிரதமருக்கோ, தேர்ந்து எடுக்கும் உங்களுக்கோ இந்த நாட்டின் மானத்திற்கோ எந்த சம்மந்தமும் இல்லை என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? "Who represents India?" என்று ஒரு உண்மைக் குடிமகனிடம் கேளுங்கள் "Men in Blue" என்று அழகாக சொல்லுவார்கள். அப்ப ஜனாதிபதியெல்லாம் சுத்த வேஸ்ட்டா என்ற அபத்தமான கேள்வியை கேட்டால் "யாரோ ஒரு அம்மாதான் ஜனாதிபதி ஆனா அந்தம்மா பேருதான் நியாபகத்தில் இல்லை" என்று பதில் கிடைக்கும்!

ஒரு ஒரு ஒலிம்பிக் போட்டிகளிளும் ஒரு வெங்கலம் அல்லது ஒரு வெள்ளி வாங்குவது இந்தியாவுக்கு பெருமையாம், இந்த நீலச்சட்டை நாயகர்கள் ஒரு நாள் உலகக் கோப்பையில் வெளியேறியது இந்தியாவுக்கு பெரும் அவமானமாம்?? உலகில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் வெறும் 10 நாடுகள் பங்கு பெரும் கிரிக்கெட் போட்டி எப்படி உலகக் கோப்பையானது என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. அனைத்து நாடுகளும் பங்கு பெரும் ஒலிம்பிக் ஒரு பொருட்டே அல்ல!!

முதலில் இந்த நீலச்சட்டை நாயகர்களின் யோக்யத்தை பார்கலாம். இந்த நீலச்சட்டை விரர்கள் BCCI என்ற பணம் காய்க்கும் நிறுவனத்தின் செல்லப்பிள்ளைகளே அன்றி இந்தியாவின் நேரடி செல்லப்பிள்ளைகள் அல்ல (உண்மையில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை தாங்கிப்பிடிக்க ஒலிம்பிக் வீரர்கள் தான் வேண்டுமேயன்றி இந்த நீலச்சட்டைகரர்கள் அல்ல). போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக பயிற்சியில் ஈடுபடுவது போல் பத்திகைக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு தண்ணியைப்போட்டு மட்டையாகிக் கிடந்த மேட்டர் இவர்கள் தோத்தால் மட்டும் பத்திரிகையில் இடம்பெரும். இவர்களில் எத்தனை பேர் வருமான கணக்கு சரியாக காண்பித்து வரி செழுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? உண்மையைக்கூற வேண்டும் என்றால் சரியாக வரி செழுத்தாமல், சரியாக விளையாடாமல் கிடைத்த பெயரை பணமாக்குவதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் அல்லவா தேச துரோகிகள்?

இவர்கள் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டார்கள் திருந்த வேண்டியது நாம்தான், கிரிக்கெட் ஒரு சாதாரன விளையாட்டு இதுவும் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு, இதை நாட்டோடு சம்மந்தப்படுத்தி கொண்டாடாமல் இருப்போம்!!

தமிழில் பொதுவாக பெண்களை குறிப்பிடும் போது மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட நேர்மாறாக குறிப்பிடுகின்றனர் ஆண்களை "Cool Guys" என்றும் பெண்களை "Hot Girls" என்றும் கூறுகின்றனர். தமிழில் நெருப்பு என்று ஆண்களையும் பஞ்சு என பெண்களையும் குறிப்பிடுகின்றனர்.

இது மட்டுமல்ல நாமெல்லாம் கங்கா, யமுனா, காவேரி என ஆறுகளுக்கு பெயர் வைக்கிறோம் ஆனால் ஆங்கிலத்திலோ கத்ரீனா, ரீட்டா என புயலுக்கும், சூராவளிக்கும் பெயர் வைக்கின்றனர். இந்த முரண்பாடு ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சற்று விளக்குங்களேன்.

கணினி உபயோகிப்போர் அனைவருக்கும் வைரஸ் என்பது மிகவும் பழக்கமான வார்த்தை. வைரஸ்ஸை தடுப்பதற்க்கு ஆன்டி-வைரஸ் தான் ஒரே வழி என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் முறையான செட்டிங் செய்வதாலும், இன்டர்நெட், பென்டிரைவ் பயன் படுத்தும் போது கவனமாக இருப்பதாலும் பெரும்பாலான வைரஸ்களை தடுக்க முடியும். Virus/Trojans/Worms தடுப்பதற்க்கு சில வழிமுறைகளை கீழே பார்க்கலாம்

பயனர் அக்கவுன்ட் உபயோகம்
* உங்கள் கணினியில் இரண்டு பயனர் (User) அக்கவுன்ட்கள் உருவாக்குங்கள்.
* ஒரு பயனருக்கு கணினி நிர்வாக உரிமையை வழங்குங்கள் (Administrator Rights)
* இன்னொறு பயனருக்கு உபயோக்கிப்போர் உரிமையை வழங்குங்கள் (User Rights)
* முதல் பயனர் அக்கவுன்டை கணினி நிர்வாகத்திற்கு (புதிய மென்பொருள் நிறுவுதல், காலத்தை மாற்றியமைத்தல்) முதலியவற்றுக்கு பயன்படுத்துங்கள்
* இரண்டாவது பயனரை மற்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்துங்கள் (Web Browsing, programming, image viewing, movie watching etc..)

Autorun Disable செய்தல்
* பென்டிரைவ், சி.டி, முதலிய வெளியில் எடுத்துச் செல்லக்கூடிய மீடியங்களின் மூலம் பரவும் வைரஸ், வின்டோஸில் உள்ள ஆட்டோரன் (Autorun) சேவையை பயன்படுத்துத்திக்கொள்கிறது.

* ஆட்டோரன் சேவை பெரும்பாலான நேரங்களில் நமக்கு தேவைப்படுவதில்லை அதனால் அதை Disable செய்வது நல்லது.

* Start Menu->Run க்கு சென்று gpedit.msc என்று டைப் செய்து OK பட்டனை அழுத்துங்கள். கீழ்கானும் வின்டோ திறக்கும்
* படத்தில் உள்ளதைப்போல இடதுபுறம் உள்ள கிளையில் User Configuration --> Administrative Templates --> System என்ற ஃபோல்டரை திறந்து வலது புறம் உள்ள
Turn off Autoplay என்ற ஐட்டத்தை இரண்டு முறை சொடுக்குங்கள் (Double Click).

* புதிதாக தோன்றும் வின்டோவில் Enabled என்பதை தேர்வு செய்து All Drives என்பதை தேர்வு செய்யவும். OKவை சொடுக்கி வின்டோவை மூடுங்கள்

எக்ஸ்டன்ஷனை காட்டச்செய்தல்
* பல வைரஸ்கள் பார்பதற்கு ஃபோல்டர்களை போலவே காட்சியளிக்கும், ஆனால் அவற்றின் எக்ஸ்டன்சன் .exe என்று இருக்கும் (கீழே உள்ள படத்தை பார்க்கவும், பச்சைவட்டம் உன்மையான ஃபோல்டர், சிகப்பு வட்டம் வைரஸ்)
* எக்ஸ்டன்ஷன் காட்டப்படவில்லை என்றால், இதுபோன்ற வைரஸ்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது
* வின்டோஸ் பைல் எக்ஸ்டன்ஷன்களை காட்டுவதற்க்கு Control Panel-->Folder Option திறந்து கீழ் காணும் படத்தில் உள்ளது போல் Hide Extensions for known file types என்ற டிக் பாக்ஸில் உள்ள டிக்கை எடுத்துவிடுங்கள்.
* .exe, .pif, .scr, .com, .bat, .cmd போன்ற எக்ஸ்டன்ஷன்களை கொண்ட பைல்களை (நீங்கள் நிறுவாமல் இருக்கும் பட்சத்தில்) சொடுக்காதீர்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் கண்ட கண்ட IE Toolbar-களை நிறுவாதீர்கள்!!!


பெரும்பாலும் வைரஸ்கள் நமது கவனக்குறைவால்தான் பரவுகின்றன, கவனமாக இருந்தால் வைரஸ்கள் ஒன்றும் பெரிய தொல்லை கொடுக்கமுடியாது.

கொலைக்கான அர்த்தம் நமக்கு மனிதனின் உயிரை எடுத்தல் என்றுதான் சொல்லித்தரப்பட்டுள்ளது. ஆனால் மனிதனின் உயிரை எடுப்பதைவிட கொடூரமான கொலைகள் நமது கண்முன் நடந்தும் நாமெல்லாம் அதை கண்டுகொள்ளாக் குருடர்களாகவே வாழ்கிறோம். எனது இந்தப்பதிவு கொலையாகும் மனிதர்களைப்பற்றியல்ல, மனிதானால் கொலை செய்யப்படும் இயற்கை பற்றியது!

இயற்கை உலகத்திற்கு அளித்துள்ள பல பரிசுகளுள் முக்கியமானது மரங்கள்! ஒரு விதை நல்ல மரமாக வளர்வதற்க்கு குறைந்தது 100 வருடங்கள் பிடிக்கிறது, அதன் ஆயுள் காலம் முடிவதற்கு சில 100 வருடங்கள் ஆகிறது. வெறும் 20 ஆண்டுகளில் இளமையடைந்து, 60 ஆண்டுகளில் மாண்டுபோகும் மனிதன் மரங்களை கொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்?

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினமும் தன் வாழும் இடங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனக்கு ஏற்ப தான் வாழும் இடங்களை மாற்றியமைக்கிறான்! இதை நாமெல்லாம் நாகரீக வளர்ச்சி என்று மார்தட்டிக்கொள்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நம் உலகத்தில் உள்ள மற்ற உயிர்களை அழிப்பது மட்டுமல்லாமல் நம்மையும் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

மேலே உள்ள படங்கள் பெங்களூரில் எடுக்கப்பட்டவை! பெங்களூர் 7 வருடங்களுக்கு முன்னால் நான் வந்த போது "பூங்கா நகரம்" - ஆக இருந்தது, இன்றோ இது "புழுதி நகரம்"-ஆக உள்ளது. நான் பெங்களூர் வந்தபோது ஜூன் மாதம், குற்றாலித்தில் இருப்பது போல் காற்றில் மிதக்கும் சாரல், லேசான வெண்பனி, அடர்ந்த மரங்கள், என சொர்கத்திற்குள் நுழைந்த மாதிரி இருந்தது. சூரிய வெளிச்சத்தை பார்க்க கிட்டத்தட்ட பல மாதங்கள் பிடித்தது. தமிழ் நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் கூட இங்கு மிதமான வெப்பமாக இருக்கும் வெய்யில் தரையில் படாத அளவுக்கு மரங்கள் இருக்கும், ரோட்டோரங்களில் நடப்பதே சுகமாக இருக்கும். இன்றோ நிலமை தலைகீழ் பகலில் சுட்டெரிக்கும் வெய்யில் மற்றும் தூசு, இரவில் கடும் குளிர்! பாலைவனத்தில்தான் இவ்வாறு இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மரங்கள் அனைத்தையும் வெட்டி ஒரு நகரத்தையே பாலைவனம் ஆக்கியாகிற்று, என்ன ஒரு சாதனை!!

இந்த பூமி நமக்களித்த வளங்களை எல்லாம் நன்றாக சுரண்டிவிட்டு, நாம் இருதியாக நமது சந்ததியினருக்கு விட்டுப்போவது வெறும் கான்க்ரீட் காடுகளைத்தான்!

நேற்று "I am Legend" - இன் DVD வாங்கினேன். வாங்கும்போது சிறிது தயக்கமாகத்தான் இருந்தது, இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு பரபரப்பான செய்தியையும் கேட்டிருக்கவில்லையே. ஆனால் படத்தின் பெயர்மட்டுமல்ல படமே ஒரு Legend என்பதை பிறகு புரிந்துகொண்டேன்.


நம்மைத்தவிர, இந்த உலகத்தில் உள்ள அனைவரும் திடீரென்று இறந்துவிட்டால் என்னவாகும் என்று நாம் சில சமயம் நினைத்துப்பார்ப்போம். அந்த நினைவுகளை கண்முன் நிறுத்தும் ஒரு மிகச்சிறந்த படம்தான் இது. வில்ஸ்மித்தை எனக்கு அவ்வளவாக பிடிக்காது, இந்த படம் பார்த்ததிலிருந்து நான் அவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன்!!

புற்று நோயை குணப்படுத்த, மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் கிருமி, புற்று நோயை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் மிகவேகமாகப் பரவி மனித இனத்தையே அழித்து விடுகிறது. நியூயார்க்கில் கிருமியால் தாக்கப்படாத ஒரே மனிதன் Dr. Robert Neville (வில்ஸ்மித்), நோயால் தாக்கப்படாத மற்றவர்களை தேடுவதோடு, நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலையிலும் இறங்குகிறார். உலகத்தில் உள்ள 90% மக்கள் கிருமியின் தாக்கத்தால் உயிரிழக்கின்றனர். 9% மக்கள் கிருமியால் தாக்கப்பட்டு, வெறிபிடித்த Zombi-களை போல அலைகின்றனர், மீதமுள்ள 1% மக்களும் தனிமை வாட்டத்தால் தற்கொலை செய்துகொள்கின்றனர், இன்னும் சிலர் கொலைசெய்யப்படுகின்றனர், வில்ஸ்மித் தனி மனிதனாக நியூயார்கில் வலம் வருகிறார். இந்த தனிமனிதன் தனது இனத்தை பல பிரச்சனைகளுக்கு மத்தியில் எவ்வாறு காப்பாறுகிறார் என்பதை அழகாக சொல்லும் படம்தான் "ஐ ஆம் லெஜன்ட்".

படத்தின் சிறப்பம்சங்கள்

* படத்தில் செட்டிங் மிகவும் அற்புதமாகவும் தனிமையின் கொடூரத்தை கண்முன் நிறுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது


* இடையில் காட்டப்படும் ஃப்ளாஷ் பேக்குகள் மக்கள் இருக்கும் போது உள்ள நகரத்திற்கும், மக்கள் இல்லாத நகரத்திற்கும் வேறுபாட்டை அழகாக சொல்கிறது


* தனிமை வாழ்கையில் தனது ஒரே நண்பனான Sam என்ற நாயை இழந்து கதாநாயகன் தவிப்பது, Human Psychology-யை அப்படியே பிரதிபலிக்கின்றது


* வில்ஸ்மித், நாயை இழந்து வீடியோகடைக்கு வந்து பொம்மையிடம் ஹலோ சொல்லச்சொல்லி கெஞ்சுமிடத்தில் சென்டிமென்டாக நெஞ்சை தொட்டுவிடுகிறார்


* கதை சொல்லும் விதமும், character development-ம் மிக மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது


* படத்தில் எல்லாக்காட்சிகளிம் பல நுணுக்கங்கள் உள்ளன, வில்ஸ்மித் Shrek-3 படத்தை பார்த்து அனத்து வசனங்களையும் அச்சு அசலாக கூறும் போது அவர் அதை எத்தனை முறை பார்த்திருப்பார் என்பதும் தனிமை எவ்வளவு கொடுமை என்பதும் தெரியும்


* தனது ஆராய்ச்சியை பதிவுசெய்யும் காட்சிகள் மிக மிக நேர்த்தியானவை!!

நீண்ட நாட்களுக்கு பிறகு மிகச்சிறந்த ஒரு படம் பார்த்த திருப்தி மனதில் நிற்கின்றது. ஒருவழியாக பீமா முதல் நாள் காட்சி பார்த்த பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டேன்.