உலகம் மெச்சும் மேதாவிகள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் புகழ்பெற்ற ஆராச்சியாளர்களிடம் உள்ள ஒரு மிகச்சிறந்த ஒற்றுமை என்னவென்றால் அவர்கள் அனைவரும் மிகச்சிறந்த கற்பனை வளம் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கற்பனை வளத்தை எண்ணி நான் வியக்காத நாளில்லை, தனது ரிலேட்டிவிட்டி தத்துவத்தை அவர் உருகிய விதம், அவரது கற்பனை, அவ்வளவு பிரமிப்பாக இருக்கும்.
ஒருவன் சிறந்த விஞ்ஞானியாகவும் படைப்பாளியாகவும் ஆக மிகமுக்கியமான தகுதி அவனுடைய கற்பனை திறனாகும். சிறுவயதில் உங்கள் நண்பர்கள் உங்களது உள்ளங்கைகளை மூடிக்கொள்ள சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு மலரை நினைத்துக் கொள்ளச் செய்து சில நிமிடம் கழித்து உங்கள் உள்ளங் கைகளை முகர்ந்து பார்க்க சொல்வர். ஆச்சர்யமாக உங்கள் உள்ளங்கையில் அந்த மலரின் வாசம் வீசும்! உண்மையில் அந்த வாசம் உங்கள் உள்ளங்கைகளில் இல்லை அது உங்கள் கற்பனையில் இருக்கிறது [சிறு வயதில் இது அழகாக வேலை செய்தது இப்போது சரியாக வேலை செய்யவில்லை :(].
நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம், தற்செயலாக என் பெரியம்மா வீட்டில் ஒரு முத்து காமிக்ஸ் கிடைத்தது, "முகமூடி வீரர் மாயாவி தோன்றும்..." ஏதோ ஒரு கதை. படிக்க படிக்க அவ்வளவு சுவாரஸ்யம். என்னால் அதில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் அணுபவிக்க முடிந்து. மாயாவி வாழும் மண்டை ஓட்டு குகையின் இருள், அந்த காட்டின் ஈரக் காற்று முதலியவற்றை என்னால் உணர முடிந்தது. அது தான் கற்பனையின் சக்தி! குகைக்குள் செல்லாமல், காட்டுக்குள் செல்லாமல் வெறும் படம் வரைந்த காகித்தை உற்றுப்பார்த்து மட்டுமே அதை உங்களால் அனுபவிக்க முடியும். அது தான் நான் படித்த முதல் காமிக்ஸ், அந்த சமயத்தில் அத்தி பூத்தாற் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காமிஸ் கிடைக்கும் அதை படிக்கும் சுகமே அலாதி.
நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்த சமயம் தற்செயலாக ஒரு பெரிய காமிக்ஸ் அதுவும் என் அபிமான கதாநாயகன் "இரும்புக்கை மாயாவி"யின் கதை. மூன்று வேற்று கிரக மனிதர்கள் பூமியில் ஊடுருவி பூமியை கைப்பற்ற முன் எச்சரிக்கையாக ராணுவ தளவாடங்களையும், மனிதர்களின் தற்காப்பு கட்டமைப்புகளையும் சேதப்படுத்துவார்கள். அவர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவர்களுக்கு தலையில் முடிக்கு பதிலாக கண்ணாடி இருக்கும். கதை ஒரு துணிக்கடையில் நடந்த கொள்ளையில் இருந்து தொடங்கும். அந்த கடையில் மூன்று தொப்பிகள் மட்டும் காணாமல் போயிருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்த காமிஸ்ஸை குறைந்த பட்சம் 10 தடவையாவது படித்திருப்பேன். பத்து முறையும் கிளைமாக்ஸில் அந்த மூன்றாவது வேற்றுகிரகவாசியை மடக்கும் காட்சி என்னுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தாமல் விட்டதில்லை.
கிட்டத்தட்ட அதே ஆண்டு என் அக்காவின் திருமணம் நடந்தது. மாமா நாவல்கள் அதிகம் படிப்பார். அப்போது மாமாவிடம் இருந்த சுபா அவர்கள் எழுதிய "மரணத்தை விற்றவன்" என்ற நாவல் என் கையில் கிடைத்தது. முதல் அத்தியாயத்திலேயே அதில் மூழ்கிவிட்டேன். கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரங்கள் உட்கார்ந்த இடத்தைவிட்டு அணு அளவும் அசையாமல் கதையை படித்து முடித்தேன்.
காமிஸ்க்கும் நாவலுக்கும் பெரிய வித்யாசமில்லை. காமிஸ்ஸில் படங்கள் மூலம் நடப்பவற்றை உங்கள் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதையே நாவலில் வாக்கிய வர்ணணை மூலம் காட்சியை உங்கள் கண் முன் கொண்டு வருவார்கள். மரணத்தை விற்றவன் நாவலில் கொடைக்கானல் ஏரியை சுற்றி சில காட்சிகள் நடக்கும், நாவல் படிக்கும் போது எனக்குள் தோண்றிய கற்பனை காட்சிக்கும் பின்நாளில் நான் நேரில் கண்ட கொடைக்கானலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. சொல்லப்போனால் எனது கற்பனை கொடைக்கானல் ஏரி சுத்தமாக இருந்தது!
தொடரும்...