கொலைக்கான அர்த்தம் நமக்கு மனிதனின் உயிரை எடுத்தல் என்றுதான் சொல்லித்தரப்பட்டுள்ளது. ஆனால் மனிதனின் உயிரை எடுப்பதைவிட கொடூரமான கொலைகள் நமது கண்முன் நடந்தும் நாமெல்லாம் அதை கண்டுகொள்ளாக் குருடர்களாகவே வாழ்கிறோம். எனது இந்தப்பதிவு கொலையாகும் மனிதர்களைப்பற்றியல்ல, மனிதானால் கொலை செய்யப்படும் இயற்கை பற்றியது!

இயற்கை உலகத்திற்கு அளித்துள்ள பல பரிசுகளுள் முக்கியமானது மரங்கள்! ஒரு விதை நல்ல மரமாக வளர்வதற்க்கு குறைந்தது 100 வருடங்கள் பிடிக்கிறது, அதன் ஆயுள் காலம் முடிவதற்கு சில 100 வருடங்கள் ஆகிறது. வெறும் 20 ஆண்டுகளில் இளமையடைந்து, 60 ஆண்டுகளில் மாண்டுபோகும் மனிதன் மரங்களை கொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்?

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினமும் தன் வாழும் இடங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனக்கு ஏற்ப தான் வாழும் இடங்களை மாற்றியமைக்கிறான்! இதை நாமெல்லாம் நாகரீக வளர்ச்சி என்று மார்தட்டிக்கொள்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நம் உலகத்தில் உள்ள மற்ற உயிர்களை அழிப்பது மட்டுமல்லாமல் நம்மையும் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

மேலே உள்ள படங்கள் பெங்களூரில் எடுக்கப்பட்டவை! பெங்களூர் 7 வருடங்களுக்கு முன்னால் நான் வந்த போது "பூங்கா நகரம்" - ஆக இருந்தது, இன்றோ இது "புழுதி நகரம்"-ஆக உள்ளது. நான் பெங்களூர் வந்தபோது ஜூன் மாதம், குற்றாலித்தில் இருப்பது போல் காற்றில் மிதக்கும் சாரல், லேசான வெண்பனி, அடர்ந்த மரங்கள், என சொர்கத்திற்குள் நுழைந்த மாதிரி இருந்தது. சூரிய வெளிச்சத்தை பார்க்க கிட்டத்தட்ட பல மாதங்கள் பிடித்தது. தமிழ் நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் கூட இங்கு மிதமான வெப்பமாக இருக்கும் வெய்யில் தரையில் படாத அளவுக்கு மரங்கள் இருக்கும், ரோட்டோரங்களில் நடப்பதே சுகமாக இருக்கும். இன்றோ நிலமை தலைகீழ் பகலில் சுட்டெரிக்கும் வெய்யில் மற்றும் தூசு, இரவில் கடும் குளிர்! பாலைவனத்தில்தான் இவ்வாறு இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மரங்கள் அனைத்தையும் வெட்டி ஒரு நகரத்தையே பாலைவனம் ஆக்கியாகிற்று, என்ன ஒரு சாதனை!!

இந்த பூமி நமக்களித்த வளங்களை எல்லாம் நன்றாக சுரண்டிவிட்டு, நாம் இருதியாக நமது சந்ததியினருக்கு விட்டுப்போவது வெறும் கான்க்ரீட் காடுகளைத்தான்!

3 மறுமொழிகள்:

சம்பூகன் said...

நண்பர் கருப்பன்,

இந்த பதிவினை படித்து பார்த்து நேரமிருப்பின் உங்கள் கருத்தை கூறவும்.

அன்புடன்
சம்பூகன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உலகம் பூரா இதுதான் நடக்குது. பூமி வெப்பமாகிரதென்ற வெற்றுக் கூச்சலுடன்...

கருப்பன் (A) Sundar said...

சம்பூகன், வருகைக்கு நன்றி. நிச்சயம் நீங்கள் சுட்டிய பதிவை படிக்கிறேன்.

யோகன், உலகம் பூரா இது நடக்கிறது என்பது சரிதான் ஆனால் இந்தியாவில் இது மிக அதிகமாக நடக்கிறது. நமக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை :-(