வெளியிலோ கொளுத்தும் வெய்யில், வீட்டிலும் உருப்படியான பொழுதுபோக்கு இல்லை, சரி சினிமாவுக்கு கிளம்பலாம் என்றாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எந்த உருப்படியான படங்களும் ஓடிக்கொண்டிருக்கவில்லை, என்ன செய்வது என்று தெரியாமல் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடும் நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குள் அடைபட்டு கிடந்தேன்.

அப்போதுதான் நியாபகம் வந்தது, ஜெர்மனியிலிருந்து நான் எடுத்து வந்திருந்த 500GB USB ஹார்ட் டிஸ்க். அந்த டிஸ்கில் நண்பனிடமிருந்து பல ஆங்கிலப்படங்களை பதிவு செய்து வந்திருந்தேன். சரி எதாவது நல்ல பழைய படத்தை ஓடவிடலாம் என்று மடிக்கணினியை திறந்தேன். "ஹூம்... நல்ல படமாக சிக்கினால் தப்பித்தோம் இல்லையென்றால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஒரு பெட்டை ரிசர்வ் பண்ணவேண்டியதுதான்" என்று நினைத்துக்கொண்டே, Ocean's Elevenஐ திறந்தேன் எங்கோ கேட்ட பெயர் நிச்சம் கைவிடாது என்று தோண்றியது.

அடப்பாவி ஒரு படத்தை பற்றி சொல்லுறதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று நீங்கள் கையில் எதையோ எடுப்பது தெரிகிறது வேண்டாம்... அப்புறம் கொலைக்கேஸ்ல உள்ள போயிருவீங்க. சரி... சரி... இந்தா நேரா மேட்டருக்கு வந்துட்டேன்.

டேனி ஓஷன் (Danny Ocean), சிறைச்சாலையில் விசாரணக் கைதியாக இருக்கிறார். விசாரணையின் போது அவர் மணைவி அவரைவிட்டு பிரிந்து இருப்பதும் அதனால் அவர் மனமுடைந்திருப்பதாக கூறுகிறார். ஜாமீனில் வெளியே வரும் ஓஷன், தனது நண்பனும் முன்நாள் கூட்டாளியுமான, ரஸ்டி ரயன் (Rusty Rayan)ஐ சந்திக்கிறார். இருவரும் வயதான முன்னாள் சூதாட்ட விடுதி (Casino) நடத்துனரான ரூபன்-ஐ சந்தித்து, தாங்கள் அமேரிக்காவிலேயே மிகப்பெரிய மூண்று சூதாட்ட விடுதியை கொள்ளையடிக்கப் போவதாகவும் அதற்கான பண உதவியை ரூபன் செய்யுமாறும் கேட்கின்றனர். இதற்குமுன் Casino கொள்ளையர்கள் அவர்களது முயற்ச்சியில் எப்படி கொடூரமாக கொல்லப்பட்டனர் என ரூபன் விளக்குகிறார், அதனால் அவர்களது கோரிக்கைக்கு தயக்கம் காட்டுகிறார்.

ஓஷன் தான் கொள்ளையடிக்கும் Casinoக்கள் பெல்லாஜியோ (Bellagio), தி மிராஜ் (The Mirage) மற்றும் MGM கிராண்ட (MGM Grand) என்று ரூபனிடம் கூற ரூபன் சம்மதிக்கிறார். ரூபனுக்கும் இந்த மூண்று சூதாட்ட விடுதியின் முதலாளியான டெரி பெனிடிக்ட் (Terry Benedict)க்கும் முன்பகை, பெனிடிக்ட் ரூபனை ஆள்பலத்தை உபயோகித்து வியாபாரத்தில் இருந்து வெளியேற்றியதால், இதை ரூபன் பழிவாங்கும் வாய்ப்பாக கருதுகிறார்.

இந்த மூண்று விடுதிகளிளும் சேர்க்கப்படும் பணம், ஒரு மத்திய, அதி நவீன கருவிகள் மூலமாகவும் பல திறமையான குழுவாலும் பாதுகாக்கப்படும் பெட்டகத்தில் வைக்கப்படும். இந்த பெட்டகத்தின் உள் கதவு சரியான கைரேகை இருந்தால் மட்டுமே திறக்கும். இரண்டாம் நிலை கதவுக்கும் கடுமையான செக்யூரிட்டி கோட் தேவை இது 12 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றப்படும். மாற்றப்பட்ட கோட் டெரி பெனிடிக்டிடம் இருக்கும்.

இந்த பெட்டகத்தை கொள்ளையடிப்பது முடியாத காரியம் மட்டுமல்ல தற்கொலை முயற்ச்சி போன்றது என்று வர்ணிக்கப்பட்டாலும், ஓஷன், ரயன், ரூபன் உட்பட 11 பேர் கொண்ட திறமையாளர்(experts) குழுவை உருவாக்குகிறார் (Ocean's Eleven - படத்தின் தலைப்பு விளங்கிவிட்டதா?). குழுவில் இருப்பவர்கள்

லினஸ் கால்ட்வெல் (Linux Caldwell) - சிறந்த பிக்-பாக்கெட் (இவரது தந்தைவழி தொழில்!)
லிவ்விங்ஸ்டன் டெல் (Livingston Dell) - சிறந்த மின்னனு மற்றும் கணிப்பொறியாளர் (செக்யூரிட்டி கேமராக்களை சமாளிப்பதற்கும், அனைத்து நடவடிக்கைகளையும் கேமரா மூலம் கண்காணிக்கவும்)
பேஷர் தார் (Basher Tarr) - வெடிபொருள் Expert ஒரு கொள்ளைமுயற்ச்சியில் போலீசிடம் சிக்கிக்கொள்பவரை ரஸ்டி ரயன் காப்பாற்றி குழுவில் சேர்க்கிறார்.
விர்கில் மற்றும் டர்க் (Virgil & Turk Malloy) - இவர்கள் இருவரும் கார் ஓட்டும் திறமை படைத்தவர்கள்.
யென் (Yen) - சீன ஜிம்னாஸ்டிக் வீரன் (தற்போது சர்கஸ் செய்பவன்)
பிரான்க் (Frank) - பார் டென்டர்
சோல் (Saul) - வயதானவர் (நடிப்பில் சிறந்தவர்(?))

ஓஷன் தனது குழுவினருடன்

பெனிடிக்டிடம் இருப்பதைப்போலவே ஒரு போலி பெட்டகத்தை தயாரிக்கின்றனர். திட்டமும் வகுக்கப்படுகிறது. இதற்கு இடையே ஓஷனின் மனைவி டெஸ் (Tess) இப்போது பெனிடிக்டிடம் இருப்பது தான் ஓஷனின் இந்த திட்டத்திற்கு காரணம் என்பதும் இந்த திட்டத்தில் 150 மில்லியன் டாலரைவிட ஓஷன் தன் மனைவியை மீண்டும் பெற முயற்ச்சிப்பதும் ரயனுக்கு தெரிய கூட்டத்தில் குழப்பம் விளைகிறது.
ஓஷன் தனது மனைவியுடன்

இந்த குழப்பங்களையும், கடைசி நேர பிரச்சனைகளையும் மீறி இந்த திட்டத்தை இவர்கள் செயல்படுத்தினார்களா?? 150 மில்லியன் டாலர் கொள்ளையடிக்கப்பட்டதா?? ஓஷன் தன் மனைவியுடன் திரும்ப சேர்ந்தாரா?? என்பதை விருவிருப்பாக படம் கூறுகிறது.

படத்தின் சிறப்புகள்
  1. * நேர்த்தியான திரைக்கதை
  2. * அட்ரினலின் சுரபிகளுக்கு அதிக வேலை கொடுக்கும் கிளைமாக்ஸ்
  3. * ரூபன், Los Vegasல் அடிக்கப்பட்ட 3 சிறந்த கொள்ளை பற்றி கூறி கொள்ளையடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லும் விதம் அருமை
  4. * George Clooney ஓஷனாகவும், Brad Pitt ரஸ்டி ரயனாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு நல்ல திரைப்படம் Ocean's Eleven. Ocean's Twelve, Ocean's Thirteen எல்லாம் வந்துவிட்டது ஆனால் முதல் பாகம் அளவுக்கு நன்றாக இருக்குமா என தெரியாது. பார்த்துவிடடு கூறுகிறேன்.

1 மறுமொழிகள்:

ezhil arasu said...

35 வருடங்களுக்கு முன்னால் வந்த "7 times 7" எனும் வங்கிக் கொள்ளை ஆங்கிலப் படத்தை நினைவு படுத்து வது போல் உள்ளது.உங்கள் பதிவின் சுவையான நடைக்கு வாழ்த்துக்கள்.